Pages

Thursday, August 30, 2012

" என்ன வாழ்க்கைடா இது! " பாகம் 2


                நான் வந்துகொண்டிருந்தது விமானநிலையம் செல்லும் வழி சாலை, காலைநேரம் ஒன்பது மணி என்றால் சொல்லவே வேண்டாம், மிகவும் பரபரப்பான நேரம் வேலைக்கு வேக வேகமாக செல்கிறார்கள், விமானம் இரண்டு நிமிடத்து ஒன்று என கிழே இறங்கி கொண்டிருந்தது, ஒரு பக்கம் ஆம்புலன்ஸ் போய்கொண்டிருந்தது மனதுக்குள் தோன்றியது யாருக்கோ என்னவோ ஆகிவிட்டது என்று, பஸ், இருசக்கரவாகனங்கள் கார் என பலதும் அவரவர் வசதிக்கேற்ப விரட்டி கொண்டிருந்தார்கள்.இப்படி எதயாவது பார்த்து என் மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துக்கொள்ளலாம் என்று நினைத்து நினைத்து தோற்றேன்.

மீண்டும் எனது போன் ஒலிக்க, எடுத்தேன்...

ஹலோ...!!!

என்னங்க எப்படி இருக்கீங்க?

(ஆஹா! என்னவள் அவள் குரலை கேட்க்கும்போதே ஏனோ ஆயிரம் பட்டாம் பூச்சிகள் என் கண் முன்னே பறக்கும்)
ம்ம்ம்... இருக்கேன், நீ எப்படி இருக்க? சொல்லும்மா?

நான் நல்லாயிருக்கேங்க, அண்ணன் போன் செய்தார் அண்ணிக்கு  நாளைமறுநாள் வளைகாப்பு வச்சிருக்காங்கலாம், பையனுக்கு சனி ஞாயிறு விடுமுறை இருப்பதால் இன்னைக்கே வரச்சொல்கிறார், இன்று மாலை ஆபிசில் இருந்து வரும்போது அப்படியே இங்கு வருவாராம் எங்களையும் அழைத்துகொண்டு போக ... என்ன செய்யட்டும்.

சரிம்மா போய்ட்டு வாங்க... அப்படியே போகும்போது பேங்க்கும் போய்ட்டு போங்க, பணம் அனுப்பி இருக்கேன் எடுத்துகிட்டு போ... வரும்போது அப்பாவுக்கு தேவையான மருந்தும் வாங்கிட்டு வந்துடு,

சரிங்க, ஏங்க! உங்கள் குரல் என்னங்க ஒரு மாதிரியா இருக்கு? ஏன் உடம்பு சரியில்லையா?

(ஹா ஹா ஹா !!! பாருங்க இதுதான் என்னவள், என்னில் சிறிய மாற்றம் இருந்தாலும் உடனே கண்டுபிடித்துவிடுவாள், எப்படித்தான் முடியுதோ இவளுக்கு, பொய் சொன்னாலும், உண்மை சொன்னாலும் அவளுக்கு என் வார்த்தையிலையே தெரிந்துவிடும்)

ஒன்னும் இல்லைம்மா" நீங்க பார்த்து போய்ட்டு வாங்க...

சொல்லுங்க என்ன ஆச்சி? (கொஞ்சம் மிரட்டலாக...) நான் தினமும் பேசிக்கிட்டு இருக்கேனே எனக்கு தெரியாதா?

ம்ம்ம்... உன்கிட்டையா மறைக்க முடியும், எனக்கு ஒன்றும் இல்லைடா, எனது நண்பர் ராஜீவ்க்கு உடல்நிலை சரியில்லை (விபரங்கள் சொல்லி) இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கார், அங்கதான் போய்கிட்டிருக்கேன்.

அச்சோ! என்னங்க இப்படி திடீர்ன்னு, போய் பாருங்க..

ம்ம்ம்...

ஏங்க, அவருக்காவது, கூட கீதா இருந்ததால் உடனே தெரிந்து உங்களை கூப்பிட்டு ஆஸ்பத்ரிக்கு போயிட்டீங்க, உங்க கூட நான் இல்லைங்க எனக்கு பயமா இருக்கு, உங்களுக்கு ஒன்று என்றால் என்னால் நினைத்துகூட பார்க்க முடியவில்லை...

ஐயோ ...மண்டு மண்டு.. என்கூட நண்பர்கள் இருக்காங்க, பயப்படாதே! சரி நான் வைக்கிறேன்...

சரிங்க...

பை பை..

