Pages

Tuesday, November 13, 2012

மொய் இல்லாமல் திருமணம் செய்வோம்.


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 



                 நம்ம ஊர் பக்கம், ஒருசில சின்னச் சின்ன பழக்க - வழக்கங்கள் எல்லாம் சாதாரணமாகவே தெரிந்தாலும், சமயத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்...



             நமது உறவினர்களின் வீட்டில்  நடைபெறும் காதணித் திருவிழா, புதுமனைப் புகுவிழா, திருமணம், மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் பிறந்தநாள் விழா, இப்படி இன்னும் சில நிகழ்ச்சிகளும் இருக்கிறது. எல்லாமே அற்புதமான மங்களகரமான விழாக்கள் கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  இதுபோல் சில சந்தோஷமான இடங்களில்தான் நமது உறவினர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும். பிகர்களையும்தான் முக்கியமானதை ஏன் முதல்ல சொல்லவில்லை என்று வருத்தப் படவேண்டாம். வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமல், குடும்பத்தின்  முழுப் பொறுப்பையும் சுமந்துக்கொண்டு, வீட்டுவேலை முடிந்தால் காட்டுவேலை; காட்டுவேலை முடிந்தால் வீட்டுவேலை; என்று விடாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் குடும்ப பெண்மணிகளுக்கு, தங்களது உறவுகளையும், உடன் பிறப்புகளையும் சந்தித்து தனது கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்துக்கொள்ளக் கிடைக்கும் ஒரு சந்தோஷமான நாளும் இதுதான். அப்படியே சைக்கிள் கேப்ல தன் மகனுக்கு பொண்ணு பார்ப்பதும், மகளுக்கு நல்ல வரனைத் தேடுவதும்கூட இங்குதான். எப்போதும் வேலை வேலை என்று அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் ‘ஓடியோடி’ அயராது உழைக்கும் நமது அன்பு சகோதர – சகோதரிகளும்,  தங்களது மெஷின் வாழ்க்கையிலிருந்து சற்று விடைபெற்று இளைப்பாறும் இடமும் இதுதான். நான் ஆபீஸ்ல மேனேஜரா இருக்கேன், நான்தான் அங்கு எல்லாமே அதனால எனக்கு லீவு கிடைப்பதேயில்லை என்றெல்லாம், தன்னை பெருமைப்படுத்திக் கொள்ளும் இடமும் இதுதான். நெட்ல மொக்கை போடுவதையும், போன்ல கடலைப் போடுவதையும் சத்தியமா இங்க சொல்லவே மாட்டோம்.




           சில வசதி – வாய்ப்புடன் வாழுபவர்கள் இந்தநாளில்தான் தங்களது பலத்தையும், பெருமையையும் காட்டிக்கொள்ளக்கூடைய நாளாக கருதுகிறார்கள். குறிப்பாக  பெண்கள் இதுபோல் வரும் விழாக்களில் கலந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதோடு, மிகவும் சந்தோஷப்படுவார்கள். இப்படிபட்ட இடங்களில்தானே தங்களுடைய ஆடை – ஆபரணங்களை, அரங்கேற்றம் செய்யமுடியும். முழுவதும் தங்கமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, பகுதித் தங்கமும், ஏதாவது புதிய மாடல்கள் இல்லை என்றால், அதற்குப் பதிலாக, சில கவரிங் நகைகளையும் கலந்து வரிசையாக அடுக்கிக்கொள்வார்கள், பார்வைக்கு  அப்படியே ஒரு நகைக்கடையே நடந்து வருகிற மாதிரி இருக்கும். ஆனால் தொட்டுப்பார்க்க மட்டும் விடமாட்டார்கள், கவரிங் என்று தெரிந்துவிடுமே!. ஆண்களும் மது, மாது என கண்டு மகிழ தங்களிடம் உள்ள ஆடைகளிலேயே புதியதை எடுத்து காஞ்சி போட்டு அயன் பண்ணி, மடிப்பு கலையாமல் உடித்திக்கொண்டும், தலைமுடியில் சில மாற்றம் வேண்டுமே என்று வெள்ளை முடிகளுக்கு மைதடவி கருப்பாக்கியும், கருப்பு முடிகளுக்கு கலர்கலரா வர்ணம் பூசி செம்பட்டையாக்கியும், தாடியியிலும் சில  மாற்றங்கள் வேண்டாமா?, கட் கட் தாடி, கரப்பான்பூச்சி தாடி, ரவுண்ட் சைஸ் தாடி, ரங்கீலா தாடி என பல வகையில் மாற்றம் செய்துக்கொண்டும், சிலர் மீசையோடும், சிலர் மீசை இல்லாமலும் அவரவருக்கு பிடித்த வகையில் தங்களை தயார் செய்துக்கொண்டு வருவார்கள். தங்களிடம் கார் இருப்பவர்கள் காரிலும், கார் இல்லாதவர்கள் நண்பர்களிடம் கார், பைக் என கடன் வாங்கியும், சொந்தமா ஒரு நல்லச் சட்டை இல்லை என்றாலும் ‘கெத்து’ போயிடுமே என்பதற்காக  வாடகைக்காவது ஒரு சட்டையை  வாங்கிஉடுத்திக்கொள்வார்கள், சிலர் நண்பனின் சட்டையை போட்டுக்கொண்டு ஒரு கெத்தொடு வந்து இறங்குவார்கள்.

