Pages

Wednesday, August 29, 2012

ஏழை மாணவனின் படிப்பு!

crying child          

          நான் படிக்கும் நாட்களில் எல்லாமே ஆச்சர்யாமாக இருக்கும், நடந்து செல்லும் வழி, என்னை கடந்து செல்லும் மிதிவண்டி, அதிக சப்தத்துடன் வரும் மோட்டார் வாகனங்கள், என்னுடன் படிக்கும் சக மாணவர்களின் உடை,அவர்களின் பேனா, பென்சில், மாணவிகளின் ஜடை, அவர்கள் அலங்கரித்துக்கொண்டு வரும் உடை, எல்லாமே எனக்கு ஆச்சர்யம்தான் ஒரு நிமிடம் நின்று ஆச்சர்யாமாக பார்ப்பேன், ஆனால் அவர்களுக்கோ வானில் பறக்கும் வானவூர்தி, சாலைகளில் செல்லும் பேருந்து, சந்தைகளில் விற்கும் காய்கறிகள் என பெரிய பெரிய விஷயங்கள்தான் அதசியம், ஆசிரியர் அணிந்திருக்கும் மூக்கு கண்ணாடிக்கூட எனக்கு ஒரு பெரிய அதசியம்தான்.


எப்போதும் பள்ளிக்கு நடந்துதான் செல்வேன், ஐந்து மைல்கள் தூரம் இருக்கும் நான் படித்த அரசினர் மேல்நிலைப்பள்ளி, மிதிவண்டியில் போக ஆசைதான் ஆனால் அன்றுவரை மிதிவண்டிகூட ஓட்டத்தெரியாது எனக்கு, யாரவது உதவி செய்யமாட்டார்களா? என ஏங்கும் மனம், எல்லோருக்கும் அவசரம் எங்கேயோ ஓடிக்கொண்டிருப்பார்கள், போகும் வழியில் எல்லாம் யோசிப்பேன் எப்படியாவது அப்பாகிட்ட அழுது ஒரு மிதிவண்டி வாங்கி பழகி அதில்தான் இனி அடுத்தவாரம் முதல் பள்ளிக்கு போகணும் என்று நினைப்பேன். ஆனால் அது ஏனோ நடக்காமலே போனது, தினமும் என் கண்களுக்கு விருந்து இருக்கும், ஏனென்றால் எல்லாமே எனக்கு அதசியம்தானே?  தினமும் பார்த்த அதே சாலை,அதே மரங்கள்தான் ஆனால் எனக்கென்னவோ புதியதாக தோற்றம் அளிக்கும், இதோ நேற்று பார்த்த அதே மரம், ஆஹா! இதுவரை வந்துவிட்டோம் இன்னும் கொஞ்ச தூரம்தான், இன்னும் கொஞ்சம் தூரம்தான் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.

மாணவர்கள் எல்லோரும் வரிசையாக அமர்ந்தே சாப்பிடுவோம் நான் மட்டும் ஏனோ ஒரு கட்டைக்கு அருகில் கூனிக்குறுகி உட்க்கார்ந்து சாப்பிடுவேன் காரணம் எல்லோரும் கொண்டு வருவது நெல்லுசோறு நான் மட்டும் சோளசோறு புளிச்சக்கீரை , அல்லது கம்மங்க்கூழ், கேழ்வரகு கூழ், எப்பவும் ஏதாவது கீரையும், மோரும்தான்  கூட்டுவதற்கு இருக்கும். எப்பவும் அம்மாவுக்கும் எனக்கும் சண்டைதான் இன்னைக்காவது நெல்லுசோறு ஆக்கிகொடும்மா என்பேன், ஆனால் அம்மா என்னை கட்டியணைத்து ஒரு முத்தம் மட்டும் கொடுத்து சமாதான படுத்திவிடுவாள். மாதத்தில் ஒருநாள் நெல்லுசோறு அன்று மட்டும் எல்லோருடைய முன்னும் திரும்பி இருந்து சாப்பிடுவேன்.  மாணவர்கள் கூட்டத்தில் நான் மட்டும் தனியாகத் தெரிவேன், கிழிந்த கால்சட்டையும், அழுக்கு மேல்சட்டையும் அணிந்திருக்கும் ஒரே ஆள் நான்தான் தினம் தினம் துணி துவைக்காமல் இல்லை, சோப்பு வாங்க காசு இல்லை, ஒரே மேல்சட்டையும் ஒரு கால்சட்டையும் எத்தினை காலம்தான் கிழியாமலும், அழுக்காகாமலும் இருக்கும். மாலையிலும் நடந்துதான் போகவேண்டும், சீக்கிரம்போகவேண்டும் என்பதற்காக சில குறுக்கு காட்டுவழிப் பாதைகளை கண்டுபிடித்து வைத்திருந்தேன், சிலநாட்கள்   மழையில் நனைந்துகொண்டே போவேன் புத்தகம் நினைந்துபோகும் அதை நெருப்பில் காயவைப்பேன், தீ பட்டு சில இடம் கருகிபோகும், புத்தகத்துக்கு நடுவில் மயில் இறகு குட்டிபோடும் என வைத்திருந்தேன் அதுவும் குட்டிபோடாமலே நெருப்பில் பொசுங்கும், மேலும் சில காகித கப்பல்களும், காகித கேமராவும், கஷ்டப்பட்டு செய்து தொலைந்துபோகாமல் இருக்க புத்தகத்தின் நடுவில் பத்திரமாக வைத்திருந்தேன், எல்லாம் தவறிவிழுந்து தீயில் எரியும், ஐயோ இனி யாரிடம் கேட்டு இதுபோல் செய்வது என்று புரியாமல் தவிப்பேன்.

