Pages

Wednesday, November 28, 2012

Team Viewer மென்பொருள் மிகவும் பயனுள்ளவை!

           Team Viewer (Remote Control) மென்பொருளை யார் யாரெல்லாம் பயன்படுத்தி வருகிறீர்கள்? மிகவும் பயனுள்ளதாகக் கருதுகிறேன். உங்களிடமும் பகிர்கிறேன்.

      இந்த மென்பொருளைக் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோல் பல மென்பொருட்கள் இருந்தாலும், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் இருக்கும் கணினியை எளியவகையில் சிக்கலின்றி கட்டுபடுத்த இதுவே சிறப்பான மென்பொருளாகும். தெரியாத சிலருக்காகவும் எனது நண்பரின் வேண்டுகோலுக்காகவும் இந்த பதிவை இங்கு மிகத் தெளிவாகப் பகிர்கிறேன். 
                   இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது, புதிய 'வெர்சன்' தேவைபட்டால் மட்டும் பணம் செலுத்தவேண்டும்.

          இந்த  மென்பொருள் விண்டோஸ், ஆப்பிள் மேக், லினக்ஸ், ஆன்ட்ராய்டு, ஐ-போன், என அனைத்து இயங்குதளத்திலும்  இயங்கக்கூடியவை. 'இன்டர்நெட் இணைப்பு' இருந்தால் ஓரிரு வினாடியில் எந்த கணினியையும் நாம் இருக்கிற இடத்தில் இருந்து இந்த 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் கட்டுப்படுத்தமுடியும்.

       இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி., இணையதள முகவரிக்கு
தரவிறக்கம் செய்து, கணினியில் பொருத்திக்கொள்ளவும்.அதனை கிளிக் செய்தால் கீழேயுள்ள விண்டோ கணினியில் தோன்றும்.
      எதிர்முனையில் இருப்பவரின் ID நம்பரை இங்கு பதியவும், அல்லது உங்களது கணினியை எதிமுனையில் இருப்பவர் இயக்கவேண்டும் என்றால் உங்களுடைய ID நம்பரை அவரிடம் கொடுக்கவும் Connect to Partner என்பதை தேர்வு செய்ய கீழே உள்ள விண்டோ தோன்றும்.
     இதில் Password கொடுக்கவும், அதாவது Partner ன் Password கொடுக்கவும். அவ்ளவுதான் இப்போது உங்களது பார்ட்னரின் கணினியை நீங்கள் இயக்கலாம்.
 
        இப்போது  Team Viewer 7 இலவசமாக கிடைக்கும். இதில் 25 பேர்வரை இணைந்து ஒருவர் கணினியை ஒருவர் இயக்கலாம். இப்போதெல்லாம் பெரிய பெரிய கம்பேனியில் இந்த முறையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மேலும் பெண்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளையும் செய்யமுயத்கிறது. நிறைய வேலைப்பளுவைக் குறைக்கிறது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்களேன்.

இதன் பயன்கள்:
 • Online Meetings – have up to 25 participants 
 • Online Presentation – boost your sales potential   
 • Training Session – cut costs by conducting training online  
 • Online Teamwork – collaborate online on documents in real-time 
 *****நன்றி நண்பர்களே! மீண்டும் அடுத்தப் பதிவில்சந்திப்போம்.*****
=====================================================================================


Tuesday, November 27, 2012

சாம்பார் வைப்பது ரொம்ப ரொம்ப ஈஸி!

                  அட! ஆமாங்க சாம்பார் வைப்பது ரொம்ப ரொம்ப ஈஸி! நமக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான சாம்பார் ரொம்ப ஈஸியாக வைக்கலாம். அதிகம் எண்ணெய் சேர்க்காமலும், நேரத்தை மிச்சப்படுத்தியும் ஆரோக்கியமான சாம்பார் வைக்கலாம்.
              இதை  பெண்கள் மட்டும் இல்லைங்க ஆண்களும் வைக்கலாம், யாரோ! என்னை மனத்துக்குள் திட்டுவது இங்குவரை கேட்கிறது.

              சரி  வாங்க எப்படி வைப்பதென்று பார்ப்போம். இதுக்கு முக்கியமா குக்கர் இருக்கவேண்டும்.


தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 100-150 கிராம்.
பெரிய வெங்காயம் - இரண்டு.
சின்ன வெங்காயம் - பத்து
பச்சைமிளகாய் - மூன்று.
புளி - எலுமிச்சம்பழம் அளவு, அல்லது  ஒரு எலுமிச்சம்பழம் இரண்டு.
கடுகு  உளுத்தம்பருப்பு - ஒரு சிட்டிகை.
சின்னச்சீரகம் - ஒரு சிட்டிகை.
பெருங்காயத்தூள் - சிறிதளவு.
காய்ந்த மிளகாய் - இரண்டு.
வெந்தயம் - சிறிதளவு.
மஞ்சள்த்தூள் - சிறிதளவு.
எண்ணெய்  - தாளிப்பதற்கு மட்டும்.
சாம்பார் பொடி - 50 கிராம் (ஈஸ்டர்ன் சாம்பார் பவுடர் கடையில் கிடைக்கும்)
உப்பு தேவைக்கேற்ப, கருவேப்பிலையும், மல்லியிலையும்கொஞ்சம்.
(இவைகள் அனைத்தும் எப்பவும் சமையல் அறையில் இருக்கும்.)

காய்கறிகள்:

உருளைக்கிழங்கு  - ஒன்று.
கேரட்  - ஒன்று.
முருங்கைக்காய் - இரண்டு.
பச்சைக் கத்தரிக்காய் - ஒன்று
வெண்டைக்காய் - ஆறு.
கொவ்வைக்காய் - ஆறு.
பீன்ஸ் - ஆறு.
சேனைக்கிழங்கு  - ஒருமுறி

(இவைகளை எல்லாம் தனித்தனியாக வாங்க முடியவில்லை என்றால் வாடிக்கையான கடைகளில் கேட்டு வாங்கவும், அவர்கள் அது அதிலும் இரண்டிரண்டு காய்களைச் சேர்த்து ஒரு கிலோவுக்கு கொடுப்பார்கள். நான் அப்படிதான் வாங்குகிறேன்.)

இந்த காய்கள் எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்கு: படங்கள். யாரோ சிரிக்கிராங்களே! சபாஷ்! சமைக்கும்போது சிரிப்பு முக்கியம்தான், அப்போதுதான் நாம் செய்யும் வேலையை முழுமனதோடு செய்யமுடியும்.


இந்த காய்கள் எல்லாமே கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததில் குறைந்தது நான்கு பச்சைக் காய்களும், ஒரு கிழங்கு வகையும் எடுத்துக்கொள்ளவும்.
 (அல்லது)
 உங்களுக்கு பிடித்த நான்கு அல்லது ஐந்து காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

செய்முறை:

         முதலில் துவரம்பருப்பை நன்றாகக் கழுவி, குக்கரில் பாதி அளவுக்கு தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்கவும், தண்ணீர் சூடாவதற்குள் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பெரிய பெரிய அளவில் வெட்டு குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைக்கவும்.

         பருப்பு வெந்து தயாராகும் வரை காத்திருக்க வேண்டாம், காய்களை வெட்டி தயார் நிலையில் வைக்கவும் (காய்களை எப்பவும் சிறிது சிறிதாக வெட்டக்கூடாது, பெரியதாகவே இருக்கவேண்டும் (உதாரணத்துக்கு வெண்டைக்காயை அடியையும், நுனியையும் நீக்கிவிட்டு இரண்டாக வெட்டினாலே போதும்) குக்கர் இரண்டு 'விசில்' அடித்ததும் அடுப்பை அனைத்துவிடவும்.  
                          இப்போது  குக்கரை திறந்து, வெந்திருக்கும் பருப்புடன் வெட்டி வைத்திருக்கும் காய்களையும் சேர்க்கவும். அதோடு தேவையான உப்பு, சாம்பார் மசாலாவையும், சிறிது பெருங்காயத்தூளையும் சேர்த்து மூடி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.சிறிய தீயில் வேகவைக்கவும். ஒரு 'விசில்' அடித்ததும் அடுப்பை நிறுத்திவிடவும். 

              காய்கள்  எப்பவும், அரை, அல்லது முக்கால் அளவுக்கு வெந்திருந்தாலே போதும் அப்போதுதான் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். அதனால் அரைப்பதம் வெந்தால் போதும் என்பவர்கள் உடனே திறக்கவும், முக்கால் பாகம் வேகவேண்டும் என்பவர்கள், இரண்டு நிமிடத்திற்கு பிறகு திறக்கவும். 

{குக்கரை திறக்கும்போது  கவனம் தேவை: உடனே திறக்கவேண்டுமானால்? குக்கரின் மேல் தண்ணீர் "டேப்" திறந்துவிடலாம், அதன் "பிரஷர்" குறைந்ததும் பாதுகாப்பாக திறக்கமுடியும், அதேபோல்தான் இரண்டு நிமிடம் கழித்து திறக்கவேண்டும் என்றாலும் "பிரஷர்" குறையவில்லை என்றால் அதன்மேல் தண்ணீர் "டேப்" திறந்துவிட்டால் போதும்.

நான் இப்படிதான் செய்கிறேன். காரணம் நேரத்தை மிச்சம் பண்ணவேண்டாமா? தண்ணீர் திறந்துவிட்டால் மேலும் பாதுகாப்பு அதிகம் என்பதால்தான்.

குக்கரிலிருந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

தாளிப்பதற்கு:

       சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணலில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அடுப்பில் சிறிய தீயில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போடவும், பொரிந்ததும்  வெந்தயம் ,சின்னசீரகம், காய்ந்தமிளகாய் இவற்றையும் சேர்க்கவும் பொன்னிறமாக வந்ததும், கருவேப்பிலை சேர்த்து இறக்கிவிடவும். அதை சாம்பாரில் சேர்க்கவும்.  

*****இவ்ளோதாங்க சுவையான சாம்பார் தயார்.***** 

குறிப்பு:
 •            சோறு, இட்லி, சப்பாத்தி, இதனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காய்கறிகளில்தான் குழந்தைகளுக்கான அதிக சத்து இருக்கிறதாம். அதனால் கலர்கலரா காய்களை போட்டு இப்படி சாம்பார் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
 • புளி சேர்ப்பவர்கள் சாம்பார் மசாலா சேர்க்கும்போதே , புளியைக் கரைத்து கொஞ்சம் புளிச்சாரையும் சேர்த்தால் போதும்.
 • எலுமிச்சம்பழம் சேர்ப்பவர்கள் கடைசியாக தாளிப்பதற்கு முன் பிழிந்துவிட்டால் போதும்.


*****நன்றி*****
மீண்டும்  அடுத்த பதிவில் சந்திப்போம்.
**************************************************************************************************

Sunday, November 25, 2012

நாம் தமிழில்தான் பேசுகிறோமா? எழுதுகிறோமா? ஒரு அதிரடிப்பதிவு.

         நாமெல்லாம் தமிழ்தான் பேசுகிறோமா? எனபதில் சந்தேகம் வந்துவிட்டது. நான் கொஞ்ச நாட்களாகவே 'மரபு தமிழ் இலக்கணம்' என்கிற நூலைப் படித்துவருகிறேன். அதில் தமிழ் மொழியில் கலந்து கிடக்கும் பிறமொழிச் சொற்களைப் பற்றி விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை எழுதும்போதும், பேசும்போதும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தக்கூடாது என்றும், முடிந்தவரையில் தமிழ் சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் உள்ளது. அதைப்படித்து சற்று குழப்பமாக இருந்தபோதுதான் எனது தோழி   ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, அது எப்படி என்றால்?