     வீட்டில் மட்டுமே ராணியாகத் திகழும் குடும்பப் பெண்கள் எப்போதும், சதா பெட்டியிலேயே வைத்து அழகுப் பார்க்கும் பட்டுப் புடவையை எடுத்து சுற்றிக்கொண்டும், எப்போதோ! கணவன் வாங்கி கொடுத்த சில தங்க நகைகளை அணிந்துக்கொண்டும், அவர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஒரு கெத்தோடு வந்து சேருவார்கள், நம்ம இளவட்டங்கள் வந்திருப்பதிலேயே நல்ல பிகர் எதுவென்று தேடிபிடித்து, சும்மா ஒரு பார்வை வீசுவதும், திரும்பி பார்த்த பிகரை அது என் ஆளுடா மச்சின்னு, சொல்லி ஜொள்ளு விடுவதிலும், ஊர் பேர் விசாரிப்பது, சும்மா கடலை போடுவது என அவர்கள் அவர்களுடைய காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். எல்லோரும் இப்படி வருவதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது, அதுதான் இந்த நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் போட்டோவும், விடியோவும்தான். வாழ்த்த வருகிறார்களோ இல்லையோ போட்டோவுக்கு கண்டிப்பா போஸ் கொடுக்க வந்திடுவாங்க.

           ‘திருமணம்’ என்றால் பெண்ணைப் பெற்ற தாய் – தகப்பன்கள்,  எல்லாம் சரியாக கொடுத்துவிட்டோமா? சீர் வரிசையில் ஏதாவது மாப்பிள்ளை வீட்டார்கள் ஏதாவது  குறை கண்டுப்பிடித்துவிடுவார்களா? நமது சொந்த பந்தங்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா? என்று மனதில் பல எண்ணங்கள் ஓடியப்படியே, வெளியில் புன்னகையோடு வருகின்ற உறவினர்களை வரவேற்பு செய்வதில் பிஸியாக இருப்பார்கள். மாப்பிள்ளையை பெற்ற தாய் – தகப்பன்கள் வருவோரை வரவேற்றும், வரப்போகும் மருமகப் பெண்ணையும்விட கண்ணும் கருத்துமாக, பொன்னையும் - பொருளையும், பாதுகாப்பார்கள். இப்படி பலரும் பல நினைவுகளுடன் , உறவினர்களிடம் வாய் பேசி, மணமக்களை கண் பார்க்க, அடிக்கடி சட்டைப்பையை தொட்டுப் பார்த்துக்கொள்வார்கள், மொய்ப்பணம் எழுத காசு இருக்கிறதா? என்று. எப்படா சாப்பாடு கிடைக்கும் என்று காத்துக்கிடக்கும் ஒரு கூட்டம் அடிக்கடி தன் அடிவயிற்றை தொட்டுப்பார்த்துக்கொள்ளும்.