"என்ன வாழ்க்கைடா இது"
 
         எவ்ளோ அன்பான மனைவி, இவளை விட்டுவிட்டு ஏன் இப்படி தனியா கஷ்ட படனும், எல்லாத்துக்கும் பணம்தான், பணம் ...பணம்..பணம்.. எவன்டா கண்டுபிடிச்சான். கூடவே அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தால் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, அம்மாவும் இல்லை அவங்க எப்பவே சாமிகிட்ட போயிட்டாங்க, அவரை யாரும் பார்த்துகொள்வதில்லை, பாவம் அவருக்கு எழுந்திருக்கவே முடியாது கூப்பிட்ட குரலுக்கு யார் போவாங்க... அக்கா ஒரு நேரம் நல்லக்குணம் இருந்தால் பார்ப்பாங்க இல்லை என்றால் கேட்காதது போலவே இருப்பாங்க, இவள் ஊருக்கு போகும் இரண்டு நாள் என் அப்பாவுக்கு நரகம்தான். நாம் இப்போது அப்பாவை பார்க்க யோசித்தால் நாளை நமக்கும் வயசாகுமே?
      இதனால்தான் நான் ஒரு பக்கம், அவள் ஒரு பக்கம். இப்படிதான் எனது வாழ்க்கை போராட்டம். அங்கு வேலை கிடைத்தது போதுமான சம்பளம் இல்லை, இங்கு வேலை கிடைத்தது கூட மனைவி இல்லை, பணமா? பாசமா? என்று எடை போட்டு பார்த்தபோது ஏனோ எப்பவும் பணம்தான் வெற்றி பெறுகிறது. மிடில்கிளாஸ் குடும்பத்தில்.

இப்படி மனதில் புலம்பி கொண்டே... போய் சேர்ந்தேன்,

"கீதா.... என்ன ஆச்சி?

நாம இல்லாத நேரத்தில் குளுக்கோஸ் தீர்ந்து போனதுகூட தெரியாமல் போய்விட்டது, இவரும் அசந்து தூங்கிட்டாராம், அந்த நேரத்தில் டாக்டர் வந்து பார்த்துட்டு பயங்கரமா திட்டிட்டாங்கலாம் நர்ஸ் மேடம் சொன்னாங்க... என்னையும் திட்டினாங்க. இன்னும் சரியாகலையாம் ஏன் தனியா விட்டீங்கன்னு கோபமா பேசுறாங்க.

"ஐயோ! அப்பறம்... என்ன சொன்னாங்க?

ஆப்ரேஷன் செய்யணும் (சொல்லும்போது கண்ணீர் வார்த்தைகளுக்கு முன் வந்தது), என்று மட்டும் அந்த நர்ஸ் சொன்னாங்க.

சரி அழாதீங்க, வாங்க ராஜீவ போய் பார்ப்போம்.

அவரை இன்னும் அரைமணி நேரம் பார்க்க முடியாதாம், நான் வந்தது முதலா இங்கேதான் இருக்கேன் நர்ஸ் சொன்னதுதான் இதெல்லாம், எனக்கு பயமா இருக்கு அதான் உங்களுக்கு போன் போட்டு கூப்பிட்டேன்.

..............................
...................
(மௌனம்.... என்னால் ஒன்னுமே பேசமுடியவில்லை)

அஜய், இப்பவே மணி 10:30 ஆயிடுச்சி, தினேஷ்க்கு எக்ஸாம் என்பதால் 12:30 வந்துடுவான், வீட்டை பூட்டிவிட்டு வந்துட்டேன், அவன் எப்படி வருவான், அப்படியே வந்தாலும் வீட்டில் நான் இல்லாததால் பெல் அடித்து பார்த்துட்டு அழுவான் என்ன செய்வது, ஒண்ணுமே புரியவில்லை இவரை பார்ப்பதா? அவனை பார்ப்பதா? வார்த்தை நின்றது...
கண்ணீர் மட்டும் ...............ஒழுகியது.

நாம யாருக்கு என்ன பாவம் செய்தோம் கடவுள் இப்படி சோதிக்கிறானே என்ற புலம்பலோடு......பாவமாக எனது முகத்தை பார்த்தாங்க, முடியவில்லை, என்னால் அவங்க முகத்தை பார்க்கவே முடியவில்லை ..
இன்னும் நேரம் இருக்கு கொஞ்சம் பொறுமையா இருங்க கீதா, எல்லாம் சரியாகும் என்று சொல்லியும், ஏனோ அவங்களுக்கு பதட்டம் குறையவில்லை, அடிக்கடி நேரத்தை பார்த்துகொண்டிருந்தாங்க ...

வாழ்க்கையில... எது இல்லை என்றாலும் வாழ்ந்திடலாம், பணம் இல்லாமல் வாழவே முடியாது என்பதுபோல் ஆகிவிட்டது, ஒவ்வொரு மனிதனும் பலவற்றை இழப்பதும் இதே பணத்தால்தான், எல்லாவற்றையும் பெறுவதும் இதே பணத்தால்தான், பணத்தினால் நாம் படும் துயரங்களை யாரிடம் சொல்லி புரிய வைப்பது, இப்படி பணத்தின்மேல் வெறுப்பாகி இருந்த எனக்கு, மீண்டும் அதே பணத்தை தேடி ஓடவேண்டி வரும் என்று நான் நினைத்துகூட பார்க்கவில்லை.