                 "தமிழ்  மொழியில் வடமொழிச் சொற்களை தவிர்க்கவேண்டியது அவசியம்தானா? இது நன்மை கொடுக்குமா?" "

            இதுதான் கேள்வி. என் மனதிற்குள் மேலும் குழப்பம் கூடிவிட்டது. தமிழ்மொழியில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாமா? கூடாதா? இதைப்பற்றி தெரியாமல்  எழுதினால் படித்த புலவர்களும், கவிஞர்களும்  நம்மளை இழிவாக நினைப்பார்களா? ஒண்ணுமே தெரியாத இவனெல்லாம் எழுத வந்துட்டான்யா! "இனி தமிழ் மெல்ல மெல்ல முழுவதும் அழிந்துவிடும்" என்று சபித்துவிடுவார்களோ? என்ற பயம் வந்துவிட்டது.

            சரி முதலில் நமது 'ஐயத்தை' போக்கவேண்டும் என்று புறப்பட்டேன். நமது முன்னோர்கள் அவர்களின் எழுத்துகளில் பிறமொழிச்சொற்களை பயன்படுத்திருக்கிறார்களா இல்லையா எனப் பார்ப்போம் என்று சென்றபோதுதான். மேலும் ஒரு குழப்பம் வந்தது. முதலில் வடமொழிச் சொற்கள் எவை எவைகள் எனத்தெரிந்திருக்கவேண்டும் அப்போதுதானே மிக எளிதாக கண்டுப்பிடிக்கமுடியும்.

         யார்  யாரெல்லாம் என்னுடைய இந்த பயணத்தில் கலந்துகொள்ளப் போறீங்க?  வாங்க போவோம். தமிழ்ச்சொற்களில் கலந்துக் கிடக்கும் வடமொழிச்சொற்கள் எவை எவைகள் என்றும், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா? அல்லது நீக்க வேண்டுமா? என்பதைப்பற்றி அலசுவோம்.

வடமொழிச்சொற்கள் மற்றும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் முறையே!

அக்கினி - தீ
அநியாயம் - முறைகேடு
அன்னியதேசம் - பிறநாடு
அபராதம் - குற்றம்
அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு
அர்ச்சனை - வழிபாடு
அற்பம் - சிறுமை
ஆகாயம் - வான், விண்
ஆச்சாரம் - நடத்தை,ஒழுக்கம்
ஆடம்பரம் - பெருமிதம்
ஆத்மா - உயிர்
ஆபத்து - இடுக்கண்
ஆசனம் - இருக்கை
ஆபரணம் - அணிகலன்
ஆரம்பம் - தொடக்கம்,கால்கோள்
ஆசை - விருப்பம்
ஆயுதம் - படை
இச்சை - விருப்பம்
இந்திரன் - வேந்தன்
இயந்திரம் - பொறி
இரகசியம் - மறை
இரசிகன் - சுவைஞன்
இராசா - வேந்தன், மன்னன்
இலகு - எளிமை
இலாபம் - ஊதியம்
உத்தியோகம் - வினை, தொழில்
உபதேசம் - அறிவுரை
உபத்தியாயன் - ஆசிரியன்.
உபமானம் - ஒப்புப்பொருள்.
ஐசுவரியம் - செல்வம்.
கதி - நிலை
கல்யாணம் - திருமணம்
கவி - பா. செய்யுள்
கவிஞன் - பாவலன்,புலவன்
களங்கம் - மறு
காகம் - காக்கை
கிரகம்-கோள்
கிரமம் - ஒழுங்கு
கிராமச்சங்கம் - ஊர்மன்றம்
கீர்த்தி - மிகுபுகழ்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
கோபம் - வெகுளி
இந்திரன் - வேந்தன்
சக்தி - ஆற்றல்
சத்தம் - ஒலி
சத்தியம் - உண்மை
சந்திரன் - திங்கள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நியாசி - துறவி
சமயம் - நெறி
சமீபம் - அண்மை
சம்பவம் - நிகழ்ச்சி
சங்கம் - அவை
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்.
சாட்சி - கரி
சாதம் - சோறு
சாமர்த்தியம் - திறமை
சினேகம் - நட்பு
சிந்தை - எண்ணம்
சிரத்தை - ஊற்றம், நாட்டம்
சுகம் - நலம்
சுத்தம் - தூய்மை.
சுயதேசம் - தன்னாடு
சூரியன் - ஞாயிறு.
சொப்பனம்  - கனவு.
சோதி - ஒளி.
ஞானம் - அறிவு.
தண்டித்தல் - ஒற்றுதல்.
தத்துவம் - உண்மை.
தரித்திரம் - வறுமை.
தர்க்கம் - சொற்போர்.
தவம் - நோம்பு.
தானதிகாரி - பொருளாளர்.
தாகம் - வேட்க்கை.
தாசன் - அடியான்.
தாரம் - மனைவி.
தானியம் - கூலம்.
தினம் - நாள்.
தெய்வம் - கடவுள்.
தேசம் - நாடு.
நகரம் - பட்டினம்.
நட்சத்திரம் - நாள், நாள் மீன்(விண்மீன்).
நாசம் - அழிவு.
நியாயவாதி - வழக்குரைப்போன்.
நிர்வாகசபை  - ஆட்ச்சிக்குழு.
நித்திரை - உறக்கம்.
நீதிபதி - முறைவேந்தன்.
பக்தி - அன்பு.
பரீட்சை - தேர்வு.
பத்திரம் - ஆவணம்.
பத்திரிகை - இதழ்.
பத்திராதிபர் - இதழாசிரியர்.
பாகம் - கூறு.
பாத்திரம் - கலம், தகுதி.
பிரகாசம் - ஒளி.
பிரசங்கம் - சொற்ப்பொழிவு.
பிரமசாரி - மாணி.
புராணம் - பழமை, பழங்கதை.
புதினப்பத்திரிக்கை - செய்தித்தாள்.
பூசை - வழிபாடு.
மந்திரி - அமைச்சன்.
மந்திரம் - மறைமொழி.
மாதம் - திங்கள்.
மாமிசம் - ஊன்.
முகூர்த்தம் - ஓரை.
முத்தி - வீடு.
மேகம் - முகில்.
மோட்சம் - வீடு.
வசனம் - உரை.
வருஷம் - ஆண்டு.
வாகனம் - ஊர்தி.
வாதி - வழக்காளி.
வாரம் - ஏழல்(ஏழு நாள் கொண்டது)
விசனம் - கவலை.
விதி - ஊழ்.
விஞ்ஞானம் - அறிவியல்.
விஷேசம் - சிறப்பு.
வித்தியாசம் - வேறுபாடு.
விமர்சனம் - திறனாய்வு.
வியாசம் - கட்டுரை.
வைத்தியர் - மருத்துவர்.
ஸ்ரீமான் - திருவாளர்.

யப்பா இப்பவே கண்ணை கட்டுதே! இன்னும் எவ்வளவோ இருக்கு, இப்ப சொல்லுங்க , நாம தமிழ்தான் பேசுகிறோமா???????
யாருப்பா அது பாதி பயணத்தில் இறங்கி போகிறது. விடாதிங்க! விடாதிங்க! பிடிங்க அவரை. 
உதரணங்களைப் பார்ப்போம்:
முதலில் மகாகவி பாரதியார் வரிகளைப் பார்ப்போம்: அதில் அவர் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறாரா? இல்லையா?

தெய்வப் பாடல்கள்

29. காளிப் பாட்டு

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்

ஞானப் பாடல்கள்

80. சிட்டுக் குருவியைப் போலே
 பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு                                (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு                                             (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.                                              (விட்டு)

அடுத்ததாகஅவையார் பாடலில்....

16. முத்தி காண்டல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - மில்லை
தகர வருக்கம்


55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

வடமொழிச் சொற்களை, நமது சங்ககாலப் புலவர்களும், பாரதியார்,  அவையார் , இன்னும் பல கவிஞர்களும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் மிகக்குறைந்த சொற்களையே பயன்படுத்திருக்கிறார்கள் ஆகவே!. நாமும் நமது கதை - கட்டுரைகள், கவிதைகளில் பயன்படுத்துவோம். ஆனால் முடிந்தவரையில் வடமொழிச் சொற்கள்தான் என்று தெரிந்தால் அதற்குப் பதிலாக தமிழ்  சொற்களைப் பயன்படுத்துவோம்.

**********என்னோடு பயணித்து வந்த அனைவருக்கும் நன்றி.************
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.......Saturday, November 24, 2012

ஹைய்யா! நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!.

 (படம் இணையத்தில் இருந்து)
{இரண்டு நண்பர்கள் கோபாலும், சிங்காராசும் உரையாடுவதைப்போல் ஒரு கற்பனை, இது யாரையும் குறிப்பிடுவன அல்ல.}

ஹைய்யா!!! "நானும் பதிவராயிட்டேன்! நானும் பதிவராயிட்டேன்!"

"டேய் மச்சி! கோபாலு என்னடா சொல்ற?"

"என்னது! டேய் கோபாலா? குற்றாலம் அருவி கோபாலு'ன்னு சொல்லுடா என் சிங்கி மாமா"

"என்னடா மச்சி! அது புனைப்பெயர்? அதுவும் "குற்றாலம் அருவி"ன்னு சொல்ற..."

"ஓ! அதுவா, அதுதான் எனக்கு கதை-கவிதைகள் எல்லாம் அருவிமாதிரி கொட்டுதே! அதான் என்னுடைய வலைப்பதிவிற்கு "குற்றாலம் அருவி"ன்னு பெயர் வச்சிகிட்டேன்."

 "நீ தமிழையே 'தமில்'ன்னு' எழுதுறவண்டா, நீயெல்லாம் எப்படிடா பதிவரான?"

"அட! அப்பாவி சிங்கி மாமா, நீ இன்னும் எந்த உலகத்துலடா இருக்க? தமிழ எப்பொழுதும் எழுத்துமூலமாவே பார்த்துகிட்டு."பேச்சித்தமிழும் இருக்குடே!"

"அப்போ! தப்புத்தப்பா எழுதலாம்'ன்னு சொல்றியா?"

"நான் அப்படி சொல்லவில்லையே, இப்படி எல்லாத்திலும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது'ன்னுதான் சொல்கிறேன். அதெல்லாம் பேச்சு மொழின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கனும்.".

"சரி மேட்டருக்கு வா! உனக்கு மொக்கை போடத்தானே தெரியும் எப்படிடா இப்படி திடீர்ன்னு பதிவரான?"

"சிம்பிள் மாமு, சுடுதண்ணி எப்படி வைக்கிறது'ன்னு சுடச்சுட சொன்னா அது மொக்கை, அதையே சுடுதண்ணி வைத்து சுலைமானி எப்படி போடுறதுன்னு சொன்னா அது சமையல் குறிப்பு."

"அப்போ! என்னைப்போல பக்கம் பக்கமா எழுதுனா அது பதிவில்லையா???"

"நீ எழுதுவது கட்டுரை மாமா அதைப்படிக்கவும் ஒருகூட்டம் இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் பக்கம்பக்கமா எழுதினால் அதையெல்லாம் உட்க்கார்ந்து படிக்கிற அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு நேரம் இல்லை."

"அப்படின்னா  எப்படி எழுதனும்னு சொல்ற?"

"எதைச்சொன்னாலும் நச்'ன்னு நாலு வார்த்தையில் சொல்லிடனும், அதே சமயம் வாசகர்களைக் கவரும் வகையிலும் இருக்கவேண்டும். அப்பறம் பாரு வாசகர்கள் பின்னூட்டம் வந்து குவியும்."

"நானும் நல்லாதாண்டா எழுதுகிறேன், ஆனால் ஒருவாசகர்கூட பின்னூட்டம் போடுவதேயில்லை, ரொம்ப கஷ்டமா இருக்குடா மச்சி!"

"டேய்! மாமா இதற்கெல்லாம் மனசு உடைந்துவிடக்கூடாது. நீ ஒரே மாதிரியான பதிவை மட்டும்தான் எழுதுற, நகைச்சுவை-கிண்டல்,கேலி'ன்னு பல ரகமான பதிவுகளை எழுது மாமு, அப்பறம் பாரு!.  இப்ப நீ எழுதுவது ஒரு விதமான வாசகர்களை மட்டுமமே கவருகிறது, வித விதமாக எழுதினால் பலவிதமான வாசகர்களையும் கவரும்."