            ‘காதணித் திருவிழா’ என்றால், குழந்தையை பெற்றத்தகப்பன்  தாய் மாமன் சீர் வரிசையை சரியாக செய்திருப்பானா மச்சான், நாம் செய்த ‘மொய்ப்பணம்’ எல்லாம்  திருப்பிக் கிடைத்துவிடுமா? அல்லது ஏமாற்றிவிடுவார்களா? என்ற எண்ணம் மனதில் ஓட மரியாதைக்காக வாங்க வாங்க என எல்லோரையும் வரவேற்று, ‘வாங்க மச்சான்’ வந்து உக்காருங்க உங்க மடியில் உக்கார வைத்துதான் உங்க மருமகனை (அ) மருமகளை காது குத்தனும், ‘வாங்க மச்சான்’ வந்து உட்க்காருங்க என்று சொல்லி, பொலி கொடுக்க போகும் ஆட்டிற்கு மாலைப் போடுவதைப்போல் இவருக்கும் போட்டு, தண்ணீரைத் தெளித்து (வெட்ட) காதுகுத்த தயராக இருக்கும்நிலையில்,  அப்படியே விளையாட்டுபோல சொல்வார் பாருங்க ஒரு ‘டைலக்கு’ நீங்க கொடுக்கும் சீர் வரிசை வச்சித்தான் மச்சான், உங்க மருமகனை (அ) மருமகளைப் படிக்க வச்சி ஆளாக்கனும் என்று சொல்லி சிரிப்பார். அங்கு கூட்டத்தில் ஒருவர் அதுக்கென்னயா அவருக்கு இருப்பதே ஒரேஒரு தங்கை , இந்த பிள்ளைகளுக்கு செய்யாமல் வேரு யாருக்குயா செய்யப் போறார், சும்மா பேசிக்கிட்டு இருக்காம சட்டுப்புட்டுன்னு நல்ல நேரத்துல காது குத்தகிற வேலையை பாருயா! என்பார். கூட்டத்தில் இன்னொருத்தர் அதுக்கென்ன, அவர் பையனுக்கே உங்க பொண்ணை கட்டிகொடுத்துட்டா எல்லாச் சொத்துமே உங்க பொண்ணுக்குத்தானே! அவர் சப்பாதிப்பது உள்பட என்று கிண்டலாக சொல்வார். அப்படியே கூத்தும் கும்மாளமுமாக விழா நடைபெறும். இந்த கிண்டலுக்கு இடையில் ‘தாய் மாமன்’ வெயிலும் - மழையும் அவர்மேல் மட்டும் பெய்வதாக உணர்வார்.

               இப்படியே ஒவ்வொரு விழாவும் சிறப்பாக நடக்கும், எல்லோருக்கும் கொண்டாட்டமாக இருக்க,  இதில் ‘சீர்’ செய்பவர்கள் பாடு மட்டும் திண்டாட்டமாக இருக்கும். இங்கு ‘சீர்’ செய்பவர்கள் யார் யார் என்றால். பெண்ணை பெற்ற பெற்றோர்கள், கல்யாண ‘சீர்’ கொடுக்கவேண்டும்,  இவர்களுக்கு பெண்ணின் கல்யாணம் என்றால் ‘சீர்’ செய்யவேண்டும் என்பது முன்பே தெரியும் அதனால் தேவையான அளவுக்கு சேர்த்துவைத்திருப்பார்கள் அல்லது இது நமது கடமை என்று நினைத்து எப்படியாவது கடனை – கிடனை வாங்கி கல்யாணத்தை முடித்துவிடுவார்கள். 

             ‘முறைமாமன் சீர்’ செய்வது வழக்கம் என்பதால் மாமன் எப்படியாவது செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தால் அவரும் எப்படியாவது கடனை – கிடனை வாங்கி ‘சீர்’ செய்துவிடுவார். தங்கையின் குழந்தைக்குதானே என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று செய்பவர்களைவிட ஊர்காரர்கள் முன்பு தன்மானம் போய்விடக்கூடாது என்பதற்காக செய்பவர்களே அதிகம். இவைகள் எல்லாம் இப்படி இருக்க விழாவில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.

              திருமணங்கள் வந்தாலும், காதணித் திருவிழா வந்தாலும் வேறு எந்த விழாக்கள் வந்தாலும் ஒரு குறிப்பிட்டத் தொகையை மொய் எழுதவேண்டும், என்பது நமது முன்னோர்கள் நமக்கு ‘பாக்கி’ வைத்துவிட்டுப்போன பண்பாடு. என்னது ‘பாக்கி’ வைத்துவிட்டுப்போன பண்பாடா! என்று வியப்பாக கேள்வி கேட்பவர்கள் தொடர்ந்து படிங்க.. கண்டிப்பா புரியும்.

            மொய் எழுதாமல் கல்யாணமா? காரியமா? எந்த விழாவாக இருந்தாலும் மொய் இல்லாமல் இருக்காது. இந்த மொய் எழுதுவதில் சில முறைகள் இருக்கிறது. தாய் மாமன் மொய், சம்மந்தி மொய், கொண்டான் - கொடுத்தான்  மொய், உடன் பிறப்புகளின் மொய், முறைமாமன் மொய், இப்படி தொடங்கி நண்பர் மொய், கவரில் வைத்து கொடுப்பது, கவருக்காக தேடி அலைந்துவிட்டு கவர் கிடைக்காததால் கடைசியில் கையில் திணிப்பது இப்படி பல வகைகள்.