         ஆம் ....ராஜீவ் அறை திறக்கப்பட்டது, டாக்டர் சொன்னார் மூச்சுவிடும் குழாயில் அடைப்பு உள்ளது(இன்னும் சில பிரட்சினைகளும்) உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று, எங்களை தனியாக கூப்பிட்டு கேட்டார் இங்கேயே செய்து கொள்கிறீர்களா? அல்லது ஊருக்கு போகிறீர்களா?  என்ன சொல்வதேன்றரியாமல் எவ்ளோ செலவாகும் என கேட்டேன் இந்த டாக்டர் மலையாளி என்பதால் எங்களுக்கு பேச வசதியாக இருந்தது, அவர் சொன்ன தொகையும் அதையும் கடந்து போகலாம் என்றார், என்னால் மட்டும் முடிவு சொல்ல முடியாது, அதேபோல் கீதாவுக்கும், கலந்து சொல்கிறோம் என்று பத்து நிமிடம் நேரம் கேட்டு சென்றேன் ராஜீவ் இடம்...

ராஜீவ பார்த்ததும் கீதா அழுகையை நிறுத்தமுடியவில்லை, ராஜீவ் இருந்த நிலை அப்படி, வாயு ஏற்றி கொண்டிருந்தார்கள், எனக்கும் ஏனோ அழுகை வர தொடங்கியது ... சமாளித்துக்கொண்டு ராஜீவிடம் விபரம் சொன்னேன், பணம் விபரம் எல்லாம் சொன்னதும் ஊருக்கு செல்வதாக முடிவு செய்தோம். டாக்டரிடம் சொல்லி அனுமதி பெற்றோம், இன்றோ அல்லது நாளையோ போகணும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து வரும் என்ற விபரமும் சொன்னார்.
 தினேஷ் வருவதற்கான நேரம் நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது, டிக்கெட் ஏற்ப்பாடு செய்யனும், யார் யார் போகணும் என்று முடிவு செய்யனும், தினேஷ்க்கு எக்ஸாம் இருக்கு... பணமோ இந்த மாத செலவிற்கு மட்டுமே உள்ளது. எதுக்குமே விடை தெரியவில்லை? போயேதான் ஆகணும் என்ற நிலைமை வந்ததும் நான் புறப்பட்டேன் தினேஷ் திரும்பி வரும் நேரம்... அவனை அழைக்க அவங்க வீட்டு சாவியோடு...

   ஏன் கல்யாணம் செய்துக்கணும்? ஏன் குழந்தை பெத்துக்கணும்? ஏன் இப்படியெல்லாம் கஷ்ட படனும்? கடைசியா எதுக்காக வாழனும் என்றுகூட கேள்வி எழுந்தது. என்ன வாழ்க்கை இது? நாம் பள்ளி செல்லும்போது தெரியவில்லை, கல்லூரி செல்லும்போதும் தெரியவில்லை, அம்மாவை திட்டி திட்டி சாப்பிட்டோம்,  சாப்பாடு சரியில்லை, இது நேற்று வைத்த சாம்பார், சூடு குறைவா இருக்கு என்றெல்லாம் சொன்னோம். அப்பாவிடம் அதட்டலாய் பீஸ் கட்டனும் பணம் கொடு என்றோம், கூடவே பாக்கெட் மணியும் அடம் பிடித்து கேட்டோம்,அப்போதெல்லாம் தெரியவில்லை அவர்கள் படும் கஷ்டம், இப்போதுதான் புரிந்தது அவர்கள் எல்லாம் தெய்வங்கள்,இப்படியே கண்ணீரோடும் கவலைகலோடும் கடந்து சென்றேன் பாதைகளை, அவர் வீட்டு அருகில் சென்றேன் தினேஷ் வாய்விட்டு அழுது கொண்டிருந்தான், என்னை கண்டதும்...

அங்கிள்.....................................ம்ம்ம்ம்ம்ம்ம் ...கதறி கதறி அழுதான், ரொம்ப நேரமா யாரும் கதவு திறக்கவில்லை, அம்மா எங்கே போனாங்க என்றே தெரியவில்லை என்று சொல்லி மீண்டும் அழுதான்.

அப்படியே தூக்கி கட்டிபிடித்து முத்தம் கொடுத்து, வா சொல்கிறேன் என்று சொல்லி சமாதான படுத்தி உடை மாற்றி புறப்பட்டோம், ஆஸ்பத்ரிக்கு, போகும் வழியில் அவனுக்கு சாப்பிட சில மிட்டாய் சிப்ஸ் மட்டும் வாங்கினோம்.

கீதாவிடம், தினேஷ ஒப்படைத்தேன், கீதா இன்னும் சாப்பிடக்கூட இல்லை, நானும்தான், சாப்பிட அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு ஒரு பார்சல் கீதாவுக்கும் வாங்கி வந்தேன்.
ராஜீவ் கம்பேனிக்கு போன் செய்து விபரம் சொன்னதும்,பத்துநாள் விடுமுறை கிடைத்தது.
டிக்கெட் வாங்கணும், பணம் ஏற்பாடு செய்யனும், முக்கியமான பெரும் பிரச்சினை யார் ராஜிவ்கூட போகணும், என்பதுதான். தினேஷ்க்கு எக்ஸாம் இருக்கு. அவரை மட்டும் அனுப்பிவிட்டுவிட்டு கீதாவால் தனியாக சமாதானமாக இருக்கமுடியாது. இப்ப யார்தான் போகணும்
நானா?
தினேஷா?
கீதாவா?