"ஓ! இப்படி வேற இருக்கா? நான் என் மனதில் தோன்றும் உணர்வுகளை அப்படியே கட்டுரையா எழுதுகிறேன் மச்சி! வாசகர்களின் வருகையே இல்லை மச்சி!ரொம்ப பீலிங்கா இருக்கிறது."

"அப்படி இல்லை மாமா, மனசுல உள்ளதை அப்படியே எழுதினால் யாருக்கும் படிப்பதற்கு 'போர்' அடிச்சிடும். பாதியிலையே விட்டுட்டுப் போய்டுவாங்க. நகைச்சுவையையும் கற்பனையையும் கலந்து எழுதினால் அது காவியம், இப்பலாம் வாசகரை கவர மசாலாவையும் கலக்கனும் மாமு!"

"அப்ப நான் எழுதுவதெல்லாம் பதிவே இல்லை என்று சொல்கிறாயா?"

"நீ எழுதுவது பதிவுதான் மாமா, ஆனால் அதை முழுவதையும் படிக்க முடியலையே, பாதியிலையே நிறுத்திட வேண்டி இருக்கு, ஒரு விறுவிறுப்பும் இல்லை நகைச்சுவையும் இல்லை. பக்கம் பக்கமா சொல்லாமல் சொல்லவேண்டியதை சுருக்கமா சொல்லுங்கிறேன்."

"சரி எப்படி எழுதினால் வாசகர்கள் பின்னூட்டம் போடுவார்கள். சொல்லு அப்படியே செய்கிறேன்."

"திரும்பத்திரும்ப அதையேதான் கேட்க்கிறாய், மாமா வாசகர்கள் பின்னூட்டத்திற்காக மட்டும் பதிவு எழுதக்கூடாது. பதிவுகள் எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன். பிடித்தவர்கள் பின்னூட்டம் போடுவார்கள் மற்றவர்கள் படித்துவிட்டுப் போய்டுவார்கள".

"சரிடா மச்சி! வாசகர்கள் எப்படிப்பட்ட பதிவுகளை ரசித்து பின்னூட்டம் போடுகிறார்கள்?"

"மாமா, வாசகர்களில் பின்னூட்டம் போடுபவர்கள் பலவிதம். சிலர் முழுப்பதிவையும் படித்துவிட்டுப் பின்னூட்டம் போடுவார்கள், சிலர் மேலோட்டமாகவும், சிலர் பின்னூட்டத்தை மட்டும் படித்துவிட்டும் பின்னூட்டம் போடுவார்கள்."

"அடப்பாவிங்களா! இப்படி வேற செய்கிறார்களா? இப்படி படிக்காமல் வரும் பின்னூட்டத்தினால் என்ன பயன்? படிக்காமல் போடும் ஆயிரம் பின்னூட்டங்களை'விட , படித்துவிட்டுப் போடும் ஒரேயொரு பின்னூட்டமே போதும்டா மச்சி!"

"டேய், என் சிங்கி மாமா, பின்னூட்டம் என்பது ஊக்கமருந்து மாதிரி, அது எப்படி வந்தால் என்ன? சிலர் நல்லாருக்குன்னு சொன்னால்தானே , நீயும் சந்தோஷமா அடுத்தப்பதிவை எழுத போவ...அது எப்படி வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம், 'அனுபவி' அது போதும்."

"இப்படி  வரும் பின்னூட்டம், எழுத்தாளனின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டது இல்லையே! அதனால் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு எழுதும் எழுத்துக்கு என்ன பயன்?"

"எழுத்தை மதிக்கிறார்களோ இல்லையோ! ஆனால் எழுத்தாளன் மதிக்கப்படனும், அவன் மனமுடைந்துப் போகக்கூடாது, எப்பவும் தொடர்ந்து எழுதணும், ஊக்கமது எந்த உருவத்தில் வந்தாலும் சரி அதையே படிக்கல்லாக நினைத்துகொண்டு தனது அனுபவங்களை எழுதணும் , இன்றைய எழுத்தாளனின் அனுபவம்தான் நாளைய இந்தியாவின் இலக்கியம்."

"ஆமாம், இப்ப என்னத்தாண்டா சொல்ல வர..."

"எழுத்தாளன் எழுதணும், அவரவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட 'திறமை'  இருக்கும், அதை வெளிக்கொண்டு வரவேண்டும். அவரவர்களுக்கென்று ஒரு 'ஸ்டைல்' இருக்கும் அப்படியே அதன்படியே எழுதவேண்டும். ஏகப்பட்ட குறிச்சொல் இருக்கிறது கதை, கவிதை, தொடர்கதை, சரித்திரம், அரசியல், தமிழ், நகைச்சுவை, சமையல், சினிமா, புனைவுகள், நிகழ்வுகள், மருத்துவம், கணினி, சாதி, மதம், சிந்தனை, பாடல்கள், பொது, நாவல்கள் என பலவகைகள் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனின் மனதிலும் இப்படி ஏதாவது பிரிவில் எழுதும் திறமை இருக்கும். அதை மறைக்காமல் அப்படியே எழுதவேண்டும்.
அவரவர் சொந்த கற்பனையை யாரும் குறைச் சொல்லபோவதில்லை, நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும், அதனை காலபோக்கில் சரிசெய்துகொண்டு மீண்டும் எழுதவேண்டும் என்றுதான் சொல்கிறேன்."

"நன்றிடா மச்சி! இனி நான் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல், பின்னூட்டம் வந்தால்தான் எழுதவேண்டுமென்ற எண்ணத்தையும் மாற்றிக்கொண்டு எழுதுகிறேன். யார் என்னச்சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும், தவறென்றால் திருத்திக்கொள்கிறேன் தடையென்றால் மிதித்துச் செல்கிறேன், எனது எழுத்துப்பயணத்தை இனி யாருக்காகவும் எதற்காகவும் நிருத்தமாட்டேன்."

"ம்ம்ம்ம் சரி மாமா, இனி தன் மனதில் தோன்றுவதை தங்குதடையில்லாமல் எழுதுடா, எழுத்தாளர்கள்தான் தமிழின் வேர்கள் நாம் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ் செத்துவிடும். நம் சிந்தனையை இழைத்து தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயிர்காப்போம்."

******நன்றி*******Friday, November 23, 2012

பதிவர்கள் அனைவருக்கும் வணக்கமும், நன்றியும்.

    பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் புதிய பதிவர் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரிந்ததுதான். உங்களிடம் சில உண்மைகளைப் பகிர்ந்துக்கொள்ள நினைக்கிறேன்.

                   என் மனதில் தோன்றும் எண்ண அலைகளை யாரிடம் சொல்லிப் பகிர்ந்துக்கொள்வது என்று தெரியாமல் சிலநேரம் எனது டைரியில் எழுதி வைப்பேன். கொஞ்சநாள் கழித்து ஆமாம் யார் இதைப் படிக்கப் போறாங்க என்று கிழித்தெறிந்து விடுவேன். இப்படிதான் எனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தேன் கொஞ்ச நாட்களுக்குப்பிறகு எழுதுவதையே நிறுத்திவிட்டேன.

             எனது வேலையில் பல மொழிகள் பேசும் நண்பர்களை சந்திக்க நேர்ந்தாலும், மலையாளிகளுடன் சேர்ந்து ஒரு அறையில் வசிப்பதாலும், பிற மொழிகளைப் பேசிப்பழகியதாலும் தமிழின் உச்சரிப்பு மாறிவிட்டது. இதனை நான் உணரவே இல்லை. நண்பர்கள் நீ என்னடா பேசுற ஒண்ணுமே புரியவில்லை என்று கேலி-கிண்டல் செய்தபிறகுதான் உணர்ந்தேன். தமிழை மறந்தால் தாயை மறப்பதற்கு சமம் என்றெண்ணி தமிழை வளத்துக்கொள்ள முதலில் தமிழ் குழுமங்களில் இணைந்தேன். அங்கு நண்பர்கள் எழுதும் கவிதை-கட்டுரைகளை படித்தப்பிறகுதான் மீண்டும் என் மனதில் எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

              அதையும் முதலில் தமிழ் குழுமத்திலேயே தொடங்கினேன், நிறைய எழுத்துப்பிழைகள் இருந்தாலும் நண்பர்கள் ஊக்குவித்தார்கள். ஒன்று இரண்டு கதைகளை எழுதினேன், நண்பர்களின் பின்னூட்டங்கள் என்னை மேலும் எழுதத்தூண்டியது. அப்போதுதான் சேட்டைக்காரன் என்கிற வேணு அண்ணா '30 நாட்களில் நீங்களும் முன்னணிப் பதிவர் ஆகலாம்' என்று ஒரு பதிவை எழுதினர். அவரிடம் கற்ற பாடம்தான் பதிவுலகில் கால் எடுத்து வைக்கத்தூண்டியது. எப்படி வலைப்பதிவு உருவாக்குவது என்பதையே அவர்தான் சொல்லிக்கொடுத்தார்.

                  ஆகஸ்ட் 29,30 தேதிகளில் இரண்டு எனது பழைய பதிவுகளை வெளியிட்டேன். ஒரு பின்னூட்டமும் வரவில்லை,தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இருந்தும் யாரும் வரவில்லை, செப்டம்பர் 1 ஒரு பதிவு போட்டேன் அதற்கும் கருத்துகள் இல்லை. பிறகு செப்டம்பர் 22 ம் தேதி VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி?  இந்த பதிவிற்கு முதன்முதலில் எனது நண்பர்கள் பின்னூடம் வந்தது, பதிவுலகில் இருந்து எனது ஆசான் சேட்டைக்காரன் அவர்களின் முதல் பின்னூட்டம் வந்தது. முதன் முதலில் தமிழ்மணத்தில் எனது பதிவை பார்த்துவிட்டு பிரபல பதிவர் முனைவர்.இரா.குணசீலன்  அவர்களின் பின்னூட்டமும், மறுநாள் அவர்கள் உண்மைகள்  அவர்களின் பின்னூட்டமும் வந்தது. மிகவும் சந்தோசமடைந்தேன் தொடர்ந்து பலர் வருகையும், பின்தொடர்வதையும் கண்டு வியப்படைந்தேன்.

                      பதிவுலகம் எப்படி இருக்குமோ? யாராவது எதையாவது சொல்லி மனத்தைக் கஷ்டப்படுத்தி விடுவார்களோ?என்ற பயத்தில்  மேலும் பதிவுகளை வெளியிட்டேன். எனது பதிவு வெளிவந்த உடனே முதல் பின்னூட்டம் திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களுடையதாக இருக்கும். அவரைத்தொடர்ந்து  tamil Naththam, கவிதை வீதி... // சௌந்தர் //,அகிலா, Muruganandan M.K., அம்பாளடியாள், Ramani, பிரசாத் வேணுகோபால் ,  Balaji,    desiyam Divyamohan, மாற்றுப்பார்வைUngal Nanban, யோகன் பாரிஸ்(Johan-Paris)  பழனி.கந்தசாமி, T.N.MURALIDHARANLoganathan Natarajan, Syed Ibramsha, Jayadev Das, வேகநரி, நம்பள்கி, சிட்டுக்குருவி, ஹாரி.R, விமலன்புதுப்பாலம்,  உஷா அன்பரசு, இக்பால் செல்வன்,   அடுத்தடுத்து இத்தினை நண்பர்களும் வருகை தந்து பின்னூட்டம் அளித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். எல்லோருக்கும் நன்றி என்ற ஒருவார்த்தை போதாது. இன்னும் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

இப்போது  இந்த பதிவை எழுத முக்கிய காரணம்:

         எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்களின் வலைப்பதிவு பக்கம் சென்று அவர்களின் பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டம் இடுவது வழக்கம். அதேபோல்தால் நேற்றும் சென்றேன், நண்பர் கோடாங்கி அவர்கர்கள் அவரது பதிவில் புதுய பதிவர்களே இதையும் கொஞ்சம் கவனியுங்க இந்த பதிவைப் படித்தேன், அதில் சில விளக்கங்கள் கொடுத்திருந்தார் அதில் டெம்ப்ளேட் கவனம் என்பதை படித்தேன். ஆனால்  நான் எனது வலைப்பதிவு மற்றவர்களின் வலைபதிவைவிட வித்தியாசமாகவும், வண்ணமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக கருப்பு நிறத்தில் வெள்ளை எழுத்தால் எழுதப்பட்டதுபோல் கொடுத்திருந்தேன். அதனால்தான் எனது வலைப்பதிவிற்கு அதிக பதிவர்கள் வருவதில்லை என்பதை உணர்ந்தேன். மேலும் எனது வலைப்பதிவில் ஒரு பின்னூட்டத்தில் நண்பர் இக்பால் செல்வன்,   அவர்கள் அறிவுரைகள் கொடுத்திருந்தார்கள். அதன்படி நான் எனது வலைப்பதிவின் டெம்ப்ளேட்டை மாற்றிவிட்டேன்.