             இதைத்தவிற  “தங்க நகைகள்” செய்யும் பழக்கம் வேறு,  இதுல பாருங்க கால் பவன் நகையை கொடுத்துவிட்டு, அரைப்பவன் என்று சொல்லி எழுதிவிட்டு போய்டுவாங்க, மொய் எழுதும் இடங்களில் இனிமேல் எடைப்பார்க்கும் மெஷின் வைத்து எடை சரியாக உள்ளதா? என்று கண்டிப்பா பார்க்கவேண்டும், என்ன அக்கப்போரு! பாருங்க... பிறகு  “பண்ட- பாத்திரங்கள்”  கொடுப்பது, இதில் பாருங்க அநியா அக்கப்போரு! நடக்கும், இவங்களுக்கு யாராவது கொடுத்த பாத்திரத்தை அப்படியே கூட்டத்துல கொண்டு வந்து வைத்துவிட்டு அங்கு இருக்கும் பாத்திரத்தை ஒரு பார்வை பார்ப்பாங்க, கண்ணுல படுகிற ஒன்றை தன்னுடையதாக சொல்லி தன் பெயரை எழுவிட்டு போய்டுவாங்க. அப்பறம் “தங்க காசு கட்டுவது”  தங்க காசில் ஒரு ஓட்டை இருக்கும் அதை மஞ்சநூல் ஒன்றில் கோர்த்து மணப்பெண்ணின் நெற்றியில்தான் கட்டவேண்டுமாம், சரி கட்டுறதுதான் கட்டுறாங்களே கொஞ்சம் லேசா கட்டக்கூடாது, மணப்பெண்ணிற்கு தலைவலி வரும் அளவிற்கு  இருக்கி காட்டிவிட்டுப் போய்டுவாங்க. பாவம் அந்தப் பொண்ணு சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தலைவலியை தலைவிதியா நினைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்கும். அப்பதான் மணமகன் சொல்வார் இவங்கதான் என்கூட படிச்சவங்கன்னு சிலரை அறிமுகம் செய்துவைப்பார், தலைவலியோட இந்த பொண்ணும், “ஹாய்!” ன்னு சொல்லும். அதைக் கொஞ்சம் சிரிச்சிகிட்டே சொல்லேன் மணமகன் காதைக் கடிப்பார். உடனே இந்த பொண்ணு நினைத்துக்கொள்ளும் ஐயோ! ரொம்ப கோபக்காரரா இருப்பார் போலிருக்கே! தாலியை வேற கட்டிட்டானே ஐயகோ! இனி வாழ்க்கை பூராவும் இந்த தொல்லையேயும்  அனுபவிக்கணுமா ‘னு மனதில் வருந்தும்.

           இங்குதான் கல்யாண வீட்டுக்காரர்களின்  ‘வசூலும்’ மொய்யை வாங்கியவன், தனதுக் கடனை திருப்பிச்செலுத்தும் ‘நாணயமும்’ நிலைநாட்டப்படுகிறது., சிலர் மொய் எழுதிவிட்டு திருப்பி வருமா? வராதா? என்ற கவலையுடனும், சிலர் எழுதிய மொய்ப்பணம்  வந்தாலும் வரட்டும், வராவிட்டாலும் போகட்டும், ஆனால் இன்னைக்கே அதனை வசூல் செய்திடவேண்டுமென்று, எழுதிய பணத்துக்கும் ஒரு பிடி அதிகமாகவே சாப்பாட்டை  ஒரு கட்டுக் கட்டிடவேண்டுமென்ற எண்ணத்திலும்,  ஒரு சிலர் இவ்ளோ தூரம் வந்ததினால் தனது செருப்பு தேய்ந்திருக்குமோ? என்று செருப்பின்மேல் பரிதாபப்பட்டு, இருப்பதிலேயே தேயாமல், கண்ணுக்கழகா இருக்கும் நல்லச் செருப்பா பார்த்து, ஒரு ஜோடியையும் ஆட்டையைப் போடவும் திட்டம்போட்டு காத்திருப்பார்கள். நமது இளவட்டங்கள் சுடிதாரின் அழகிலோ? சுந்தரிகளின் வலையிலோ? விழுந்துவிட்டு பிரிவை தாங்க முடியாமல் “ போகுதே! போகுதே! என் பைங்கிளி போகுதேன்னு” மனதில் பாடிக்கொண்டே வாசல்வரைச் சென்று வழி அனுப்பிவிட்டுட்டு வருவார்கள்.

