Pages

Tuesday, February 26, 2013

எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம்.

  (ஒரு கிராமத்து 'ஆட்டோகிராப்' இன்று வெவ்வேறுபட்ட உருவத்தில் தொடர்கிறது இதற்குப் பெயர் காதலா? அல்லது இதற்குப் பெயர் என்ன?)

"ஹலோ!"
தம்பி...நான் அப்பா பேசுறேன்.

"ம்ம்ம்" சொல்லுங்கப்பா!

"அம்மா உன்கிட்ட பேசணுமாம் நீ வீட்டுக்கு போன் பண்ணுப்பா!"

"சரிங்கப்பா, நான் இப்போது வேலையில் இருக்கேன் மலையில் பேசுகிறேன். ஏன்ப்பா அம்மாவுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? ரொம்ப அவசரமா பேசணுமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீ பொறுமையாகவே பேசுப்பா, நான் வச்சுடுறேன்."

"ம்ம்ம் சரிப்பா!"

     ஆமாம்  இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை, எப்ப பார்த்தாலும் ஊருக்கு எப்ப வர? நான் மூச்சோட இருக்கும்போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி உன்னோட குழந்தையையும் பார்த்துட்டேனா என் ஆத்மா சாந்தியடையும் என்று புலம்பிகிட்டே இருப்பாங்க. என்று சலித்துக்கொண்டான் சுரேஷ்.

ஆமாங்க சுரேஷ்கூட பிறந்தவர்கள் நான்குபேர். ஒரு அண்ணன் இரண்டு அக்கா எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. குழந்தையும் ஆச்சி, இவன்தான் கடைசிப்பையன் இவங்க அம்மாவுக்கு இருக்கும் ஒரே கவலையே கடைசி பையனுக்கும் திருமணம் முடிசிடனும், அவனுடைய குழந்தையையும் பார்த்துவிட்டால் இந்த ஜென்மத்தின் வேலை முடிந்துவிட்டது என்று சொல்லிக்கொள்வாள். சுரேஷ் துபையில் வேலைப்பார்த்து வருகிறார், அம்மாவின் இந்த புலம்பலுக்கு பயந்துக்கொண்டே ஐந்து வருடமாக ஊருக்கே போகவில்லை. இதுமட்டும் காரணம் இல்லை. காதலித்த பொண்ணை கட்டி விட்டுவிட்டு வரமுடியாமல் இரண்டு வருடத்தில் வந்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தான். அவளின் பெற்றோர்களுக்கு அவசரம் தாங்காமல் இவன் வர நாள் ஆகும் அதுவரை வயசு பொண்ணை வீட்டில் வைத்திருப்பது 'மடியில் நெருப்பை கட்டி வைத்திருப்பதுபோல் உள்ளது' என்று மகளை கட்டாயப்படுத்தி தனது சொந்த அண்ணன் பயனுக்கே திருமணம் முடித்து வைத்துவிட்டாள் அவளின் அம்மா.
விருப்பம் இல்லை என்றாலும் திருமணம் செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலை அவளும் கடைசியில் ஒத்துக்கொண்டாள்.

சுரேஷ் காதலித்த காலத்தில் மொபைல் போன் வசதி இல்லை, அவளின் திருமணத்தின்போதும் இவர்களால் மனவிட்டு பேசமுடியவில்லை. ஆனால் அவளுக்கு திருமணம் முடிந்தபிறகு அவளின் கணவர் வெளிநாடு சென்றதால் அவளிடம் போன் கொடுத்துவிட்டு போனார். எப்படியோ? யார்யாரிடமோ கேட்டு கடைசியாக சுரேஷ் நம்பரை வாங்கி ஒருநாள் போன் செய்தாள். நான்கு வருடத்திற்கு பிறகு....

"ஹலோ!"

"ஹலோ!" யாருங்க?

"என்ன சுரேஷ் மாமா என்குரல் மறந்துபோச்சா?"