         பிறகு இன்று காலை தமிழ்மணம் பக்கம் சென்று பார்த்தேன் அங்கு ஐயா பழனி.கந்தசாமி அவர்கள் பதிவுகளின் வகைகள் என்ற தலைப்பில் வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு  உதாரணம் கொடுத்தும், எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக எனது வலைப்பதிவையும் கொடுத்திருந்தார்.

       நான் புதியப்பதிவர் என்பதால் எனக்கு எப்படி வலைப்பதிவை வைத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை, அதனை எப்படி வைத்திருக்கவேண்டும் என்று தங்களின் அன்பான பதிவுகளால் எனக்கு புரியவைத்த கோடாங்கி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய ஐயா பழனி. கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பதிவர்கள் பல கருத்துகளையும், அறிவுரைகளையும் கொடுத்து என்னையும் தங்களோடு கை பிடித்து அழைத்துச்செல்லும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தலை வணங்குகிறேன். நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பொழுது  எனது வலைப்பதிவின் டெம்ப்ளேட் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு, மேலும் மாற்றம் வேண்டுமா என்பதையும் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

Tuesday, November 20, 2012

சும்மா! உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.


            ஒரு வருடத்திற்கு முன்பு ஒருநாள் அதிகாலையில் எழுந்து வேலைக்கு போவதற்காக குளிக்கச் சென்றேன், தலை மயக்கம் இருந்தது எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை, ஏன் இப்படி இருக்கிறது என்று புரியாமல் தவித்தேன் கொஞ்ச நேரத்திற்குள் மயங்கி விழுந்துவிட்டேன். ஒரு பத்து நிமிடம் கழித்து மெல்ல எழுந்து  வந்து படுக்கையில் படுத்துக்கொண்டேன்.

         மறுநாள்  வரை அப்படியேதான் இருந்தது, சரி மருத்துவரிடம் செல்வோம்! ஆலோசனை பெறுவோம்! என்று புறப்பட்டுச் சென்றேன். மருத்துவர் இரத்தம் எடுத்து பரிசோதித்து பார்த்துவிட்டுச் சொன்னார் பயப்படும் அளவிற்கு ஒற்றும் இல்லை 'Blood Pressure' இரத்த அழுத்தம்தான் என்று சொன்னார்.

        "சரி டாக்டர் 'பிரஷர்' எதனால் வருகிறது? எனக்கு எப்படி வந்தது? இதனை முற்றிலும் சரிசெய்ய என்ன செய்யவேண்டும் "என்றுக் கேட்டேன்.

   "இதற்கான சில அடிப்படை காரணங்கள்: அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகை பிடித்தல், உணவில் உப்பு சேர்த்துக்கொள்ளுதல், தூக்கம், தொடர்ந்து வேலைகள் இப்படி அடுக்கிக்கொண்டே போனார்."

     "டாக்டர், எனக்கு மது மற்றும்  புகைப் பழக்கங்கள்  கிடையாது, உப்பும் குறைவாகத்தான் சாப்பிடுவேன்." 

        "பயப்படாதிங்க, காரணங்களைத்தான் சொன்னேன்.ஆனால் உங்களுக்கு அந்தளவுக்கு இல்லை, தூக்கம் குறைவு, குழப்பங்கள், நீங்க சாப்பிடும் உணவு,  கோபம், டென்ஷன், சமாதனமில்லாமை இவற்றை சரி செய்தால் போதும்."

        " சரி டாக்டர் நான் இப்ப என்ன செய்யவேண்டும்?"

        "ஒரு நாளைக்கு சராசரியாக 6 முதல் 8 எட்டு மணிநேரம் தூங்குங்க, கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள், எந்தெந்த செய்கையால் அதிக 'டென்ஷன்' வருவதாக உணர்கிறிர்களோ? அதனை பொறுமையாக கையாளும் முறையைக் கற்றுக்கொள்ளுங்கள், டிவி பார்க்கும் பழக்கம் இருந்தால் நகைச்சுவைகளைக் கண்டு சிரித்து மகிழுங்கள், மன அழுத்தம் தானே குறையும். தனிமையில் இருந்து எதையும் யோசிக்கவேண்டாம், மனிதில் உள்ளதை உங்களுக்கு பிடித்த அல்லது நெருக்கமான ஒருவரிடம் எப்பொழும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்." இப்படி  செய்வதனால் மன அழுத்தம் குறையும், எந்த நோயும் இல்லாமல் வாழலாம் என்று அறிவுரைகளை கூறினார்.

         "அப்படியே செய்கிறேன் டாக்டர், சரியான தூக்கம் இல்லை, தொடர்ந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க நேரம் கிடைப்பதில்லை, இரவு நான்கு மணி நேரமும், பகலில் இரண்டு மணி நேரமும் தூக்குகிறேன், நீங்க சொல்வதைப்போல் கோபம்,"டென்ஷன்" எல்லாம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. இதனை குறைக்க முயற்சி செய்கிறேன்."

             "சரிங்க டாக்டர், மன அழுத்தம் கூடிவிட்டது என்பதை  எப்படி தெரிந்துக்கொள்வது? எப்பொழுதும் உங்களிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டுமா? டாக்டர்."

          "இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது, சில கருவிகளின் உதவியோடு எல்லோரும் வீட்டிலேயே தெரிந்துக்கொள்ள முடியும், அப்படி இல்லை என்றால் தலைவலி, வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் இப்படி சில அறிகுறிகள் இருந்தாலும் இரத்த அழுத்தம் வருவதற்கான அறிகுறிகளாகவே கருதப்படுகிறது." இதில் ஏதேனும் உங்களுக்கு இருப்பதாகத் தெரிந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது என்றார்."

          நல்ல ஆலோசனைகளை கேட்டப் பின்னர்  டாக்டரிடம் இருந்து விடைப்பெற்றேன். முதலில் கோபத்தை குறைத்துக்கொள்வதாக முடிவு செய்தேன். கோபம் வரும் சிலவற்றைக் கண்டால் சிறிது நேரம் அமைதியாக இருப்பேன். சில நேரம்  அமைதியாகவே போயிடுவேன், சில நேரம் பிறகு வந்து பதில் சொல்வேன். சில இடத்தில் கோபமாகப் பேசிவிடுவதும் உண்டு. உடனே அதை மறந்துவிட்டு தவறு யாருடையதாக இருந்தாலும் மன்னிப்பு கேட்டுவிடுவேன். இல்லை என்றால் கை கொடுத்து புன்னைகையோடு விடைபெறுவேன்.

            இந்த பதிவிற்கு முக்கிய காரணத்திற்கு வந்துவிட்டேன் சாலைகளில் நான் 'டென்ஷன்' ஆகும், அல்லது என்னை 'டென்ஷன்' ஆக்குகிற விஷயத்தை சொல்கிறேன். வண்டி ஓட்டும்போது பின்னால் இருந்து "லைட்"அடிப்பது, தேவையில்லாமல் 'ஹாரன்' அடிப்பது, பக்கத்தில் வந்து "ஓவர்டேக்" செய்வது இவைகள் எல்லாம் ஆரம்பத்தில் எனக்கு அதிக டென்ஷனைக் கொடுக்கும். போகப் போக பழகிபோச்சி இருந்தாலும் தினமும் இதுபோல் சில விபத்துகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

        என் முன்னால் வந்து 'ஓவர்டேக்' செய்தால், ஒரு வணக்கம் போட்டு போகச் சொல்லிடுவேன். 'லைட்' அடிப்பார்கள் என்பதற்காகவே முதல் வரிசையில் போகமாட்டேன். "ஹாரன்" சிரிப்பேன், சில நேரம் கண்டுக்காமல் போயிடுவேன். கம்பெனியில் உள்ள டென்ஷனையும் குறைக்க இப்படிதான் பல ஐடியாவை கையாளுகிறேன்.

இன்று நடந்த சம்பவம்:       
            
                        இன்று காலை நான் வண்டியில் வந்துகொண்டிருந்தேன், ஒரு சிக்னலில் நின்றுக்கொண்டிருந்தேன் எனக்கு முன்னால் மூன்று வண்டிகள்,  எனது பின்னால் ஒரு வண்டிதான், அடுத்தடுத்த வரிசைகளில் நிறைய வண்டிகள் நின்றது. சிக்னல் "ஆன்" ஆனதும் எனக்கு பின்னால் இருந்த வண்டிக்காரன் விடாமல் "ஹாரன்" அடித்துக்கொண்டே இருந்தான், மேலும் கையாளும் போ! போ! என்றும் சைகைகள் செய்தான், நானும் முன்னால் உள்ள வண்டி போனால்தானே நான் போவேன், பறந்தா போகமுடியும் என்று சைகையால் காண்பித்தேன். அவன் விடாமல் 'ஹாரன்' அடித்தான், நான் சிக்னலை கடந்ததும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினேன், அவனும் பயங்கர கோபமாக இறங்கிவந்தான்.
 (படங்கள் இணையத்தில் இருந்து)

" என்ன சார்! என்ன வேணும்?"

" நீ எதுக்கு இறங்கி வந்த? அதனால்தான் நானும் இறங்கி வந்தேன்."

"நீங்க  எதுக்கு விடாமல் 'ஹாரன்' அடிச்சிங்க அதனால்தான் இறங்கி வந்தேன்."

"சிக்னல் ஓபன் ஆகிவிட்டது, வேகமாக போகச்சொல்லி 'ஹாரன்' அடித்தேன்."

"எனக்கு முன்னால் மூன்று வண்டிகள் நிக்கிறது, அவர்கள் போனால்தான் நான் போகமுடியும், நான் என்ன பறந்தா போகமுடியும்?"

"நான் உங்களுக்கு அடிக்கவில்லை, அவர்களுக்குதான் அடித்தேன்."

  (படங்கள் இணையத்தில் இருந்து)
"ஓ! அவங்களுக்கும் கண் இருக்கு சார்! அவங்களும் சிக்னல் ஓபன் ஆனதை பார்த்துக்கிட்டுதானே இருப்பாங்க."

"சரி அதைவிடு நீ எதுக்கு இப்ப வண்டிய ஓரம் கட்டின???"

"உங்களுக்கு ஏதும் உதவி தேவைப்படுகிறது அதனால்தான் விடாமல் 'ஹாரன்' அடிச்சிங்க 'ன்னு இறங்கி வந்தேன்."

"அவன்  மெளனமாக கொஞ்ச நேரம் கையை இப்படியும், அப்படியும் ஆட்டிவிட்டு, Don't Waste My time ன்னு சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

"இப்படி 'ஹாரன்' அடிச்சி எனக்கு தேவையில்லாமல் 'டென்ஷன்' கொடுத்துவிட்டு, இப்ப உங்க நேரத்தை வீனக்குவதாக சொல்வது என்ன சார் நியாயம். உதவி செய்ய வந்த என்னிடம் இப்படி கோபமாக பேசுறீங்களே! என்று சொல்லிச் சிரித்தேன்."