தொடரும்...............

" என்ன வாழ்க்கைடா இது!" பாகம் 1

                     
     " தனிமை..தனிமை ....ச்ச! என்ன வாழ்க்கைடா இது, பகலெல்லாம் வேலை மாலை வீடு வந்தால் என்னவோ எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல் வெறுமை, வாரத்தில் 4நாட்கள் கண் விழிக்கிறேன் சூரிய உதயத்திற்கு 2மணி நேரம் முன்பு, எல்லா நாளும் கண் அடைக்கிறேன் சூரிய மறைவின் 6மணி நேரத்திற்கு பின்பு, மீதமுள்ள மூன்று நாள் காலை 8மணிக்கு பின்பு...எதுக்கு எடுத்தாலும் பணம், எங்க போனாலும் பணம் ...........பணம் .பணம் பணம்.......யாரு சார் இந்த பணத்தை கண்டு பிடிச்சது! யாரென்று தெரிந்தால் என்னிடம் சொல்லுங்களேன், அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை.அவ்ளோ கோபம் சார் எனக்கு .....

என்னவோ தினம் தினம் நிம்மதியில்லாமல் பணத்திற்காக மட்டும் வேலை பார்க்கிறேன்,கொஞ்சம் மனதுக்கு நிம்மதியே மனைவியோடு பேசும்போது, நண்பர்களோடு பேசும்போது மட்டும்தான்.....அன்றும் அப்படிதான் நண்பர்களோடு பேசிவிட்டு இரவு 12மணிக்கு உறங்கினேன்.

இரவு 2:35 AM, இருக்கும், நல்ல தூக்கம் ........

"உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்...."     என்ற    

                        பாடல் ஒலித்தது, இது கனவா? நினைவா? புரியவில்லை, திரும்பி படுத்தேன் அப்பவும் ஒலித்தது, மெல்ல கண் திறக்க முயன்றேன், இமைகள் ஏனோ மறுத்தது பாடல் மீண்டும் ஒலிக்க கைகளால் அருகில் தடவி பார்த்தேன், இது கனவல்ல உண்மை எனது மொபைல் போன் ரிங்க்டோன்தான் அது, எடுத்தேன், பழக்கப்பட்ட போன்தானே அதனால் கண் திறக்காமலே ஆன் செய்தேன்,
"ஹலோ......

"அஜய்!  ....................அஜய்!.....
...............சீக்கிரம் வா, சீக்கிரம் வா........

"என்ன? என்ன ஆச்சி?....

அவருக்கு என்னவோ ஆயிடுச்சி, சீக்கிரம் வா..............சீக்கிரம் வண்டியும் கொண்டு வா............

இதோ உடனே வரேன்.....எதுவும் புரியவில்லை, என்ன செய்வதென்றே தெரியவில்லை, சாவி எங்கே? பேண்ட் எங்கே? தேடினேன்...ஓடினேன்..
அடுத்த மூன்றாவது நிமிடம் அவர்வீட்டு முன், கதவு திறந்தே கிடந்தது என் வரவை எதிர்பார்த்து ..உள்ளே சென்றேன் ஒரே அழுகை சப்தம் மட்டும் கேட்க, நானும் அலறிவிட்டேன்.

வாய் மட்டும் திறந்த நிலையில், சுவாசம் விடமுடியாமல் நெஞ்சு மட்டும் துடித்துகொண்டிருந்தது, அருகில் உதவி செய்யகூட யாரும் இல்லை, எப்படி தூக்குவது  வண்டிவரை கொண்டு செல்லனுமே? அவங்களோ செய்வதறியாமல் எதையோ எடுத்து எங்கயோ போட்டும், எனது எண்ணுக்கு பதிலாக யார் யாருக்கோ போன் செய்தும், பைத்தியம் பிடித்து கண்ணீர் மட்டும் சரியாக ஒழுக நிக்கிறார்...
அஜய்...அஜய்.. நான் என்ன செய்வேன் ஆஸ்பத்ரிக்கு போகனும் , எங்க போகனும் எப்படி போகனும் ஒன்னும் புரியவில்லை,
இங்கு என்ன நடக்கிறது எதுவும் அறியாமல் உறங்கும் எட்டுவயது குழந்தை தினேஷ், ஐயோ அவனை எப்படி எழுப்புவது, அவனை தூக்குவதா? அவரை தூக்க உதவி செய்வதா? என்று புரியாமல் தவிக்கும் கீதா.