"ஏய்! ....................."
(வார்த்தைகள் வரவில்லை, ஒருபக்கம் கோபமும், மறுபக்கம் ஒரு பொண்ணு  எப்படி போராடமுடியும் அதுவும் நம்ம கிராமத்தில் என்று மனதை சற்று தேற்றிக்கொண்டு கேட்டான்.)

"எப்படி இருக்க சந்தியா?"

"நான் நல்லாருக்கேன் மாமா, நீங்க எப்படி இருக்கீங்க?"

"நானும் நலம். உன் கணவர் எப்படி இருக்கார்? உனக்கு குழந்தைகள் இருக்கிறதா?"

"அவர் நால்லாருக்கார், இப்ப சிங்கப்பூரில் இருக்கார், ஒரு பையன் இருக்கான், இப்போது வயிற்றில் ஒன்னும், ஏழு மாதம்."

"அடிப்பாவி அதுக்குள்ள ஆண்டியாகிட்டியே? அதுக்குள்ள இரண்டா?"

"ம்ம்ம், உங்களை மாதிரி அவர் என்ன படிச்சிருக்காரா? கணக்கு பண்ணி புள்ளை பெத்துக்க? கல்யாணம் பண்ணிய உடனே குழந்தை இருந்தது. இப்ப அவர் போகும் முன்பு நாள் தள்ளிப்போச்சி, போய் செக் பண்ணியபோது 'கன்பார்ம்' பண்ணிட்டாங்க, சரி இதுவும் இருக்கட்டும் என்று சொல்லிட்டு போய்ட்டார் நான் என்ன செய்வது."

"ம்ம்ம் சரி சரி வருசத்துக்கு ஒண்ணா பெத்துப்போட்டு மக்கள்தொகையை கூட்டுங்க, சைனாக்காரன பின்னுக்குத்தள்ளிட்டு இந்தியா முதலிடம் பிடிக்கட்டும்."

"ஐயே! உங்களுக்கும் திருமணம் ஆகட்டும் அப்பறம் சொல்கிறேன். நீங்க என்ன செய்றீங்கன்னு."

"..................."

"என்ன மாமா பேச்சே காணும்?"

"எனக்கா? திருமணமா? அதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை."

"யோவ்! என்ன சொல்றீங்க? இன்னும் என்னை மறக்கவே இல்லையா?"

"அடி போடி! ஏதாவது திட்டிட போறேன். அதுக்குள்ள போனை வச்சிட்டு ஓடிப்போய்டு!"

இப்படி  பேசிக்கொண்டிருக்கும்போது அவளின் போனில்காசு முடிந்துபோக தானாகவே கட் ஆனது. நாம் திட்டியதால்தான் போனை கட் செய்துவிட்டாள், இதைவிட எவ்வளவோ பேசிருக்கோம் இப்ப மட்டும் எங்கிருந்து வந்தாதாம் இவ்ளோ கோபம் என்று அவளின்மேல் கொஞ்சம் நஞ்சம் இருந்த காதலையும் தூக்கி எறிந்தான். ஐயய்யோ! காசு முடிந்துவிட்டதே! அவர் போன் பண்ணுவாரா? சரியான நேரத்தில் போன் கட் ஆகிவிட்டதே என்ன செய்வது என்று புரியாமல், சரி  அவருக்குதான் இப்ப நம்பர் தெரியுமே நம் மீது பாசம் இருந்தால் அவரே போன் செய்யட்டும் என்று இவள் சுரேஷ் போனுக்காக காத்திருந்தாள்.

காலம் நகர்ந்தது, இவளும் போன் செய்யவில்லை, அவனும் போன் செய்யவில்லை. ஒருநாள் தற்செயலாக அவளின் சொந்தக்காரர் ஒருவர் மூலமாக அவளுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கேள்விபட்டான். சரி இன்னைக்கு போன் செய்து பேசலாம் என்று பேசினான்.

"ஹலோ!"

"ஹலோ!" சொல்லுங்க மாமா ...!

"என் குரல் மறக்கவில்லையா?"