அவன் கோபமாக வண்டிய எடுத்துக்கிட்டுப் போனான், என்மேல் உள்ள கோபத்தை யாரிடம் காட்டப்போகிறானோ? தெரியவில்லை.

நானும்  இன்னைக்கு சீக்கிரம் வீடு போக காரணம் தேடிகிட்டு இருந்தேன். இப்படி ஒரு 'டென்ஷன்' கிடைத்ததும் சீக்கிரம் வீட்டிற்கு வந்து தூங்கிட்டேன். எழுந்தப்பொழுது கொஞ்சம் 'டென்ஷன்' குறைந்திருந்தது. இதோ! உங்களிடம் பகிர்ந்துக் கொண்டதும் முழுவதும் குறைந்துவிட்டது.

இப்படிதான், நாம் ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும்,சிலர் நம்மை விடுவதில்லை.
உங்க அனுபவத்தையும் பகிருங்க.....


 

Sunday, November 18, 2012

"மனிதனின் மனம்" எதிலும் திருப்தி அடைவதில்லை.

"மனிதனின் மனம்" எதிலும் திருப்தி அடைவதில்லை. 
"இக்கரைக்கு அக்கரை பச்சை!" என்கிற சொல்வாக்குதான் ஞாபகத்துக்கு வருகிறது. இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை என்று எப்பவும் மனம் எதையோ தேடி அலைகிறது. அப்படியே ஏதாவது பொக்கிஷம் கையில் கிடைத்துவிட்டாலும், அதனை கையில் வைத்துக்கொண்டு அருகில் இருக்கும் மற்றொன்றுக்கு மனம் தாவுகிறது. அதைவிட, இது பெட்டர் என்று மனம் சமாதானமடைந்தால்தான் அந்த இடத்தைவிட்டு நகர்கிறது. கிடைத்தப் பொருளை ஒருநாள்கூட முழுமையாகப் பயன்படுத்தமாட்டோம். அதற்குள் மனம் வேறு ஒன்றுக்காக ஏங்க ஆரம்பித்துவிடுகிறது.

சாதரணமாக காய்கறி வாங்கும் கடையிலிருந்து தொடங்குகிறது, கொட்டிக்கிடப்பது நல்லதாக இருந்தாலும், சாக்குப்பையில் இருப்பதே நல்லதாகப்படும். ஒருக்காயை கையில் எடுத்துக்கொண்டு கிழே இருக்கும் மற்றொரு காயை பார்த்து, அதுக்கு இது பெட்டராக இருந்தால்தான் எடுப்போம்.

ஆடை  வாங்கப்போனால் அப்படிதான், சும்மா ஒரு சட்டை எடுப்பதற்காக கடைக்கு போவோம். அங்குள்ள அத்தினை உடைகளைக் கண்டு, மனம் குரங்குனைப் போல அங்குமிங்குமாக தாவிக்கொண்டிருக்கும். சரியான முடிவெடுக்க முடியாமல், கடைசியில் நேரம் இல்லாததால் ஏதோ ஒன்றை தேர்வு செய்கிறது. அப்படி தேர்வு செய்த சட்டையைப் போடும்போதும்கூட அங்க பார்த்த இன்னொரு சட்டையை நினைத்து மனம் ஏங்கும்.

இந்தமாதிரி விசயத்தில் ஆண்களும், பெண்களும் ஒரேபோலத்தான், பெண்கள் சில விசயங்களில் ஒருபடி மேல் இருப்பார்கள். ஆண்கள் எதையும் வெளியில் சொல்வதில்லை, பெண்கள் வெளியில் சொல்லிவிடுகிறார்கள் இதுதான் வித்தியாசம்.

"துள்ளாத மனமும் துள்ளும்" படத்தின், இன்னிசைப்பாடி வரும்... பாடலில் எனக்கு பிடித்த வரிகள்.

"இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் 
அதைத் தேடித்தேடி தேடும் மனம் தொலைகிறதே!" என்ற வரிகளிதான் எத்தினை உண்மை.


புதியதாக  வேலைக்கு சேர்ந்து முதல் மாதம் சம்பளம் வாங்கும்போதுகூட, நம்மோடு வேலைப்பார்ப்பவர்களுக்கு என்ன சம்பளம் இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள மனம் ஏங்குகிறது, தெரிந்துவிட்டால் அவனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சம்பளம், நமக்கு இல்லையே என ஏங்கும் மனம், அங்கும் திருப்தியடைவதில்லை. அவர்கள்மீது அவசியமில்லாமல் கொஞ்சம் பொறாமையும்.

அலுவலகம் சென்றால், அங்கு அருகில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் ஏனோ மனம் உற்று பார்க்கிறது, சில நேரம் அவர்கள் எது செய்தாலும் பிடிப்பதில்லை, பொறாமையும் கூடவே வளர்கிறது. நமக்கு மட்டும் இப்படி தோன்றவில்லை, எல்லோருக்கும் அப்படிதான் தோன்றுக்கிறது. புதியதாக ஒன்றை செய்யவேண்டும் என்றால் அதை அடுத்தவர்களுக்கு சொல்லிக்கொடுக்க மனம்வருவதில்லை, அவனுக்கு முன் அதை செய்துவிடவே துடிக்கிறது. 

நாம் முதலாளியிடம் கொஞ்சம் நேரம் தனியாக பேசிவிட்டால்போதும்  எதிரில் இருப்பவன், நம்மளை எதிரியாக பார்க்கிறான். இரண்டு நாட்கள் பேசாமல்கூட இருந்துவிடுகிறேன். 

ஒரே கம்பேனியில் தனித்தனி  பிரிவில் வேலைப்பார்ப்பவர்கள் ஒரு அறையில் தங்கிருந்தால், நேரம் வேறுபாடும், சிலருக்கு எளிமையான வேலையும், சீக்கிரமும் முடிந்துவிடும், அதைக்கண்டால் அவன் என்னவோ வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவதைப்போல ஒரு பார்வை பார்க்கத் தோன்றுகிறது. 

இப்படி அழகான ஆடையில் தொடங்கி, அழகான பெண்கள் வரை, ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப்பார்த்து, இதைவிட அதுவா? அதைவிட இதுவா? என ஏங்கி ஏங்கியே மனம் எதிலும் திருப்தியடைவதில்லை. 

சில நன்மைகள்:

 • இப்படி சில ஏக்கங்கள் இருந்தால்தான், அந்த இலக்கை நாம் எளிதில் அடையமுடியும்.
 • இப்படி சில பொறாமைகள் இருந்தால்தான், அந்த இடத்தை நாம் நெருங்க முடியும்.
 • நல்லதை தேர்ந்தெடுப்பதில் தப்பில்லை, அப்போதுதான் நம் திறமையை வெளிப்படுத்தமுடியும்.
 • எட்டாத சில இடத்திற்கு ஆசைப்பட்டால்தான், எளிதில் எதையும் சாதிக்கமுடியும்.
தீமைகள்:
 • இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
 • எங்கும் எதிலும் சந்தேகம் நிலைநாட்டுகிறது.
 • மறதி ஏற்படுகிறது.
 • மனதிற்கு நிம்மதி இல்லாமல் போகிறது.
(நான் கண்டறிந்த சிலவற்றை கூறியுள்ளேன். உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும்)

 

Friday, November 16, 2012

பச்சைக் கத்தரிக்காய் வறுவல்.

Green Brinjal Fry

                   எல்லோரும் வைலேட் கலரில் உள்ள கத்தரிக்காயில் வறுவல் செய்வார்கள், எனக்கு எப்பவும் பச்சைக்  கத்தரிக்காய் என்றால் பயங்கர பிரியம், எனக்கு இதில்தான் அதிக சுவை இருப்பதாக உணர்கிறேன், மேலும் கொஞ்சம் மொரு மொருன்னும் இருக்கும், சாம்பார் செய்யும்போது இந்த கத்தரிக்காயை கோம்போடு நான்கு பாகமாக வெட்டிப்போட்டால் போதும் அவ்வளவு சுவையாக இருக்கும். சரி பச்சைக் கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சைக்  கத்தரிக்காய்:   6,8
தேங்காய் துருவியது :  1/4 கப்பு.
பூண்டு :  2 பல்
காய்ந்த சிகப்பு மிளகாய்:    3,4
ஜீரகம்:   1 டேபிள்ஸ்பூன்.
பெருங்காயம் தூள்:     சிறிதளவு.
எண்ணெய்: சிறிதளவு
உப்பு:   சுவைக்கு தேவையான அளவு.
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவைகள் அனைத்தும் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
                              (படம்: இணையத்தில் இருந்து)
செய்முறைகள்:
 • கத்தரிக்காயின்  கோம்பை நீக்கிவிட்டு, நான்கு துண்டுகளாக வெட்டி நீரில் ஐந்து நிமிடம் போட்டுவைக்கவும்.
 •  ஜீரகம், தேங்காய்த்துருவல், பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை ஒரு மிக்ஸ்யில் போட்டு அரைத்தெடுக்கவும்.
 • வாணலில் எண்ணெய் விட்டு, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையையும் போட்டுத் தாளிக்கவும், அதில் வெட்டி வைத்திருக்கும் கத்தரிக்காயையும் சேர்க்கவும்.
 • ஓரளவுக்கு வணங்கியதும், அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையையும் சேர்க்கவும்.
 • பெருங்காயத்தூள் சிறிதளவு தூவவும்.
 • கடைசியாக தேவையான அளவுக்கு உப்பையும், சேர்த்து சிறிதளவு நீர் விட்டு சிறிய தீயில் கொதிக்கவிடவும். 
 • நீர் சுண்டியதும் இறக்கிவிடவும்.
சுவையான பச்சைக்கத்தரிக்காய் வறுவல் ரெடி. இதனை ரசம், குழம்பு ,சாம்பார் இவற்றிற்கு இணையாகக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


நமீதா அரசியலுக்குள் வந்தால்? எப்படி இருக்கும்.


                                     செய்தி: பிரபல தமிழ் நடிகை நமீதா, பா.ஜ.கா வில் சேர்வதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்த செய்தியை தினமலரில் படித்தேன் நீங்களும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இப்போதெல்லாம்  நமீதாவைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. போனமாதம் இறுதியில்தான், இந்தியாவின் அழகி நமீதாதான் என்று ஜப்பான்-டோக்கியோவின் புகழ்பெற்ற ஒரு டிவி சேனல் அறிவித்தது. இந்த செய்தியை படிக்க இங்கு கிளிக் செய்யவும். இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் எடுத்தப் புகைப்பட ஆல்பத்திலிருந்து நமிதாவின் ஒரு புகைப்படத்தை தேர்வு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இதைக் கேட்ட நமீதா சந்தோஷத்தின் எல்லைக்கே போய்விட்டார் என்று சொன்னால் மிகையாகாது. அப்படி ஒரு உணர்வை உணர்ந்திருப்பார். இதைக்கேட்ட தென்னிந்திய நடிகைகளுக்கிடையில் ஒரு எதிர்ப்பு கிளம்பியது. அழகி என்றால் அதற்கென்று சில அம்சங்கள் இருக்கவேண்டும், அப்படி ஒன்றுமே இல்லாத நடிகையான நமீதாவை எப்படி இந்தியாவின் அழகி என்று ஜப்பான் நாட்டின் டிவி சேனல் அறிவித்தது?. என்ன ரசனையோ? என்றும் அதிர்ப்தியையும், பொறாமையையும் வெளிப்படுத்தினர்.

இது மட்டுமா? சில்க்கின் வாழ்க்கையை மையமாக கொண்ட "தி டர்ட்டி பிச்சர்ஸ்" என்ற ஹிந்தி படத்தை 'தமிழ்' மற்றும் 'தெலுங்கில்' தயாராகப் போவதை அறிந்ததும் நான் சில்க்காக நடிக்க தயார் என்று அறிவித்தார், இதைக் கேட்ட வித்யாபாலனுக்கும் மற்றும் தென்னிந்திய நடிகைகளுக்கும் மிகப்பெரிய நகைச்சுவையாக இருந்தது. 'ரூம்' போட்டு சிரித்த நடிகைகளும் இருக்கிறார்களாம். இந்த உருவத்தைப் பார்த்தா இருக்கும்.