அவரை நான் தூக்க, அவனை அவங்க தூக்க, அவசரத்தில் எதுவும் எடுக்காமல் ஓடினோம் ...வண்டியில் படுக்க வைத்துவிட்டு நான் வண்டியை விரட்டினேன், ஓரு பக்கம் மகனை தூக்கத்தில் விழாமல் பிடித்தும், கணவனுக்கு என்ன ஆச்சோ? எதுவும் ஆகக்கூடாது என்று எல்லா தெய்வத்தையும் வேண்டியும், அனைத்துபிடித்து அடிக்கடி மூக்கில் கை வைத்து பார்த்தும் சீக்கிரம் போங்க .........சீக்கிரம் போ.........என்று பதட்டத்தில் வார்த்தைகளை வீசியும் .......

"என்ன வாழ்க்கைடா இது!
               கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கு ஒன்று என்றால் ஒரு குடும்பமே துடிக்கும், தூக்க பலபேர், துணிவு சொல்ல பலர்,அந்த ஆஸ்பத்திரிக்கு போகலாம், இங்க போகலாம், ஒன்னும் ஆகாது யாரும் அழாதிங்க, நீங்க முன்னாடி வண்டியில போங்க நான் பின்னாலே வண்டியில் வருகிறேன், சரி சரி போங்க நான் மெஷினில் பணம் எடுத்துகிட்டு வருகிறேன், இப்படி பலரும் பகிர்ந்துகொண்ட காலம் எங்கேபோச்சி?
              குறைந்தது மாமனார் மாமியார் இருந்தால்கூட, நீங்க குழந்தைய பார்த்துக்கோங்க அத்தை, நானும் மாமாவும் கூட போறோம் போய்ட்டு போன் செய்கிறோம், என்று சொல்லும் காலம் எங்கே?
             ஒருவருக்கு ஒன்று என்றால், பக்கத்துவீடு அடுத்தவீடு என்று அலறலில் ஊரே ஒன்றுகூடி உதவிசெய்யும் கூட்டம் எங்கே?"

"பணத்தால் கூட்டுகுடும்பத்தை இழந்தோம், அதே பணத்துக்காக பெற்றோரையும் மறந்தோம்...இப்போ அந்த பணமும் இல்லாமல், சொந்தபந்தம் எதுவும் இல்லாமல் நிக்கிறோமே அனாதையாக "
         
இப்பவாவது உணர்வோமே நாம் செய்தது தவறு என்று...........(தவறு என்று உணர்ந்தாலும் சிலர்மனசு ஏனோ ஒப்புக்கொள்வதில்லை)

இப்படி எனக்குள் நினைவுகள் பல ஓட, வண்டி சென்று நின்றது அவசர சிகிச்சைபிரிவில், அவசர அவசரமாக அவரை தள்ளு வண்டி உதவியோடு உள்ளே அழைத்து சென்றோம். நமக்குதான் அவசரமே தவிற அவர்களுக்கு எந்த அவசரமும் இல்லை...

ஏன்? என்ன ஆச்சி?

ஒன்னும் தெரியலைங்க... திடீர் என்று மூச்சு திணறியது அரை மணி நேரமா மூச்சும் பேச்சும் இல்லை எனக்கு பயமா இருக்கு ஏதாவது செய்யுங்க,

சரி இங்க வாங்க, இந்த பாரத்தை பூர்த்தி செய்து கொடுங்க? அவர் அடையாள அட்டை ஏதாவது கொடுங்க?

"கீதா என்னை பார்த்தாங்க, நானே எல்லாத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தேன்,
பிறகு, இரத்தம், யூரின் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துக்கொண்டே இரவு என்ன சாப்பிட்டாங்க?

சப்பாத்திங்க...

பல்ஸ் ரொம்ப குறைவா இருக்கு, நீங்க கொஞ்சநேரம் இங்கேயே இருங்க என்று சொல்லிவிட்டு அவரைமட்டும் உள்ளே அழைத்து சென்றார்கள். நாங்கள் மூவரும் காத்திருந்தோம் மருத்துவரின் பதிலுக்காக... கதவு திறக்கும் ஒவ்வொரு முறையும் எங்களுக்குதான் செய்தி வருகிறது என்று எதிர்பார்த்தோம், என்ன சோதனையோ வெகுநேரம் ஆனது,

" மனித வாழ்வில் எதுவுமே நிரந்தரம் இல்லாததவை, ஒன்னு இருந்தா ஒன்னு இருக்காது, எல்லாமே பற்றாகுறை, ஆபத்துவரும் நேரத்தில் ஏனோ கடவுளை மட்டும் நம்புகிறோம், எதுவாக இருந்தாலும் அவன் செயல் என்று சொல்லமட்டும் தயக்கம் என்பதே இல்லை, வாழ்க்கை என்றால் இப்படிதான் கஷ்டம் நஷ்டம் எல்லாம் இருக்கும் என்று மனதை தேற்றி கொண்டாலும், கணவன் இழப்பு என்பதைமட்டும் நினைத்துகூட பார்க்கமுடியாதவை எல்லா பெண்களுக்கும், இப்படி நினைத்து நினைத்துதான் விடாது கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறாங்க கீதா...எனக்கோ ஆறுதல் சொல்லக்கூட முடியவில்லை, நண்பனுக்கு என்ன ஆனதோ என்ற பதட்டம் என்னை உருக்கிகொண்டு இருந்தது,

எங்களுக்கான கதவு அப்போதுதான் திறந்தது, ராஜீவ்வோட வந்தவங்க யாருங்க?