          இப்படி எல்லா சந்தோஷங்களும் ஒரு பக்கம் இருக்க, பணம் என்று வாய் திறந்தாலே ஒரு விதப் பயமும் நம்மைச் சுற்றிவலைக்கிறது, மாதம் 30,000  சம்பளம் வாங்கும் ஒரு சராசரி குடும்பஸ்தனும், வாழ்க்கை என்னும் கடலில் தத்தளித்துக்கிறான். வருகிற வருமானம் போகிற வழித்தெரியாமல் போய்விடுகிறது, மாதக்கடைசியில் அவனும், பத்துக்கும்-அஞ்சிக்கும் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். வருமானம் கூடக்கூட செலவுகள் அதற்குமேல் ஒரு படி முன்னே சென்று நிக்கிறது. இதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

            ஒரு சாதாரண குடும்பம் என்றால் குறைந்தது அப்பா-அம்மா, அண்ணன்–அண்ணி, அக்கா-தங்கை, அத்தை–மாமா, தானும், தனது மனைவியும் எனக் குறைந்தது இத்தினை உறுப்பினர்களாவது ஒரு குடும்பத்தில் இருப்பார்கள். இது இல்லாமல் மனைவியின் வீட்டில் , மாமனார்- மாமியாள், மைத்துனன் , மச்சினி மேலும் அவர்களின் உடன்பிறப்புகள் என்று சிலர் இருப்பார்கள். இவர்களை இல்லாமல் நமது நண்பர்கள் வட்டாரம் ஒருபக்கம் இருக்கிறது. இவர்கள் எல்லோருடைய வீட்டிலும் நல்லது கேட்டது என வந்துப் போகிறது. அதற்காக நான் செய்யும் திடீர் செலவுகள் நமது பட்ஜெட்டில் இல்லாமல் வருவதுதானே? இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வரும் செலவுகள் நம்மளை ஒரு நேரத்தில் ஆட்டிப்படைக்கிறது, என்பதை சத்தியமாக நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகணும்.

                    ஒரு ஊரில் குறைந்தது நமக்கு தெரிந்த குடும்பங்கள் என்று பார்த்தால் ஐந்நூறுக்கும் மேல் இருக்கும், அவர்களின் வீட்டில் ஏதாவது நல்லது-கேட்டது என்றால் நாம் பங்கெடுக்காமல் இருக்கமுடியாது, கண்டிப்பாக போயே ஆகவேண்டும், அப்படி போய்ட்டு சும்மா திருப்பி வரமுடியாது, குறைந்தது நம்மளால் முடித்த ரூபாயை மொய்ப்பணமாக எழுதிவிட்டுதான் வரவேண்டும். குறைந்தது நூறு ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். மாதம் பத்துக் குடும்பங்களில் விசேஷம் என்றாலும் 1000 ரூபாய். மனைவியின் சித்தப்பா வீடு குடிபோகிறார் என்றால் அவங்களுக்கு குறைந்தது அரைப்பவுன் தங்கம் கொடுக்கவேண்டும். இன்னைக்கு அரைப்பவுன் விலை 12,000 கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும், இல்லையென்றால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது. மனைவியின் சித்தப்பாவாச்சே! , சரி எப்படியாவது இந்த மாதச்சம்பளத்தில் சமாளித்துவிடலாம் என்று இருந்தால், அப்பதான் ஒரு பத்திரிகை வீடு தேடி வரும். அப்பாவின் பங்காளி வகையில் ஒரு அக்கா, அவங்க குழந்தைக்கு காதணித் திருவிழா வைத்திருக்கிறார்கள், சரி வச்சிட்டு போகட்டும் நமக்கென்ன, அப்பாவை அனுப்பி வைத்துவிடலாம் நூறு ரூபாய் மொய்ப்பணமும் போடச்சொல்லிடலாம் என்று சமாதானமாக இருப்போம். அப்பா வருவார் தம்பி பத்திரிக்கையை பார்த்தியா?ன்னு கேட்பார். பார்த்தேன்பா அப்படியே நீங்களே போய்ட்டு வந்துடுங்க எனக்கு லீவு கிடைக்காது என்று சொல்லி வாயடைப்பதற்க்குள், அப்பா சொல்வார் அவ உன் கல்யாணத்துக்கு அரைப்பவுன் தங்கநகை கொடுத்திருக்கிறாள், அதை நாம இப்ப திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று.
    