ஆசைப்பட்டால் போதுமா? 'சில்க்கை போல சிலிம்மா இருக்க வேண்டாமா என்று கேட்க, இப்போதெல்லாம் டயட்டில் இருக்கிறாராம், நம்ம குண்டு நடிகை நமிதாவைகூட சிலிம்மா பார்க்கப்போறோம். எல்லோரும் தயராக இருங்கள்.

இவங்களுடைய ஸ்பெஷல் கவர்ச்சிதான் என்பதால், சினிமாவில் மார்கெட் குறைந்துவிட்டால் கவர்ச்சிப் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதாகவும் கேள்வி. காசு செலவழித்து தனக்குத்தானே விளம்பரம் செய்துக்கொள்வதில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் நமீதாவும் என்பதால் அப்படி விளம்பரத்திற்காகவே இந்த அரசியல் அறிவிப்பும் இருக்கலாமோ என்று சந்தேகிப்பவரும்இருந்தனர்.

இப்படிப்பட்ட  நிலையில்தான் நேற்று தனது புதுய அறிவிப்பை வெளியிட்டார். நமீதா பா.ஜ.கா வில் சேர்ந்துவிட்டார் என்று யாரோ புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள் இதையெல்லாம் யாரும் தயவு செய்து நம்பாதீர்கள் என்று
அறிவித்துள்ளார். இந்த செய்தியை படிக்க இங்கு கிளிக் செய்யவும். அரசியலில் சேரும் எண்ணமே இல்லை என்றும் அறிவித்துள்ளார். அச்சச்சோ! நமது கனவெல்லாம் இப்படி பாழப்போய்விட்டதே! என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள்.
ரசிகர்களின் கனவுகள் எப்படி இருந்திருக்கும். என்பதைப்பற்றிய ஒரு சின்னக் கற்பனை.

அரசியல் மேடை:
 • இனி எந்த அரசியல் மேடையாக இருந்தாலும், கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது.
 • " மச்சான்" எப்படி இருக்கீங்க? நல்லாருக்கீங்களா? என்று சொல்லும்போதே மக்கள் மனதில் ஒரு இன்ப உணர்வுகள் உருவாகும்.
 • மக்கள் கூட்டம்கூட்டமாக திரண்டு வருவார்கள்.
 • அய்யய்யோ! கிள்ளுறாங்களே! என்கிற கிளுகிளுப்புக்கும் பஞ்சமிருக்காது.
 • கவர்ச்சி பீரங்கியாக தனது அரைகுறையானத் தமிழில் மக்களை சிரிக்க வைப்பார்.
 • மச்சான்ஸ்  அனைவருக்கும் இந்த நமீதாவின் கவர்ச்சிப் படம் இலவசம்.
 • சில மேடைகளில் ரசிகர்களின் விருப்பத்திற்காக ஒரு கவர்ச்சி டான்ஸ்ம் இருக்கும்.
 • கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் "மச்சான்ஸ் உம்மா" என்று கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும், என்னை மறந்திடாதிங்க மச்சான் என்று வாக்கும், வாக்குப் பெட்டிகளில் ஓட்டாக மாறும்.
 • நமீதாவை பிடிக்காத பெண்கள் ஓட்டு சில சமயம் எதிர்க்கட்சிக்கும் மாறிவிடும்.  
நமீதா முதர்வரானால்:

 • "மச்சான்ஸ்" அனைவருக்கும் வணக்கம். 
 • "மச்சான்ஸ்" எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க? எல்லோரும் சவுக்கியமா?  
 • "மச்சான்ஸ்" அனைவருக்கும் மாதம்தோறும் இலவசமாக சினிமா பார்க்க டிக்கெட் கொடுக்கப்பா.
 • எல்லோரும் என்னுடைய சினிமாவை பார்த்து நூறுநாள் ஓட்டவேண்டும். என்ன கேட்க்குதா? மச்சான்ன்ன்...
 • பாவம் பெண்களுக்கு எந்த சலுகையும் இருக்காது.
 • ஆண்களுக்கு ஒன்றென்றால் பொங்கி எழுவாங்க.
 • பெண்ணாதிக்கம் இல்லாத தமிழகத்தை காணலாம்.
 • ஆணாதிக்கம் தலைக்குமேல் ஏறிக்குதிக்கும், எல்லா சலுகைகளும் ஆண்களுக்காகவே இருக்கும்.
 • பெண்களுக்கு மிச்சம் மீதி கிடைப்பதுவே சலுகைகளாக கிடைக்கும்.
 • தமிழ்நாட்டில்  மழைக்கு பஞ்சம் இருதாலும், கவர்ச்சி மழைக்கு  பஞ்சமே இருக்காது.
 • "மச்சான்ஸ்" என்பதை சரித்திரத்தில் எப்படி பதிக்கலாம் என்று பேச்சுவார்த்தையும் நடக்கும்.
(எல்லாம் நகைச்சுவைக்காக சொன்னவையே, நகைச்சுவையாக சொல்ல இன்னும் எவ்ளவோ இருந்தாலும் இப்போதுள்ள சூழ்நிலையை அறிந்து, குறைவாகவே பேசவேண்டியிருக்கிறது)

Tuesday, November 13, 2012

மொய் இல்லாமல் திருமணம் செய்வோம்.


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.                  நம்ம ஊர் பக்கம், ஒருசில சின்னச் சின்ன பழக்க - வழக்கங்கள் எல்லாம் சாதாரணமாகவே தெரிந்தாலும், சமயத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்...             நமது உறவினர்களின் வீட்டில்  நடைபெறும் காதணித் திருவிழா, புதுமனைப் புகுவிழா, திருமணம், மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் பிறந்தநாள் விழா, இப்படி இன்னும் சில நிகழ்ச்சிகளும் இருக்கிறது. எல்லாமே அற்புதமான மங்களகரமான விழாக்கள் கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  இதுபோல் சில சந்தோஷமான இடங்களில்தான் நமது உறவினர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும். பிகர்களையும்தான் முக்கியமானதை ஏன் முதல்ல சொல்லவில்லை என்று வருத்தப் படவேண்டாம். வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல், குடும்பத்தின்  முழுப் பொறுப்பையும் சுமந்துக்கொண்டு, வீட்டுவேலை முடிந்தால் காட்டுவேலை; காட்டுவேலை முடிந்தால் வீட்டுவேலை; என்று விடாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் குடும்ப பெண்மணிகளுக்கு, தங்களது உறவுகளையும், உடன் பிறப்புகளையும் சந்தித்து தனது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்துக்கொள்ளக் கிடைக்கும் ஒரு சந்தோஷமான நாளும் இதுதான். அப்படியே சைக்கிள் கேப்ல தன் மகனுக்கு பொண்ணு பார்ப்பதும், மகளுக்கு நல்ல வரனைத் தேடுவதும்கூட இங்குதான். எப்போதும் வேலை வேலை என்று அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் ‘ஓடியோடி’ அயராது உழைக்கும் நமது அன்பு சகோதர – சகோதரிகளும்,  தங்களது மெஷின் வாழ்க்கையிலிருந்து சற்று விடைபெற்று இளைப்பாறும் இடமும் இதுதான். நான் ஆபீஸ்ல மேனேஜரா இருக்கேன், நான்தான் அங்கு எல்லாமே அதனால எனக்கு லீவு கிடைப்பதேயில்லை என்றெல்லாம், தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளும் இடமும் இதுதான். நெட்ல மொக்கை போடுவதையும், போன்ல கடலைப் போடுவதையும் சத்தியமா இங்க சொல்லவே மாட்டோம்.
           சில வசதி – வாய்ப்புடன் வாழுபவர்கள் இந்தநாளில்தான் தங்களது பலத்தையும், பெருமையையும் காட்டிக்கொள்ளக்கூடைய நாளாக கருதுகிறார்கள். குறிப்பாக  பெண்கள் இதுபோல் வரும் விழாக்களில் கலந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதோடு, மிகவும் சந்தோஷப்படுவார்கள். இப்படிபட்ட இடங்களில்தானே தங்களுடைய ஆடை – ஆபரணங்களை, அரங்கேற்றம் செய்யமுடியும். முழுவதும் தங்கமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, பகுதித் தங்கமும், ஏதாவது புதிய மாடல்கள் இல்லை என்றால், அதற்குப் பதிலாக, சில கவரிங் நகைகளையும் கலந்து வரிசையாக அடுக்கிக்கொள்வார்கள், பார்வைக்கு  அப்படியே ஒரு நகைக்கடையே நடந்து வருகிற மாதிரி இருக்கும். ஆனால் தொட்டுப்பார்க்க மட்டும் விடமாட்டார்கள், கவரிங் என்று தெரிந்துவிடுமே!. ஆண்களும் மது, மாது என கண்டு மகிழ தங்களிடம் உள்ள ஆடைகளிலேயே புதியதை எடுத்து காஞ்சி போட்டு அயன் பண்ணி, மடிப்பு கலையாமல் உடித்திக்கொண்டும், தலைமுடியில் சில மாற்றம் வேண்டுமே என்று வெள்ளை முடிகளுக்கு மைதடவி கருப்பாக்கியும், கருப்பு முடிகளுக்கு கலர்கலரா வர்ணம் பூசி செம்பட்டையாக்கியும், தாடியியிலும் சில  மாற்றங்கள் வேண்டாமா?, கட் கட் தாடி, கரப்பான்பூச்சி தாடி, ரவுண்ட் சைஸ் தாடி, ரங்கீலா தாடி என பல வகையில் மாற்றம் செய்துக்கொண்டும், சிலர் மீசையோடும், சிலர் மீசை இல்லாமலும் அவரவருக்கு பிடித்த வகையில் தங்களை தயார் செய்துக்கொண்டு வருவார்கள். தங்களிடம் கார் இருப்பவர்கள் காரிலும், கார் இல்லாதவர்கள் நண்பர்களிடம் கார், பைக் என கடன் வாங்கியும், சொந்தமா ஒரு நல்லச் சட்டை இல்லை என்றாலும் ‘கெத்து’ போயிடுமே என்பதற்காக  வாடகைக்காவது ஒரு சட்டையை  வாங்கிஉடுத்திக்கொள்வார்கள், சிலர் நண்பனின் சட்டையை போட்டுக்கொண்டு ஒரு கெத்தொடு வந்து இறங்குவார்கள்.

     வீட்டில் மட்டுமே ராணியாகத் திகழும் குடும்பப் பெண்கள் எப்போதும், சதா பெட்டியிலேயே வைத்து அழகுப் பார்க்கும் பட்டுப் புடவையை எடுத்து சுற்றிக்கொண்டும், எப்போதோ! கணவன் வாங்கி கொடுத்த சில தங்க நகைகளை அணிந்துக்கொண்டும், அவர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஒரு கெத்தோடு வந்து சேருவார்கள், நம்ம இளவட்டங்கள் வந்திருப்பதிலேயே நல்ல பிகர் எதுவென்று தேடிபிடித்து, சும்மா ஒரு பார்வை வீசுவதும், திரும்பி பார்த்த பிகரை அது என் ஆளுடா மச்சின்னு, சொல்லி ஜொள்ளு விடுவதிலும், ஊர் பேர் விசாரிப்பது, சும்மா கடலை போடுவது என அவர்கள் அவர்களுடைய காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். எல்லோரும் இப்படி வருவதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது, அதுதான் இந்த நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் போட்டோவும், விடியோவும்தான். வாழ்த்த வருகிறார்களோ இல்லையோ போட்டோவுக்கு கண்டிப்பா போஸ் கொடுக்க வந்திடுவாங்க.