"உங்களையே மறக்கவில்லை, உங்க குரலை எப்படி மறப்பேன். அன்னைக்கு காசு முடிந்து கட் ஆகிவிட்டது. அப்பறம் நீங்களே பண்ணுவிங்கன்னு எதிர்பார்த்து காத்திருந்தேன், நீங்க பண்ணவே இல்லை, சரி அவர் நம்மளை மறந்துட்டார் நாம எதற்கு ஞாபக படுத்தணும் என்று விட்டுட்டேன் ."

"ஐயோ! நான் திட்டிய கோபத்தில்தான் நீ போன் கட் பண்ணிட்ட என்று நானும் கோபத்தில் போன் செய்யவில்லை. இப்ப உங்க சொந்தகாரர் ஒருவர் மூலம் உனக்கு குழந்தை பிறந்துள்ளதை கேட்டு போன் செய்தேன். சாரிடா! ப்ளீஸ்."

"இப்படிதான் நீங்களாகவே ஏதாவது முடிவு பண்ணிக்கிறது."

"அப்பறம் என்னவாம், நீ எனக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறி கல்யாணம் பண்ணிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்."

"யார் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா? நானா அட போயா! நான் செத்திருந்தா நீ இன்னைக்கு என்கிட்ட பேசவே முடியாது."

"ஏய்! என்ன சொல்ற.............?"

"அதெல்லாம் பெரியக்கதை...!"

"என்ன நடந்தது? "

"அதுவா?
நான் கல்யாணம் செய்துக்க முடியாது என்று சொல்லி மருந்து சாப்பிட்டுட்டேன். உங்களுக்கு போன் செய்து பேச உங்ககிட்ட நம்பர் இருக்கா இல்லையா என்றே தெரியாது. கடிதம்போட அட்ரஸ்கூட இல்லை அப்பறம் எப்படி உங்ககிட்ட என் மனதில் உள்ளதை சொல்லமுடியும். நீங்களும் எங்க வீட்டுக்கு பயந்துகிட்டு ஒரு கடிதம் கூட போடவில்லை, எங்கவீட்டில் போன் வந்த பிறகு யார் யாரோ போன் செய்வாங்க, ஆனால் நீங்க ஒருநாள் கூட செய்யவில்லை, சரி உங்களுக்கு நம்பர் எப்படி தெரியும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். கடைசியில் கல்யாணம் என்று வந்ததும் வேறு வழி தெரியாமல் இறந்துவிட முடிவு செய்தேன். அப்பறம் எப்படியோ என்னை காப்பாத்திட்டாங்க, இந்த கல்யாணம் நடக்கவில்லை என்றால் நாங்க உசுரோடவே இருக்கமாட்டோம் என்று சொல்லி அப்பா அம்மா என்னை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். தாலிகட்டும் வரை உங்களிடம் இருந்து எந்த ரூபத்திலாவது தொடர்பு கிடைக்கும் என்று காத்திருந்து ஏமார்ந்தேன். என்று சொல்லிமுடித்துவிட்டு அழுதாள்...."

" சந்தியா.....! சாரிடா!, நான் உன்னை தவறாக நினைத்துவிட்டேன் காதலிக்கும்போது என்ன என்னவோ பேசினாள் இப்போது திருமணம் என்று வந்ததும் என்னை மறந்துவிட்டாள் என்று திட்டிருக்கேன்."

"நினைச்சேன்! நீங்க இப்படிதான் நினைப்பிங்க என்று..!"

"சரி சந்தியா, இப்பவாவது எனக்கு உண்மை தெரிந்ததே! சந்தோஷம் இப்பவே நான் துபாய் வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது. அம்மா எப்பவும் ஊருக்கு கூப்பிட்டுகிட்டே இருக்காங்க!"

"ஏன் மாமா வராம இருக்கீங்க, நீங்க இத்தினை வருடமா வராமல் இருந்ததால்தான் நான் உங்களுக்கு போன் செய்தேன். நீங்க இப்படிதான் என்மேல் கோபமா இருப்பிங்க அதனால்தான் வரவில்லை என்று தெரியும். நான் அன்னைக்கே இதையெல்லாம் சொல்லி புரியவைக்க நினைத்தேன் ஆனால் காசு முடிய எல்லாம் சொல்லாமலே முடிந்துவிட்டது."