எஸ்.....எஸ்....நாங்கதான், இப்ப எப்படி இருக்கு?

ம்ம்ம்ம்.... பரவாயில்லை, சத்தமில்லாமல் வந்து பாருங்க..

கீதா மகனையும் மறந்து ஓடிய ஓட்டம் அறை எண் என்ன என்றுகூட கேட்க்காமல் ஓடினாங்க...ஓடியவேகம் திரும்பவும் வந்தாங்க ...அறை எண் என்ன? எப்படியே போகனும்? நர்ஸ் சொல்ல மறுபடியும் ஓட்டம். நான் உறங்கிகொண்டிருந்த குழந்தையை தூக்கிகொண்டு பின்தொடர்ந்தேன்... ராஜ்வ் நினைவோடு இருப்பதை பார்த்தபிறகுதான் எனக்குள் நல்லதொரு தென்றல் வீசியதுபோல் ஒரு உணர்வு, அருகில் சென்றேன், குளுக்கோஸ் ஏற்றியபடி இருந்தார் மெல்லியதாக கீதாவிடம் பேசினார் எனக்கு ஒன்னும் இல்லை பயப்படாதே என்றார், அவர்கள் கண்களாலும் மனதாலும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் கண்டவாறு பேசிகொண்டார்கள் என்னவோ ஒரு அற்புதம் நடந்துவிட்டது, கேட்டநேரத்திலும் ஒரு நல்லநேரம் எப்படியோ உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. என்பதையறிந்து சுவாசம் விட்டனர்...

அஜய் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்?

ம்ம்ம் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யனும்.

ஐயோ! அப்போ எனக்கு கையும் ஓடல..காலும் ஓடல.. உங்கள் உயிருக்கு ஏதாவது ஆயிருந்தால் என்ன செய்திருப்பேன்?

ம்ம்ம்ம் இப்படி தைரியம் இல்லாதவள திருமணம் செய்துகொண்ட என்னை செருப்பாலையே அடிக்கணும்...

இப்படியாக வார்த்தைகள் நீல ...இடையில் நான் குறுக்கிட்டு உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்துங்க, இது ஆஸ்பத்திரி வீட்டில் போய் ஒரு நல்ல முடிவு செய்யலாம். சரியாக நாலு மணி எனக்கு வேலைக்கு போகவேண்டிய நேரம் வந்துவிட்டது, இன்று போயிதான் ஆகணும் முக்கியமான வேலை இருந்தது, ராஜீவ் நான் வேலைக்கு போய்ட்டு வரட்டுமா?

ம்ம்ம் சரி அஜய், போய்ட்டு வாங்க எனக்கு ஒன்றும் இல்லை நீங்க தைரியமா போய்ட்டு வாங்க?

என்னங்க, தினேஷ்க்கு இன்னைக்கு எக்ஸாம் இருக்கு அவனையும் ஸ்கூல் அனுப்பனும்....

சரி நீயும் கிளம்பு..அஜய் இவளை அப்படியே வீட்டில் விட்டுவிட்டு போ...

நீ மட்டும் தனியா எப்படி இருப்ப ராஜீவ்?

என்ன செய்ய நீங்களும் வேலைக்கு போகணும், தினேஷ்க்கும் எக்ஸாம் இருக்கு, அவனை அனுப்பி வைத்துவிட்டு கீதா டேக்ஸ்சி பிடிச்சி இங்க வந்துடுவா, நீங்களும் வேலை முடித்துவிட்டு வாங்க எப்ப போக சொல்றாங்களோ தெரியவில்லை, எல்லாம் நம் விதி என்று நினைத்துகொள்வோம். நீங்க போய்ட்டு வாங்க...

சரியென்று நான் புறப்பட போகும் வழியில் கீதாவையும், தினேஷையும் வீட்டில் விட்டுவிட்டு, நான் எனது அறைக்கு சென்று முகம் மட்டும் கழுவி உடைமாற்றி வேலைக்கு சென்றேன்.

"என்ன வாழ்க்கைடா இது!"

    தன் கனவனை கூட இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லை மனைவிக்கு, ஒரு நண்பனை கூட இருந்து பார்த்துகொள்ளமுடியவில்லை நண்பனுக்கு, இப்படி வேகமாக ஓடும் வாழ்க்கையில் நாம் எப்படித்தான் பொழைப்பது, எதை இழப்பது, எதை அடைவது என்று புரியாது எனது வண்டி சென்றது வேலை செய்யும் இடம்வரை...

நாங்கள் யாரும் இல்லாத நேரத்தில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ தெரியவில்லை, கீதா அங்கு சென்றபிறகுதான் அவங்களுக்கே தெரிந்திருக்கிறது...
எனக்கு கீதா போனில் இருந்து ....

மீண்டும்.....
"உன் பேரை சொல்லும்போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
  உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்,
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ......
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ........
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்.... பாடல் ஒலித்தது....


தொடரும்...........................