           ‘திருமணம்’ என்றால் பெண்ணைப் பெற்ற தாய் – தகப்பன்கள்,  எல்லாம் சரியாக கொடுத்துவிட்டோமா? சீர் வரிசையில் ஏதாவது மாப்பிள்ளை வீட்டார்கள் ஏதாவது  குறை கண்டுப்பிடித்துவிடுவார்களா? நமது சொந்த பந்தங்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா? என்று மனதில் பல எண்ணங்கள் ஓடியப்படியே, வெளியில் புன்னகையோடு வருகின்ற உறவினர்களை வரவேற்பு செய்வதில் பிஸியாக இருப்பார்கள். மாப்பிள்ளையை பெற்ற தாய் – தகப்பன்கள் வருவோரை வரவேற்றும், வரப்போகும் மருமகப் பெண்ணையும்விட கண்ணும் கருத்துமாக, பொன்னையும் - பொருளையும், பாதுகாப்பார்கள். இப்படி பலரும் பல நினைவுகளுடன் , உறவினர்களிடம் வாய் பேசி, மணமக்களை கண் பார்க்க, அடிக்கடி சட்டைப்பையை தொட்டுப் பார்த்துக்கொள்வார்கள், மொய்ப்பணம் எழுத காசு இருக்கிறதா? என்று. எப்படா சாப்பாடு கிடைக்கும் என்று காத்துக்கிடக்கும் ஒரு கூட்டம் அடிக்கடி தன் அடிவயிற்றை தொட்டுப்பார்த்துக்கொள்ளும்.

            ‘காதணித் திருவிழா’ என்றால், குழந்தையை பெற்றத்தகப்பன்  தாய் மாமன் சீர் வரிசையை சரியாக செய்திருப்பானா மச்சான், நாம் செய்த ‘மொய்ப்பணம்’ எல்லாம்  திருப்பிக் கிடைத்துவிடுமா? அல்லது ஏமாற்றிவிடுவார்களா? என்ற எண்ணம் மனதில் ஓட மரியாதைக்காக வாங்க வாங்க என எல்லோரையும் வரவேற்று, ‘வாங்க மச்சான்’ வந்து உக்காருங்க உங்க மடியில் உக்கார வைத்துதான் உங்க மருமகனை (அ) மருமகளை காது குத்தனும், ‘வாங்க மச்சான்’ வந்து உட்க்காருங்க என்று சொல்லி, பொலி கொடுக்க போகும் ஆட்டிற்கு மாலைப் போடுவதைப்போல் இவருக்கும் போட்டு, தண்ணீரைத் தெளித்து (வெட்ட) காதுகுத்த தயராக இருக்கும்நிலையில்,  அப்படியே விளையாட்டுபோல சொல்வார் பாருங்க ஒரு ‘டைலக்கு’ நீங்க கொடுக்கும் சீர் வரிசை வச்சித்தான் மச்சான், உங்க மருமகனை (அ) மருமகளைப் படிக்க வச்சி ஆளாக்கனும் என்று சொல்லி சிரிப்பார். அங்கு கூட்டத்தில் ஒருவர் அதுக்கென்னயா அவருக்கு இருப்பதே ஒரேஒரு தங்கை , இந்த பிள்ளைகளுக்கு செய்யாமல் வேரு யாருக்குயா செய்யப் போறார், சும்மா பேசிக்கிட்டு இருக்காம சட்டுப்புட்டுன்னு நல்ல நேரத்துல காது குத்தகிற வேலையை பாருயா! என்பார். கூட்டத்தில் இன்னொருத்தர் அதுக்கென்ன, அவர் பையனுக்கே உங்க பொண்ணை கட்டிகொடுத்துட்டா எல்லாச் சொத்துமே உங்க பொண்ணுக்குத்தானே! அவர் சப்பாதிப்பது உள்பட என்று கிண்டலாக சொல்வார். அப்படியே கூத்தும் கும்மாளமுமாக விழா நடைபெறும். இந்த கிண்டலுக்கு இடையில் ‘தாய் மாமன்’ வெயிலும் - மழையும் அவர்மேல் மட்டும் பெய்வதாக உணர்வார்.

               இப்படியே ஒவ்வொரு விழாவும் சிறப்பாக நடக்கும், எல்லோருக்கும் கொண்டாட்டமாக இருக்க,  இதில் ‘சீர்’ செய்பவர்கள் பாடு மட்டும் திண்டாட்டமாக இருக்கும். இங்கு ‘சீர்’ செய்பவர்கள் யார் யார் என்றால். பெண்ணை பெற்ற பெற்றோர்கள், கல்யாண ‘சீர்’ கொடுக்கவேண்டும்,  இவர்களுக்கு பெண்ணின் கல்யாணம் என்றால் ‘சீர்’ செய்யவேண்டும் என்பது முன்பே தெரியும் அதனால் தேவையான அளவுக்கு சேர்த்துவைத்திருப்பார்கள் அல்லது இது நமது கடமை என்று நினைத்து எப்படியாவது கடனை – கிடனை வாங்கி கல்யாணத்தை முடித்துவிடுவார்கள். 

             ‘முறைமாமன் சீர்’ செய்வது வழக்கம் என்பதால் மாமன் எப்படியாவது செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தால் அவரும் எப்படியாவது கடனை – கிடனை வாங்கி ‘சீர்’ செய்துவிடுவார். தங்கையின் குழந்தைக்குதானே என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று செய்பவர்களைவிட ஊர்காரர்கள் முன்பு தன்மானம் போய்விடக்கூடாது என்பதற்காக செய்பவர்களே அதிகம். இவைகள் எல்லாம் இப்படி இருக்க விழாவில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.

              திருமணங்கள் வந்தாலும், காதணித் திருவிழா வந்தாலும் வேறு எந்த விழாக்கள் வந்தாலும் ஒரு குறிப்பிட்டத் தொகையை மொய் எழுதவேண்டும், என்பது நமது முன்னோர்கள் நமக்கு ‘பாக்கி’ வைத்துவிட்டுப்போன பண்பாடு. என்னது ‘பாக்கி’ வைத்துவிட்டுப்போன பண்பாடா! என்று வியப்பாக கேள்வி கேட்பவர்கள் தொடர்ந்து படிங்க.. கண்டிப்பா புரியும்.

            மொய் எழுதாமல் கல்யாணமா? காரியமா? எந்த விழாவாக இருந்தாலும் மொய் இல்லாமல் இருக்காது. இந்த மொய் எழுதுவதில் சில முறைகள் இருக்கிறது. தாய் மாமன் மொய், சம்மந்தி மொய், கொண்டான் - கொடுத்தான்  மொய், உடன் பிறப்புகளின் மொய், முறைமாமன் மொய், இப்படி தொடங்கி நண்பர் மொய், கவரில் வைத்து கொடுப்பது, கவருக்காக தேடி அலைந்துவிட்டு கவர் கிடைக்காததால் கடைசியில் கையில் திணிப்பது இப்படி பல வகைகள்.

             இதைத்தவிற  “தங்க நகைகள்” செய்யும் பழக்கம் வேறு,  இதுல பாருங்க கால் பவன் நகையை கொடுத்துவிட்டு, அரைப்பவன் என்று சொல்லி எழுதிவிட்டு போய்டுவாங்க, மொய் எழுதும் இடங்களில் இனிமேல் எடைப்பார்க்கும் மெஷின் வைத்து எடை சரியாக உள்ளதா? என்று கண்டிப்பா பார்க்கவேண்டும், என்ன அக்கப்போரு! பாருங்க... பிறகு  “பண்ட- பாத்திரங்கள்”  கொடுப்பது, இதில் பாருங்க அநியா அக்கப்போரு! நடக்கும், இவங்களுக்கு யாராவது கொடுத்த பாத்திரத்தை அப்படியே கூட்டத்துல கொண்டு வந்து வைத்துவிட்டு அங்கு இருக்கும் பாத்திரத்தை ஒரு பார்வை பார்ப்பாங்க, கண்ணுல படுகிற ஒன்றை தன்னுடையதாக சொல்லி தன் பெயரை எழுவிட்டு போய்டுவாங்க. அப்பறம் “தங்க காசு கட்டுவது”  தங்க காசில் ஒரு ஓட்டை இருக்கும் அதை மஞ்சநூல் ஒன்றில் கோர்த்து மணப்பெண்ணின் நெற்றியில்தான் கட்டவேண்டுமாம், சரி கட்டுறதுதான் கட்டுறாங்களே கொஞ்சம் லேசா கட்டக்கூடாது, மணப்பெண்ணிற்கு தலைவலி வரும் அளவிற்கு  இருக்கி காட்டிவிட்டுப் போய்டுவாங்க. பாவம் அந்தப் பொண்ணு சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தலைவலியை தலைவிதியா நினைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்கும். அப்பதான் மணமகன் சொல்வார் இவங்கதான் என்கூட படிச்சவங்கன்னு சிலரை அறிமுகம் செய்துவைப்பார், தலைவலியோட இந்த பொண்ணும், “ஹாய்!” ன்னு சொல்லும். அதைக் கொஞ்சம் சிரிச்சிகிட்டே சொல்லேன் மணமகன் காதைக் கடிப்பார். உடனே இந்த பொண்ணு நினைத்துக்கொள்ளும் ஐயோ! ரொம்ப கோபக்காரரா இருப்பார் போலிருக்கே! தாலியை வேற கட்டிட்டானே ஐயகோ! இனி வாழ்க்கை பூராவும் இந்த தொல்லையேயும்  அனுபவிக்கணுமா ‘னு மனதில் வருந்தும்.

           இங்குதான் கல்யாண வீட்டுக்காரர்களின்  ‘வசூலும்’ மொய்யை வாங்கியவன், தனதுக் கடனை திருப்பிச்செலுத்தும் ‘நாணயமும்’ நிலைநாட்டப்படுகிறது., சிலர் மொய் எழுதிவிட்டு திருப்பி வருமா? வராதா? என்ற கவலையுடனும், சிலர் எழுதிய மொய்ப்பணம்  வந்தாலும் வரட்டும், வராவிட்டாலும் போகட்டும், ஆனால் இன்னைக்கே அதனை வசூல் செய்திடவேண்டுமென்று, எழுதிய பணத்துக்கும் ஒரு பிடி அதிகமாகவே சாப்பாட்டை  ஒரு கட்டுக் கட்டிடவேண்டுமென்ற எண்ணத்திலும்,  ஒரு சிலர் இவ்ளோ தூரம் வந்ததினால் தனது செருப்பு தேய்ந்திருக்குமோ? என்று செருப்பின்மேல் பரிதாபப்பட்டு, இருப்பதிலேயே தேயாமல், கண்ணுக்கழகா இருக்கும் நல்லச் செருப்பா பார்த்து, ஒரு ஜோடியையும் ஆட்டையைப் போடவும் திட்டம்போட்டு காத்திருப்பார்கள். நமது இளவட்டங்கள் சுடிதாரின் அழகிலோ? சுந்தரிகளின் வலையிலோ? விழுந்துவிட்டு பிரிவை தாங்க முடியாமல் “ போகுதே! போகுதே! என் பைங்கிளி போகுதேன்னு” மனதில் பாடிக்கொண்டே வாசல்வரைச் சென்று வழி அனுப்பிவிட்டுட்டு வருவார்கள்.

          இப்படி எல்லா சந்தோஷங்களும் ஒரு பக்கம் இருக்க, பணம் என்று வாய் திறந்தாலே ஒரு விதப் பயமும் நம்மைச் சுற்றிவலைக்கிறது, மாதம் 30,000  சம்பளம் வாங்கும் ஒரு சராசரி குடும்பஸ்தனும், வாழ்க்கை என்னும் கடலில் தத்தளித்துக்கிறான். வருகிற வருமானம் போகிற வழித்தெரியாமல் போய்விடுகிறது, மாதக்கடைசியில் அவனும், பத்துக்கும்-அஞ்சிக்கும் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். வருமானம் கூடக்கூட செலவுகள் அதற்குமேல் ஒரு படி முன்னே சென்று நிக்கிறது. இதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

            ஒரு சாதாரண குடும்பம் என்றால் குறைந்தது அப்பா-அம்மா, அண்ணன்–அண்ணி, அக்கா-தங்கை, அத்தை–மாமா, தானும், தனது மனைவியும் எனக் குறைந்தது இத்தினை உறுப்பினர்களாவது ஒரு குடும்பத்தில் இருப்பார்கள். இது இல்லாமல் மனைவியின் வீட்டில் , மாமனார்- மாமியாள், மைத்துனன் , மச்சினி மேலும் அவர்களின் உடன்பிறப்புகள் என்று சிலர் இருப்பார்கள். இவர்களை இல்லாமல் நமது நண்பர்கள் வட்டாரம் ஒருபக்கம் இருக்கிறது. இவர்கள் எல்லோருடைய வீட்டிலும் நல்லது கேட்டது என வந்துப் போகிறது. அதற்காக நான் செய்யும் திடீர் செலவுகள் நமது பட்ஜெட்டில் இல்லாமல் வருவதுதானே? இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வரும் செலவுகள் நம்மளை ஒரு நேரத்தில் ஆட்டிப்படைக்கிறது, என்பதை சத்தியமாக நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகணும்.