         மீண்டும் பட்ஜெட்டில் இல்லாத செலவாக மேலும் 12,000 ரூபாய் போகும், நாம் வேலைக்கு போய்ட்டுவர ஆகும் செலவு, குடும்பச் செலவு, குழந்தையின் படிப்புச் செலவு, கரண்ட் கட்டணம் என்று இதற்காகவே குறைந்தது மாதம் 10,000 ரூபாய்   செலவாகும். சிலமாதம் இதைவிடவும் கூடும். இப்பவே இந்த மாதம் 35,000 ரூபாய் செலவாகிவிட்டது. அடுத்த மதச் சம்பளத்திலும் அட்வான்சாக கைவைத்துவிட்டாச்சி, இதுபோல் அடுத்த மாதமும் வந்தால் என்ன செய்யமுடியும். பிறகு மைத்துனன் திருமணம் என்றால் ஒரு பவன் தங்கநகை கொடுக்கவேண்டும். அதுமட்டுமில்லாமல் நலுங்கு வைக்கவேண்டுமாம், அதற்கு ஸ்வீட், பழங்கள் இன்னும் பல பொருள்களோடு பதினைந்து தாம்பாளம் இருக்கவேண்டுமாம், கூடவே நல்ல விலைக்கூடிய உடையும் கொடுக்கவேண்டும், சரி இதுமாட்டும்தானே நேரா போய் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்றால் அதுவும் கூடாதாம், மேள-தாளம் வேணுமாம், கூடவே படைபலத்தைக் காட்டுவதற்காக ஊர் மக்கள் என்று ஒரு படலம் போகவேண்டுமாம். என்ன கொடுமை சார் இது! பாருங்க. சரி எப்படியோ கடனை வாங்கி இதை முடித்துவிட்டால் கடமை முடிந்தது என்று பெருமூச்சு விடலாம் என்றால் அதுவும் நடக்காது, அவர்களுக்கு திருமணம் முடிந்ததும் “தேவை சாப்பாடு” அதாவது விருந்துக்கு அழைக்கவேண்டும், சும்மா அழைத்தால் போதாது இருவருக்கும் உடைகள் வாங்கிக் கொடுக்கவேண்டும், ஆட்டுக்கறி , மாட்டுக்கறி, முயல்கறி, பூனைக்கறி, நாய்க்கறி, நண்டுக்கறி, கடலில் மிதப்பது, நீந்துவது என அடுக்கிக்கொண்டே போவார்கள், இதெல்லாம் மனைவியின் கட்டளை, அண்ணனும்-அண்ணியும் வந்திருக்காங்க என்னங்க சும்மா நின்னுகிட்டு போங்க போய் ஏதாவது வாங்கிகிட்டு வாங்க.. இப்படியே துரத்தி விடுவாங்க கையில் காசு இருக்கா? இல்லையா? என்பதெல்லாம்  இந்த நேரத்தில் மனைவிக்கு தெரியாது. 

                 மச்சினி திருமணம் என்றாலும் இதேதான், ஒரு மைத்துனன் இருந்தால் இன்றைய மதிப்பீட்டில் அவரது திருமணத்திற்கு ஆகும் செலவு ஆகா மொத்தம் 75,000. உங்களுக்கு எத்தினை மைத்துனன்-மச்சினி இருக்கிறார்களோ, அத்தினை 75,000 ரூபாய் செலவு என்று இப்பவே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே! இதுமட்டும் இல்லை அவர்களுக்கு குழந்தை பிறந்தால் ஒரு பவுன்தங்கம், பிறகு காதுகுத்து, இப்படி பெருகிக்கொண்டே போகும்.
         இது இல்லாமல் முப்பது வருடத்திற்கு முன்பு ஒரு பவன் தங்கம் இரண்டாயிரம் விற்ற காலத்தில் நமது வீட்டில் நடந்த ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒருவர் கொடுத்திருப்பார். அதை இன்று நாம் திருப்பிக் கொடுக்கவேண்டும். இதற்காகவே ஒரு நோட்டு போட்டு எழுதி வைத்திருப்பார்கள் நமது முன்னோர்கள். பெயர் “மொய்டாப்பு” அல்லது ‘மொய் நோட்டு’ , இதைவிட “கடன் பாக்கி நோட்டு” என்ற பெயர் இதுக்கு மிகச் சரியாக பொருந்தும் என்று நினைக்கிறேன். இதைத்தான் சொன்னேன் “பாக்கி வைத்துவிட்டுப்போன பண்பாடு” என்று இப்போது புரிகிறதா நண்பர்களே!.