Wednesday, August 29, 2012

ஏழை மாணவனின் படிப்பு!

crying child          

          நான் படிக்கும் நாட்களில் எல்லாமே ஆச்சர்யாமாக இருக்கும், நடந்து செல்லும் வழி, என்னை கடந்து செல்லும் மிதிவண்டி, அதிக சப்தத்துடன் வரும் மோட்டார் வாகனங்கள், என்னுடன் படிக்கும் சக மாணவர்களின் உடை,அவர்களின் பேனா, பென்சில், மாணவிகளின் ஜடை, அவர்கள் அலங்கரித்துக்கொண்டு வரும் உடை, எல்லாமே எனக்கு ஆச்சர்யம்தான் ஒரு நிமிடம் நின்று ஆச்சர்யாமாக பார்ப்பேன், ஆனால் அவர்களுக்கோ வானில் பறக்கும் வானவூர்தி, சாலைகளில் செல்லும் பேருந்து, சந்தைகளில் விற்கும் காய்கறிகள் என பெரிய பெரிய விஷயங்கள்தான் அதசியம், ஆசிரியர் அணிந்திருக்கும் மூக்கு கண்ணாடிக்கூட எனக்கு ஒரு பெரிய அதசியம்தான்.


எப்போதும் பள்ளிக்கு நடந்துதான் செல்வேன், ஐந்து மைல்கள் தூரம் இருக்கும் நான் படித்த அரசினர் மேல்நிலைப்பள்ளி, மிதிவண்டியில் போக ஆசைதான் ஆனால் அன்றுவரை மிதிவண்டிகூட ஓட்டத்தெரியாது எனக்கு, யாரவது உதவி செய்யமாட்டார்களா? என ஏங்கும் மனம், எல்லோருக்கும் அவசரம் எங்கேயோ ஓடிக்கொண்டிருப்பார்கள், போகும் வழியில் எல்லாம் யோசிப்பேன் எப்படியாவது அப்பாகிட்ட அழுது ஒரு மிதிவண்டி வாங்கி பழகி அதில்தான் இனி அடுத்தவாரம் முதல் பள்ளிக்கு போகணும் என்று நினைப்பேன். ஆனால் அது ஏனோ நடக்காமலே போனது, தினமும் என் கண்களுக்கு விருந்து இருக்கும், ஏனென்றால் எல்லாமே எனக்கு அதசியம்தானே?  தினமும் பார்த்த அதே சாலை,அதே மரங்கள்தான் ஆனால் எனக்கென்னவோ புதியதாக தோற்றம் அளிக்கும், இதோ நேற்று பார்த்த அதே மரம், ஆஹா! இதுவரை வந்துவிட்டோம் இன்னும் கொஞ்ச தூரம்தான், இன்னும் கொஞ்சம் தூரம்தான் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன்.

மாணவர்கள் எல்லோரும் வரிசையாக அமர்ந்தே சாப்பிடுவோம் நான் மட்டும் ஏனோ ஒரு கட்டைக்கு அருகில் கூனிக்குறுகி உட்க்கார்ந்து சாப்பிடுவேன் காரணம் எல்லோரும் கொண்டு வருவது நெல்லுசோறு நான் மட்டும் சோளசோறு புளிச்சக்கீரை , அல்லது கம்மங்க்கூழ், கேழ்வரகு கூழ், எப்பவும் ஏதாவது கீரையும், மோரும்தான்  கூட்டுவதற்கு இருக்கும். எப்பவும் அம்மாவுக்கும் எனக்கும் சண்டைதான் இன்னைக்காவது நெல்லுசோறு ஆக்கிகொடும்மா என்பேன், ஆனால் அம்மா என்னை கட்டியணைத்து ஒரு முத்தம் மட்டும் கொடுத்து சமாதான படுத்திவிடுவாள். மாதத்தில் ஒருநாள் நெல்லுசோறு அன்று மட்டும் எல்லோருடைய முன்னும் திரும்பி இருந்து சாப்பிடுவேன்.  மாணவர்கள் கூட்டத்தில் நான் மட்டும் தனியாகத் தெரிவேன், கிழிந்த கால்சட்டையும், அழுக்கு மேல்சட்டையும் அணிந்திருக்கும் ஒரே ஆள் நான்தான் தினம் தினம் துணி துவைக்காமல் இல்லை, சோப்பு வாங்க காசு இல்லை, ஒரே மேல்சட்டையும் ஒரு கால்சட்டையும் எத்தினை காலம்தான் கிழியாமலும், அழுக்காகாமலும் இருக்கும். மாலையிலும் நடந்துதான் போகவேண்டும், சீக்கிரம்போகவேண்டும் என்பதற்காக சில குறுக்கு காட்டுவழிப் பாதைகளை கண்டுபிடித்து வைத்திருந்தேன், சிலநாட்கள்   மழையில் நனைந்துகொண்டே போவேன் புத்தகம் நினைந்துபோகும் அதை நெருப்பில் காயவைப்பேன், தீ பட்டு சில இடம் கருகிபோகும், புத்தகத்துக்கு நடுவில் மயில் இறகு குட்டிபோடும் என வைத்திருந்தேன் அதுவும் குட்டிபோடாமலே நெருப்பில் பொசுங்கும், மேலும் சில காகித கப்பல்களும், காகித கேமராவும், கஷ்டப்பட்டு செய்து தொலைந்துபோகாமல் இருக்க புத்தகத்தின் நடுவில் பத்திரமாக வைத்திருந்தேன், எல்லாம் தவறிவிழுந்து தீயில் எரியும், ஐயோ இனி யாரிடம் கேட்டு இதுபோல் செய்வது என்று புரியாமல் தவிப்பேன்.