"நீ இப்படி தெளிவா யோசிப்பதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு."

" சரி மாமா, அப்படியே நான் சொல்வதையும் கேளுங்க, நீங்க ஊருக்கு வந்து கல்யாணம் பண்ணிக்கோங்க, அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்கச் சொல்லுங்க. நாம இருவரும் காதலித்தோம் ஆனால் சரியான தொடர்பு இல்லாததால் பிரிந்துவிட்டோம், இதை நாம புரிஞ்சிக்கனும், இனிவரும் காலம் நான் சந்தோஷமாக வாழனும் என்றால் கண்டிப்பா நீங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும். இல்லை என்றால் உங்களுக்கு நம்ம்பிக்கை துரோகம் செய்ததை நினைத்து நினைத்தே நானும் செத்துடுவேன்."

"சரி சரி அப்படியே நீயே ஒரு பொண்ணும் பார்த்து சொல்லு."

"இதெல்லாம் என்னால் முடியாது, நாம இரண்டுபேரும் இருக்கும் போட்டோவை பார்த்துவிட்டு நான் செம அடி வாங்கிருக்கேன் அவர்கிட்ட, அதனால் இதெல்லாம் சரிபட்டு வராது. உங்க கல்யாணத்துக்கு வருவேன் எப்படியாவது அதற்காக அடிவாங்கினாலும் சரி."

" சரிப்பா, நான் அம்மாகிட்ட சொல்கிறேன். நான் கூடிய சீக்கிரம் ஊருக்கு வருவேன்.கண்டிப்பா உன்னை வந்து பார்ப்பேன்."

"கண்டிப்பா வாங்க, என் வீட்டுக்கே வாங்க, எனக்கு ஒரு மாமாவாக மட்டும் 'காதல்' கத்திரிக்காய் எல்லாம் இன்னைக்கே மறந்துடுங்க.."

"ம்ம்ம் "சொல்லிவிட்ட காதல்தானே!, நாம் காதலில் செய்த்துவிட்டோம் இணைந்து வாழ்வதில் தோற்றுவிட்டோம். இதற்கு காரணம் நாம் இருவரும் இல்லை, பெற்றோர்கள், இன்னைக்குபோல் அன்னைக்கு தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை, நமக்கு இருவருக்கும் இருந்த தூரம். இதெல்லாம்தான் காரணமாக இருக்கமுடியும். இருந்தாலும் நானும் ஒரு நல்ல பொண்ணை காதலித்திருக்கிறேன் என்ற சந்தோசத்திலேயே வாழ்வேன்."

"நானும்தான்"

"சரிப்பா, நான் இந்த வருடம் முடித்துவிட்டு அடுத்த வருடம் வருகிறேன், அனால் திருமணம் எல்லாம் இப்போது கிடையாது, இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று இருக்கேன்."

" ஓ! அப்படியா ! ஏன் என்ன ஆச்சி? ஏன் தள்ளிபோடுறிங்க?"

"இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும், வேலையில் கொஞ்சம் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன், அதைவிட இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம், எந்த பொண்ணை காதலிக்கிறேன்,யாராவது தூக்கிட்டு போகும் முன்பு நாம கல்யாணம் முடிக்கணும் என்று அவசரம். இருந்த ஒரு பொண்ணையும்தான் பறிகொடுத்துவிட்டு நிக்கிறேன்."

"யோவ்! நான் இவ்ளோ சொல்லியும் இன்னும் மறக்கவில்லையா? என்மேல சத்தியமா இனி இந்த ஞாபகமே இருக்ககூடாது, என்மேல சத்தியம் பண்ணுங்க.." அதுக்காக என்னிடம் பேசக்கூடாது என்று சொல்லவில்லை எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவர் இங்கு இருக்கும்போது மட்டும் வேண்டாம்."

"வேண்டாம்பா நான் அதிகமா போனும் செய்யலை, எப்பவாவது விஷேசம் என்றால் பேசுகிறேன், அல்லது மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை பேசுகிறேன்."