                    ஒரு ஊரில் குறைந்தது நமக்கு தெரிந்த குடும்பங்கள் என்று பார்த்தால் ஐந்நூறுக்கும் மேல் இருக்கும், அவர்களின் வீட்டில் ஏதாவது நல்லது-கேட்டது என்றால் நாம் பங்கெடுக்காமல் இருக்கமுடியாது, கண்டிப்பாக போயே ஆகவேண்டும், அப்படி போய்ட்டு சும்மா திருப்பி வரமுடியாது, குறைந்தது நம்மளால் முடித்த ரூபாயை மொய்ப்பணமாக எழுதிவிட்டுதான் வரவேண்டும். குறைந்தது நூறு ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். மாதம் பத்துக் குடும்பங்களில் விசேஷம் என்றாலும் 1000 ரூபாய். மனைவியின் சித்தப்பா வீடு குடிபோகிறார் என்றால் அவங்களுக்கு குறைந்தது அரைப்பவுன் தங்கம் கொடுக்கவேண்டும். இன்னைக்கு அரைப்பவுன் விலை 12,000 கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும், இல்லையென்றால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது. மனைவியின் சித்தப்பாவாச்சே! , சரி எப்படியாவது இந்த மாதச்சம்பளத்தில் சமாளித்துவிடலாம் என்று இருந்தால், அப்பதான் ஒரு பத்திரிகை வீடு தேடி வரும். அப்பாவின் பங்காளி வகையில் ஒரு அக்கா, அவங்க குழந்தைக்கு காதணித் திருவிழா வைத்திருக்கிறார்கள், சரி வச்சிட்டு போகட்டும் நமக்கென்ன, அப்பாவை அனுப்பி வைத்துவிடலாம் நூறு ரூபாய் மொய்ப்பணமும் போடச்சொல்லிடலாம் என்று சமாதானமாக இருப்போம். அப்பா வருவார் தம்பி பத்திரிக்கையை பார்த்தியா?ன்னு கேட்பார். பார்த்தேன்பா அப்படியே நீங்களே போய்ட்டு வந்துடுங்க எனக்கு லீவு கிடைக்காது என்று சொல்லி வாயடைப்பதற்க்குள், அப்பா சொல்வார் அவ உன் கல்யாணத்துக்கு அரைப்பவுன் தங்கநகை கொடுத்திருக்கிறாள், அதை நாம இப்ப திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று.
    
         மீண்டும் பட்ஜெட்டில் இல்லாத செலவாக மேலும் 12,000 ரூபாய் போகும், நாம் வேலைக்கு போய்ட்டுவர ஆகும் செலவு, குடும்பச் செலவு, குழந்தையின் படிப்புச் செலவு, கரண்ட் கட்டணம் என்று இதற்காகவே குறைந்தது மாதம் 10,000 ரூபாய்   செலவாகும். சிலமாதம் இதைவிடவும் கூடும். இப்பவே இந்த மாதம் 35,000 ரூபாய் செலவாகிவிட்டது. அடுத்த மதச் சம்பளத்திலும் அட்வான்சாக கைவைத்துவிட்டாச்சி, இதுபோல் அடுத்த மாதமும் வந்தால் என்ன செய்யமுடியும். பிறகு மைத்துனன் திருமணம் என்றால் ஒரு பவன் தங்கநகை கொடுக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல் நலுங்கு வைக்கவேண்டுமாம், அதற்கு ஸ்வீட், பழங்கள் இன்னும் பல பொருள்களோடு பதினைந்து தாம்பாளம் இருக்கவேண்டுமாம், கூடவே நல்ல விலைக்கூடிய உடையும் கொடுக்கவேண்டும், சரி இதுமாட்டும்தானே நேரா போய் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்றால் அதுவும் கூடாதாம், மேள-தாளம் வேணுமாம், கூடவே படைபலத்தைக் காட்டுவதற்காக ஊர் மக்கள் என்று ஒரு படலம் போகவேண்டுமாம். என்ன கொடுமை சார் இது! பாருங்க. சரி எப்படியோ கடனை வாங்கி இதை முடித்துவிட்டால் கடமை முடிந்தது என்று பெருமூச்சு விடலாம் என்றால் அதுவும் நடக்காது, அவர்களுக்கு திருமணம் முடிந்ததும் “தேவை சாப்பாடு” அதாவது விருந்துக்கு அழைக்கவேண்டும், சும்மா அழைத்தால் போதாது இருவருக்கும் உடைகள் வாங்கிக் கொடுக்கவேண்டும், ஆட்டுக்கறி , மாட்டுக்கறி, முயல்கறி, பூனைக்கறி, நாய்க்கறி, நண்டுக்கறி, கடலில் மிதப்பது, நீந்துவது என அடுக்கிக்கொண்டே போவார்கள், இதெல்லாம் மனைவியின் கட்டளை, அண்ணனும்-அண்ணியும் வந்திருக்காங்க என்னங்க சும்மா நின்னுகிட்டு போங்க போய் ஏதாவது வாங்கிகிட்டு வாங்க.. இப்படியே துரத்தி விடுவாங்க கையில் காசு இருக்கா? இல்லையா? என்பதெல்லாம்  இந்த நேரத்தில் மனைவிக்கு தெரியாது. 

                 மச்சினி திருமணம் என்றாலும் இதேதான், ஒரு மைத்துனன் இருந்தால் இன்றைய மதிப்பீட்டில் அவரது திருமணத்திற்கு ஆகும் செலவு ஆகா மொத்தம் 75,000. உங்களுக்கு எத்தினை மைத்துனன்-மச்சினி இருக்கிறார்களோ, அத்தினை 75,000 ரூபாய் செலவு என்று இப்பவே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே! இதுமட்டும் இல்லை அவர்களுக்கு குழந்தை பிறந்தால் ஒரு பவுன்தங்கம், பிறகு காதுகுத்து, இப்படி பெருகிக்கொண்டே போகும்.
         இது இல்லாமல் முப்பது வருடத்திற்கு முன்பு ஒரு பவன் தங்கம் இரண்டாயிரம் விற்ற காலத்தில் நமது வீட்டில் நடந்த ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒருவர் கொடுத்திருப்பார். அதை இன்று நாம் திருப்பிக் கொடுக்கவேண்டும். இதற்காகவே ஒரு நோட்டு போட்டு எழுதி வைத்திருப்பார்கள் நமது முன்னோர்கள். பெயர் “மொய்டாப்பு” அல்லது ‘மொய் நோட்டு’ , இதைவிட “கடன் பாக்கி நோட்டு” என்ற பெயர் இதுக்கு மிகச் சரியாக பொருந்தும் என்று நினைக்கிறேன். இதைத்தான் சொன்னேன் “பாக்கி வைத்துவிட்டுப்போன பண்பாடு” என்று இப்போது புரிகிறதா நண்பர்களே!.

           இப்படியே மாதாமாதம் செலவுகள் கூடிக்கொண்டே போகிறது, தங்க நகைகளின் விலையேற்றமும், அவசியப் பொருள்களின் விலையும், ஆளை முழுங்குகிறது, இப்போதையே சூழ்நிலையில் மாதம் முப்பதாயிரம் வருமானம் இருக்கும் ஒருவராலியே குடும்ப சுமைகளைச் சமாளிக்கமுடியவில்லை. இதற்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களின் நிலைமையை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களுக்கும் உறவுகள் ஒருபோல்தான் இருப்பார்கள், நகைக்கடையிலும் அதே விலைதான். என்ன செய்வார்கள் பாவம் கந்து வட்டிக்கும், மீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கிதான் ஆகவேண்டும். அப்படியும் முடியவில்லை என்றால் தற்கொலைதான் கடைசி முடிவு.

          எனக்குத்தெரிந்து எத்தினை எத்தினையோ நண்பர்கள் அமீரகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிரார்கள், மாதாமாதம் இப்படிபட்ட பிரச்சினைகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பதால், அவர்கள் ஊருக்குக்கூட போகமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். அமீரகத்தில் வேலைப் பார்க்கும் இந்தியர்களில், ஐம்பது சதவிதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மாதச் சம்பளம் பத்து முதல் பதினைந்தாயிரத்தைத் தாண்டாது. இப்படிப் பட்டவர்களின் வாழ்க்கையின் எதிகாலம் ஒரு கேள்விக்குறியே! அன்றாட வாழ்க்கையிலேயே தள்ளாடும், இவர்களின் பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம், இவர்களுக்கென்று ஒரு வீடு, இதெல்லாம் கனவாகவே வந்துபோகிறது. 

         இதையெல்லாம் மனதில் கொண்டு, நாம் நமது பழைய பழக்க-வழக்கங்களை சற்று தளர்த்தவேண்டும், வசதியுள்ளவர்கள் அவரவர்களின் விருப்பம்போல் வாழட்டும். நடுத்தர குடும்பத்தினரும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தினரும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இதனை மாற்றும் முதல் முயற்சியாக, இனியாவது தங்களுடைய இல்லத்தில் நடைபெறும், அனைத்து  விஷேசங்களிலும் மொய்ப்பணம் வாங்குவதை நிறுத்துவோம். “மொய் இல்லாமல் திருமணம் செய்வோம்”, “மொய் இல்லாமல் வீடு குடிபுகுவோம்”, “மொய் இல்லாமல் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்”, “மொய் இல்லாமல் காதணித் திருவிழா” நடத்துவோம்.

               இவைகள் எல்லாம் சாதரணமாக அப்ப அப்ப நமது வாழ்வில் வந்துப் போவதால், நாம் சரியாகக் கணக்குப்போட்டு பார்ப்பதில்லை. சரியாக கணக்குப் போட்டுப்பார்த்தால் நமது உழைப்பெல்லாம் இதற்காகவே செலவு செய்துவிடுகிறோம். இதுபோல் செலவுகள் இல்லை என்றால் ஒரு சாதாரண குடும்பத்திற்கு மத வருமானம் பத்து முதல் பதினைந்தாயிரம் போதும். கூடவே கொஞ்சம் நிம்மதியும் கிடைக்கும். இதனால் எந்த நிகழ்ச்சிகளுக்கும் போகக்கூடாது என்று சொல்லவில்லை. திருமணத்திற்கு போவோம், வாழ்த்துவோம், நம்மளால் முடிந்த “கிப்ட்” வாங்கிக்கொடுத்து நமது சந்தோஷத்தை வெளிப்படுத்துவோம். ஒருவருக்கொருவர் உதவி செய்த்துக்கொள்வோம், இதுபோல் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து கொடுப்போம். இனியாவது  “மொய் இல்லாமல் திருமணம் செய்வோம்”   நமது முன்னோர்கள் தொகுத்து வைக்கப்பட்டது ‘காவியம்’ இல்லை, ‘காகிதம்’ என்று அதனைக் கிழித்தெறிவோம். ஒன்று சேருங்கள் நண்பர்களே, நமது இந்த தலைமுறையின் அழிவில் இருந்து காப்பாற்றுவோம்.

நன்றி.
வணக்கம் நண்பர்களே!

{உங்களுடைய கருத்துகளை இங்கு பதியவும், நான் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன், இதில் எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்]