                                              

மழை மட்டுமெற்றால் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்திடுவேன், அதுவே காற்று மழை என்றால் என்ன செய்வேன், நான் ஒரு அடி முன்னாடி வைத்தால் என்னை பல அடிதூரத்தில் கொண்டித்தள்ளும் யாரும் இல்லாத காட்டுப்பாதையில் நான் மட்டும் அனாதையாக வாய்விட்டு அழுதிருக்கிறேன், அப்பா.......... அம்மா........... யாரவது வந்து என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கூப்பிட்டிருக்கேன் யாரும் இல்லாத இடத்தில் யார் வந்து காப்பாற்றுவார்கள், அப்படியே வேகமாக காற்றுமழை அடித்து முள்ளில் தள்ளிவிடும், அந்தமுள் மீதே கை வைத்து எழுந்து வந்து ரத்தம் வரும் இடங்களுக்கு எச்சில் மருந்து போடுவேன், காலில் செருப்பு இல்லையே கால் வைக்கும் இடமெல்லாம் முள் தைக்கும் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டே வீடுபோய் சேர முயற்சி செய்வேன். காற்று பலமாக அடிக்கும்போது ஏதாவது செடிகளை பிடித்து நிற்பேன், கொஞ்சம் நின்றதும் மீண்டும் தொடர்வேன் இருட்டுவதற்க்குள் வீடுபோய் சேரனும், இருட்டிவிட்டால் பயமா இருக்கும் அந்த பயத்தாலியே இந்த பயம் தெரிவதில்லை, எப்படியோ போராடி வீடுபோவேன் கடும் கோபமாக, அம்மா ஓடி வந்து ஐயா வந்துட்டியா சாமின்னு என்னை கட்டி அணைத்துகொள்வாள், நீ கொஞ்ச தூரம் வந்திருக்கலாமே என்று பிணங்குவேன், காட்டில் போட்டதெல்லாம் அப்படியே கிடந்ததே, வீட்டில் காயவைத்தவைகள் மழையில் நினையாமல் இருக்க அள்ளிகிட்டிருந்தேன் என்று தினம் ஒன்று சொல்வாள், ஆமாம் எங்கள் வீட்டில் எப்போதும் அப்படிதான் நான் வீட்டில் இருந்தால் கோழி, காக்கா ஓட்டவும், அதை அள்ளும்போது சாக்கு பிடிக்கவும் எனது உதவி தேவைப்படுமே, நானும் சமாதானமாகி சாப்பிடாமலே அசதியில் உறங்கிபோவேன்.

                                                          

http://img.webme.com/pic/t/tangallechildren/big-cry.jpgஅடுத்தநாள் காலை காலில் மண்ணும் சேறுமாக மிதித்துக்கொண்டு பள்ளிக்கு போகணும், காலெல்லாம் வலிக்கும் ஒருநாள் பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியர் அடிப்பார் அதற்கு பயந்துகிட்டே மறுக்காமல் பள்ளிக்கு போவேன், அப்பவும் அடிப்பார் நேற்று சொன்ன வீட்டு பாடங்கள் ஏன் செய்யவில்லை என்று, நான் அதற்கான காரணம் சொல்லமுயன்றாலும் அதை கேட்க்கும் நிலையில் அவரில்லை அதனாலேயே நான் காரணம் சொல்ல முயற்சி செய்வதேயில்லை, ஒருநாள் காற்று மழையில் சிக்கி வரும் வழியிலேயே  சப்பாத்தி முள்ளில் வீழ்ந்து விட்டேன் உடம்பெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் அந்தமுள் குத்தியிருந்தது, எங்கும் வலி மட்டும் தெரியும் ஆனால் முள் தெரியாது அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தேன் அப்பா ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் உட்க்கார்ந்து முள் புடுங்கினார்கள் ஒரு வாரம்வரை வலி குறையவில்லை, அன்று அப்பாவும் அம்மாவும் சொன்னார்கள் இனிமே நீ பள்ளிக்கூடம் போகவேண்டாம் என்று. வலி தீர்ந்ததும் மீண்டும் சொன்னார்கள் நீ போய் நல்லா படி சாமி! நீயும் எங்களை மாதிரி இந்த மண்ணை பிசஞ்சிகிட்டு கிடக்கவேணாம் என்பார்கள், பிறகு மீண்டும் பள்ளி செல்வேன் இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு படிக்கணும் என்று புலம்பிக்கொண்டே................