"ஏன் மாமா, ரொம்ப விலகிப் போறீங்க?"

"இது விலகல் இல்லை, இப்படி இருந்தால்தான் நாம் இருவருக்குமே நல்லது."

"சரி மாமா, உங்க இஷ்டம்."

இப்படிதான்  சுரேஷ் காதல் கை நழுவிப்போனது. என்னதான் வாயால் பெரிய பெரிய வசனம் எல்லாம் பேசினாலும், முதல் காதல் இல்லையா இருவராலும் மறக்கமுடியவில்லை, இருவர் மனதிலும் ஆழமாக பதிந்துதான் கிடக்கிறது. மனதில் உள்ள வார்த்தைகளை வெளியில் பேசமுடியவில்லை. சுரேஷ் ஐந்து வருடமாக ஊருக்கு போவாததற்கு இதுவும் ஒரு காரணம். இருந்தாலும் அம்மாவிடம் சொல்லிவிட்டான் நீங்க எந்த பொண்ணை பார்த்தாலும் நான் கல்யாணம் செய்துகொள்கிறேன். ஆனால் கல்யாணத்துக்கு முன்பு நான் அவளிடம் தனியாக பேசவேண்டும் என்ற ஒரு கண்டிஷன் மட்டும் போட்டான். அதற்கு அம்மாவும் சரிப்பா நான் இரண்டு மூன்று இடத்தில் பார்த்து வச்சிருக்கேன் நீயே வந்து பேசி முடிவு செய் என்று சொல்லிவிட்டாள்.

சுரேஷ் மாலை வீடு வந்ததும் மறக்காமல் அம்மாவுக்கு போன் செய்தான்.

" ஹலோ அம்மா!"

"ஹலோ சொல்லுப்பா!"
(என்று சொல்லும்போதே அழுகை)

"என்னம்மா போன் செய்ய சொன்ன?"

"என் உடம்புக்கு ஒன்னும் முடியலப்பா, சரியா நடக்ககூட முடியவில்லை, ஆஸ்பத்திரிக்கு போனேன், வயசாகிவிட்டதுஇனி எந்த மருந்து கொடுத்தாலும் சரியாக வேலை செய்யாது என்று சொல்லிவிட்டார்கள்."

"நல்லா நேரா நேரத்திற்கு சாப்பிடும்மா, எந்த கவலையும் வேண்டாம்."

"உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டா எனக்கு எந்தகவலையும் இல்லை, அதுக்காகத்தான் இந்த கட்டை கிடந்தது கஷ்டப்படுது."

"சரிம்மா பொண்ணு பார்த்தாச்சா? சொல்லுங்க நான் லீவு கேட்டுவிட்டு ஊருக்கு வருகிறேன்."

"இரண்டு மூன்று பொண்ணு பார்த்திருக்கேன், எல்லார்கிட்டயும் உன்னோட போட்டோ எல்லாம் கொடுத்திருக்கேன். நேரில் பார்த்துட்டுதான் முடிவு சொல்வேன் என்று சொல்லிருக்காங்க, நீ இல்லாமல் எப்படி பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணமுடியும்."

"சரிம்மா கவலைவேண்டாம். நான் கூடிய சீக்கிரம் வருகிறேன்.ஆனால் இப்ப வந்தால் லீவு அதிகம் கிடைக்காது. "

"எனக்கு ரொம்ப முடியலப்பா, வந்து உன் முகத்தையாவது காட்டிவிட்டு போ, முடிந்தால் பொண்ணைப் பார்த்து நிச்சயம் பண்ணு இல்லை என்றால் அப்பறம் பார்த்துக்கலாம்."

"சரிம்மா, இன்னும் ஒருவாரத்தில் சொல்கிறேன். எப்ப வருகிறேன் என்று."

"இன்னும் ஒரு வாரத்திலா?அப்பாடா இப்பவே எனக்கு முழு உடம்பும் சரியாபோச்சி, வாப்பா வா"

"சரிம்மா வச்சுடுறேன்."