                                              

மழை மட்டுமெற்றால் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்திடுவேன், அதுவே காற்று மழை என்றால் என்ன செய்வேன், நான் ஒரு அடி முன்னாடி வைத்தால் என்னை பல அடிதூரத்தில் கொண்டித்தள்ளும் யாரும் இல்லாத காட்டுப்பாதையில் நான் மட்டும் அனாதையாக வாய்விட்டு அழுதிருக்கிறேன், அப்பா.......... அம்மா........... யாரவது வந்து என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கூப்பிட்டிருக்கேன் யாரும் இல்லாத இடத்தில் யார் வந்து காப்பாற்றுவார்கள், அப்படியே வேகமாக காற்றுமழை அடித்து முள்ளில் தள்ளிவிடும், அந்தமுள் மீதே கை வைத்து எழுந்து வந்து ரத்தம் வரும் இடங்களுக்கு எச்சில் மருந்து போடுவேன், காலில் செருப்பு இல்லையே கால் வைக்கும் இடமெல்லாம் முள் தைக்கும் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டே வீடுபோய் சேர முயற்சி செய்வேன். காற்று பலமாக அடிக்கும்போது ஏதாவது செடிகளை பிடித்து நிற்பேன், கொஞ்சம் நின்றதும் மீண்டும் தொடர்வேன் இருட்டுவதற்க்குள் வீடுபோய் சேரனும், இருட்டிவிட்டால் பயமா இருக்கும் அந்த பயத்தாலியே இந்த பயம் தெரிவதில்லை, எப்படியோ போராடி வீடுபோவேன் கடும் கோபமாக, அம்மா ஓடி வந்து ஐயா வந்துட்டியா சாமின்னு என்னை கட்டி அணைத்துகொள்வாள், நீ கொஞ்ச தூரம் வந்திருக்கலாமே என்று பிணங்குவேன், காட்டில் போட்டதெல்லாம் அப்படியே கிடந்ததே, வீட்டில் காயவைத்தவைகள் மழையில் நினையாமல் இருக்க அள்ளிகிட்டிருந்தேன் என்று தினம் ஒன்று சொல்வாள், ஆமாம் எங்கள் வீட்டில் எப்போதும் அப்படிதான் நான் வீட்டில் இருந்தால் கோழி, காக்கா ஓட்டவும், அதை அள்ளும்போது சாக்கு பிடிக்கவும் எனது உதவி தேவைப்படுமே, நானும் சமாதானமாகி சாப்பிடாமலே அசதியில் உறங்கிபோவேன்.

                                                          

http://img.webme.com/pic/t/tangallechildren/big-cry.jpgஅடுத்தநாள் காலை காலில் மண்ணும் சேறுமாக மிதித்துக்கொண்டு பள்ளிக்கு போகணும், காலெல்லாம் வலிக்கும் ஒருநாள் பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியர் அடிப்பார் அதற்கு பயந்துகிட்டே மறுக்காமல் பள்ளிக்கு போவேன், அப்பவும் அடிப்பார் நேற்று சொன்ன வீட்டு பாடங்கள் ஏன் செய்யவில்லை என்று, நான் அதற்கான காரணம் சொல்லமுயன்றாலும் அதை கேட்க்கும் நிலையில் அவரில்லை அதனாலேயே நான் காரணம் சொல்ல முயற்சி செய்வதேயில்லை, ஒருநாள் காற்று மழையில் சிக்கி வரும் வழியிலேயே  சப்பாத்தி முள்ளில் வீழ்ந்து விட்டேன் உடம்பெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் அந்தமுள் குத்தியிருந்தது, எங்கும் வலி மட்டும் தெரியும் ஆனால் முள் தெரியாது அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தேன் அப்பா ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் உட்க்கார்ந்து முள் புடுங்கினார்கள் ஒரு வாரம்வரை வலி குறையவில்லை, அன்று அப்பாவும் அம்மாவும் சொன்னார்கள் இனிமே நீ பள்ளிக்கூடம் போகவேண்டாம் என்று. வலி தீர்ந்ததும் மீண்டும் சொன்னார்கள் நீ போய் நல்லா படி சாமி! நீயும் எங்களை மாதிரி இந்த மண்ணை பிசஞ்சிகிட்டு கிடக்கவேணாம் என்பார்கள், பிறகு மீண்டும் பள்ளி செல்வேன் இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு படிக்கணும் என்று புலம்பிக்கொண்டே................                                                                                                                         

0 கருத்துகள்:

Post a Comment