           இப்படியே மாதாமாதம் செலவுகள் கூடிக்கொண்டே போகிறது, தங்க நகைகளின் விலையேற்றமும், அவசியப் பொருள்களின் விலையும், ஆளை முழுங்குகிறது, இப்போதையே சூழ்நிலையில் மாதம் முப்பதாயிரம் வருமானம் இருக்கும் ஒருவராலியே குடும்ப சுமைகளைச் சமாளிக்கமுடியவில்லை. இதற்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களின் நிலைமையை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. அவர்களுக்கும் உறவுகள் ஒருபோல்தான் இருப்பார்கள், நகைக்கடையிலும் அதே விலைதான். என்ன செய்வார்கள் பாவம் கந்து வட்டிக்கும், மீட்டர் வட்டிக்கும் கடன் வாங்கிதான் ஆகவேண்டும். அப்படியும் முடியவில்லை என்றால் தற்கொலைதான் கடைசி முடிவு.

          எனக்குத்தெரிந்து எத்தினை எத்தினையோ நண்பர்கள் அமீரகத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிரார்கள், மாதாமாதம் இப்படிபட்ட பிரச்சினைகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பதால், அவர்கள் ஊருக்குக்கூட போகமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். அமீரகத்தில் வேலைப் பார்க்கும் இந்தியர்களில், ஐம்பது சதவிதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மாதச் சம்பளம் பத்து முதல் பதினைந்தாயிரத்தைத் தாண்டாது. இப்படிப் பட்டவர்களின் வாழ்க்கையின் எதிகாலம் ஒரு கேள்விக்குறியே! அன்றாட வாழ்க்கையிலேயே தள்ளாடும், இவர்களின் பிள்ளைகளின் படிப்பு, அவர்களின் திருமணம், இவர்களுக்கென்று ஒரு வீடு, இதெல்லாம் கனவாகவே வந்துபோகிறது. 

         இதையெல்லாம் மனதில் கொண்டு, நாம் நமது பழைய பழக்க-வழக்கங்களை சற்று தளர்த்தவேண்டும், வசதியுள்ளவர்கள் அவரவர்களின் விருப்பம்போல் வாழட்டும். நடுத்தர குடும்பத்தினரும், மிகவும் ஏழ்மையான குடும்பத்தினரும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இதனை மாற்றும் முதல் முயற்சியாக, இனியாவது தங்களுடைய இல்லத்தில் நடைபெறும், அனைத்து  விஷேசங்களிலும் மொய்ப்பணம் வாங்குவதை நிறுத்துவோம். “மொய் இல்லாமல் திருமணம் செய்வோம்”, “மொய் இல்லாமல் வீடு குடிபுகுவோம்”, “மொய் இல்லாமல் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்”, “மொய் இல்லாமல் காதணித் திருவிழா” நடத்துவோம்.

               இவைகள் எல்லாம் சாதரணமாக அப்ப அப்ப நமது வாழ்வில் வந்துப் போவதால், நாம் சரியாகக் கணக்குப்போட்டு பார்ப்பதில்லை. சரியாக கணக்குப் போட்டுப்பார்த்தால் நமது உழைப்பெல்லாம் இதற்காகவே செலவு செய்துவிடுகிறோம். இதுபோல் செலவுகள் இல்லை என்றால் ஒரு சாதாரண குடும்பத்திற்கு மத வருமானம் பத்து முதல் பதினைந்தாயிரம் போதும். கூடவே கொஞ்சம் நிம்மதியும் கிடைக்கும். இதனால் எந்த நிகழ்ச்சிகளுக்கும் போகக்கூடாது என்று சொல்லவில்லை. திருமணத்திற்கு போவோம், வாழ்த்துவோம், நம்மளால் முடிந்த “கிப்ட்” வாங்கிக்கொடுத்து நமது சந்தோஷத்தை வெளிப்படுத்துவோம். ஒருவருக்கொருவர் உதவி செய்த்துக்கொள்வோம், இதுபோல் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து கொடுப்போம். இனியாவது  “மொய் இல்லாமல் திருமணம் செய்வோம்”   நமது முன்னோர்கள் தொகுத்து வைக்கப்பட்டது ‘காவியம்’ இல்லை, ‘காகிதம்’ என்று அதனைக் கிழித்தெறிவோம். ஒன்று சேருங்கள் நண்பர்களே, நமது இந்த தலைமுறையின் அழிவில் இருந்து காப்பாற்றுவோம்.

நன்றி.
வணக்கம் நண்பர்களே!

{உங்களுடைய கருத்துகளை இங்கு பதியவும், நான் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறேன், இதில் எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்]

15 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரவர் உணர வேண்டிய நல்ல பல கருத்துக்கள்...

Unknown said...

சமூகத்திற்கு தேவையான கட்டுரை ஆகாஷ்

உங்கள் சமூக நலன் தொடர வாழ்த்துக்கள்

ப.கந்தசாமி said...