"சரிப்பா, நல்லா நேரா நேரத்திற்கு சாப்பிடு, எண்ணெய் தேய்த்து குளி, அப்பதான் உடம்புக்கு குளிர்ச்சி."

"சரிம்மா, ஓகே ."

இப்படியாக பேசி முடித்தான் சுரேஷ். இனியும் அம்மாவிடம் அதை இதை சொல்லி ஏமாற்ற முடியாது என்று தெரிந்தது.ஊருக்கு போக முடிவு செய்தான். அம்மாவும் இவனுக்காக பொண்ணு தேட தீவிரமாக இருந்தார். மனதில் யோசித்தாள் சொந்த பந்தத்தில் பொண்ணு இருக்கா? அல்லது யாராவது தெரிந்தவர்கள் வீட்டில் இருக்கிறதா? என்று பலபேருக்கு போன் செய்தாள், என் மகன் அடுத்தவாரம் வருகிறான், லீவு குறைவாம் அதனால் அதற்குள் கல்யாணம் முடிச்சிடனும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

'அம்மா' பாஸில் ஊருக்கு போய்ட்டு வரும்போது எப்பவும் ஒரு பொண்ணு அம்மாவுக்கு உதவி செய்யும், அந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம், அதைக்கேட்டு பரிதாப பட்ட அம்மா அவளிடம் எப்போதும் அன்பாக பேசினாள், அந்த பொண்ணு டைலர் கிளாஸ் படிக்க போய்ட்டு வருகிறாள் என்பதும் தெரிந்தது. பேச்சு நாளடைவில் அதிகமாக, ஏன் இந்த பொண்ணையே நம்ம சின்ன பையனுக்கு பேசி முடிக்ககூடாது என்று முடிவு செய்தாள். ஒருநாள் சுரேஷ் போட்டோவை காட்டி இதுதான் எனது இளைய மகன் என்று சொன்னதும், ஆஹா நல்லைருக்கார் அம்மா, என்று சொன்னதும். அம்மாவுக்கு இவளிடம் எப்படி கேட்பது என்று புரியாமல், நான் இன்னைக்கு உன் வீட்டுக்கு வரட்டுமா அம்மா என்று கேட்டாள், கண்டிப்பா வாங்கம்மா, தாத்தாதான் இருக்கார், ஒரு தங்கை அவளும் ஸ்கூல் முடித்து வந்திருப்பாள் என்று அழைத்துச் சென்றால். அங்கு சென்றது அவளது தாத்தாவிடம் உங்க பேத்தியை பஸில் போகும்போது வரும்போது பழக்கம், ரொம்ப பிடிச்சிபோச்சி, இது என் பையன் போட்டோ என் பையனுக்கு உங்க பேத்திய கேட்கலாம் என்று வந்தேன் என்று சொன்னாள். தாத்தாவும் அதற்கென்ன போட்டோ கொடுங்க, பையன் நேரில் வரட்டும் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்று சொன்னார். இதை கேட்ட பிரியாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, இவ்ளோ நல்ல அம்மா நமக்கு மாமியாரா? அப்படியென்றால் அவங்க பையனும் இவங்களைப்போலத்தான் இருப்பார் என்று சம்மதம் தெரிவித்தாள்.

மறுநாள் முதல் அம்மா என்று அழைக்காமல் அத்தை என்று அழைத்தால், அப்பவே அம்மாவுக்கு புரிந்துவிட்டது இவளுக்கு மனப்பூர்வமாக சம்மதம் என்பது. சரி உங்க அப்பா என்ன செய்கிறார் என்று கேட்டதும் அவர்...அவர்.. வேறு ஒரு கல்யாணம் செய்துக்கொண்டார் என்று சொன்னாள் இதைகேட்ட அம்மாவுக்கு அதிர்ச்சி, இப்ப எங்க இருக்கிறார், உங்களை பார்க்க வருவாரா? என்று எல்லாம் விசாரித்தாள், எல்லா செய்தியும் தெரிந்துகொண்டு போகும்போது அத்தை உங்க வீட்டில் போன் இருக்கா என்று கேட்க, இருக்கும்மா என்று சொல்ல நம்பர் கொடுங்க அத்தை,என்றது மறுக்கமுடியாமல்நம்பர் கொடுத்தாள். இந்த செய்திகளை எல்லாம் வீட்டில் வந்து அப்பாவிடம் அண்ணன் அண்ணியிடம் சொன்னதும், அப்பா அந்த குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். விசாரித்ததில் மனசுக்கு திருப்தி இல்லாமல் போனது, அதனால் இருக்கட்டும் பிறகு பேசிக்கலாம் என்று தற்காலமாகநிறுத்தி வைத்தார்.

ஆனால் அம்மா சும்மா இருக்கவில்லை, அம்மா அவளுக்கு போன் செய்வதும், அவள் அம்மாவுக்கு போன் செய்வதுமாக இருந்தார்கள். பையன் வரட்டும்மா வந்ததும் உன்னை பிடித்திருந்தால் நீதான் என் வீட்டு மருமகள் என்று சொல்லிவைத்திருந்தாள். இதுவும் கடந்த ஆறு மாதமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த செய்தி சுரேஷ்க்கு தெரியாது. அம்மாவுக்கும் அண்ணிக்கும் மட்டும்தான் தெரியும்.

கடைசியாக அம்மாவின் விடாத போன் தொல்லையால் சுரேஷ் ஊருக்கு சென்றான். போன மறுநாள் முதல் அம்மா ஒவ்வொரு பெண் லிஸ்டாக சொன்னாள் , இன்னைக்கு இந்த இரண்டு பொண்ணுகளையும் போய் பார்த்துட்டு வா, என்று கூடவே ஒரு வீடு தெரிந்த பையனையும் அனுப்பி வைத்தாள். பெண் பார்க்கும் விருப்பம் இல்லாதபோதும் அம்மாவின் கட்டாயத்துக்காக போய் பார்த்தான் முதல் பெண், ஒருவகையில் சொந்தம், பார்த்துவிட்டு வரும்போது அம்மா எப்போதும் போனில் பேசிய பிரியா வீட்டிற்கும் போய் பார்த்தான், வீட்டில் யாரும் இல்லை அந்த பொண்ணும் பக்கத்துவீட்டு அக்க்கவும்தான் இருந்தாங்க, ஒன்னும் பேசவில்லை, சரி இன்னொருநாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான்.



தொடரும்......
**********************************நன்றி, மீண்டும் சந்திப்போம்.***************************






7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ப்ரியாவின் ஆசை அவ்வளவு தானா...? ஒருவேளை மனதில் இன்னும் சந்தியா இருக்கிறார்களோ...?

”தளிர் சுரேஷ்” said...

ரொம்ப விரிவா இருக்கு முதல் பகுதி! சுவாரஸ்யமாவும் இருக்கு! தொடருங்கள்!

இராஜராஜேஸ்வரி said...

எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் பரபர என்று
கதையின் போக்கு அருமை ..பாராட்டுக்கள்..

குட்டன்ஜி said...

//*நன்றி, மீண்டும் சந்திப்போம்.*//
சந்திச்சுத்தானே ஆகணும்?என்ன நடந்ததுன்னு தெரிய வேண்டாமா?

Jayadev Das said...

நல்லாயிருக்கு செம்மலை...........

Unknown said...

நல்ல கதை
இதனுடைய தொடர்ச்சி எப்போது வரும்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

உங்களையே மறக்கவில்லை! என்றன் உள்ளம்
உம்குரலை மறந்திடுமோ? என்ற சொற்கள்
பொங்கலையே நமக்கீந்தே இனிமை கூட்டும்!
புலமைக்கு விருந்தாகும்! இன்தேன் ஊறும்!
தொங்கலையே எவ்வரியும்! துணிந்து நின்று
தொடருங்கள்! தொடா்கின்றோம்! கதையைச் சொல்லி
எங்களையே கயிறுகொண்டு கட்டி வைத்தீா்
இன்றமிழின் செம்மலையே வாழ்து கின்றேன்!

Post a Comment