ரொம்பவும் நொந்து போயிட்டீங்க போல இருக்கு. கவலைப்படாம விசேசத்துக்குப் போங்க. சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அவ்வளவுதான். போற்றுவார் போற்ற புழுதி வாரித்தூற்றுவார் தூற்ற நம் கடன் பணி செய்து கிடப்பதே என்று கிடந்து விடுங்கள்.

Balaji said...

தம்பியின் எழுத்து ரொம்ப நல்லாயிருக்கு.....
ஆனால் இந்தப் பதிவின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறேன்....

Jayadev Das said...

மொய் என்பது நம் முன்னோர்கள் ஏற்ப்படுத்திய ஒரு மரபு. திருமணம் செய்யும்போது/விழாக்கள் எடுக்கும்போது எக்கச் சக்கமாய்ச் செலவு ஆகும் அதை ஈடுகட்ட அவரவர் செய்யும் உதவி என்று இதை வைத்துக் கொள்ளலாம். அது இந்தக் காலத்திற்கு எந்த அளவுக்கு ஒத்துப் போகும் என்று தெரியவில்லை. ஆனால், இந்த மாதிரி தருணங்களில் பரிசு வழங்குவது, அவரவர் மனமுவந்து செய்வதைப் பொறுத்தது. அதை தடுக்கக் கூடாது.

semmalai akash said...

நன்றி நண்பரே! கண்டிப்பாக.

semmalai akash said...

நன்றி நண்பா.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கு ரொம்ப நன்றிங்க, உங்களைப்போல் உள்ளவர்கள் வருகை சிறப்பு.

semmalai akash said...

நன்றி அண்ணா.

semmalai akash said...

ரொம்ப நன்றி நண்பரே!

எங்க பக்கம் உள்ள கிராமங்களில் "மொய்" என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமைகள் எல்லாம் நடைபெருகிறது. மொய்ப் பணத்தை அவர்கள் நிகழ்ச்சியில் திருப்பிக் கொடுக்காவிட்டால் வீடுதேடி வந்து கேட்பார்கள். பணம் என்றால்கூட பரவாயில்லை கொடுத்துவிடலாம். ஒரு பவும் தங்க நகையாக இருக்கும், இன்றைய மதிப்பில் 25.000 ரூபாய் , அதை திருப்பிக் கொடுக்க அந்த நேரத்தில் நம்மளிடம் பணம் இல்லாமல் இருந்துவிட்டால், சரி பரவாயில்ல அவர்களின் அடுத்தப்பிள்ளைக்கு செய்துவிடலாம். இப்போது வெறும் மொய்ப்பணம் மட்டும் செய்துவிடலாம் என்று செய்துவிட்டு வந்தால் ,மறுநாள் வீடுதேடி வருவார்கள், நான் செய்த நகை என்ன ஆச்சி? ஏன் திருப்பி செய்யவில்லை என்று கேட்க்கிறார்கள்.

"ஒரு மாதத்தில் இப்படி இரண்டு சம்பவங்கள் வந்தால் என்ன செய்வது?"

இபோதெல்லாம் சிலர் , இதுபோல் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெப்பதில்லை, யாராவது அந்த திருமணத்திற்கு போனால் கடமையாக நினைத்து பணத்தை கொடுத்தனுப்புகிறார்கள். அப்படியே எங்க பெயரையும் போட்டு நூறு ரூபாய் எழுதி விடுங்க....

இதுகூட ஓகே , சிலர் போன் செய்து சொல்வார்கள் ,

"மச்சான் எங்க இருக்க?

"சுரெஷ் வீட்டுத்திருமணதில் இருக்கிறேன் "

சரி "மச்சான்" அப்படியே எங்க அப்பா பெயரை போட்டு, அவாங்க நூறு ரூபாய் போட்டுஇருக்கிறார்கள்
101 போட்டுவிடு மச்சான் என்பார்.

பாருங்க காலம் எங்கே போகிறது. வந்து வாழ்த்தகூட நேரம் இல்லை. போன் செய்து சொல்லும் அளவுக்கு ,இந்த மொய்ப்பணம் என்பது வியாபாரமாக மாறிவிட்டது.

இதனால்தான் கேட்க்கிறேன் எதுக்கு சார் மொய்? வழ்த்துபவர்கள் மட்டும் வந்தால் போதும்.
"மொய் இல்லாமல் திருமணம் செய்வோம்" என்பதுதான் எனது கருத்து.

வேகநரி said...

அருமையான தேவையான கருத்து.

settaikkaran said...

ஆகாஷ்! முதலில் கையைக் கொடுங்க! பிரமாதம்! ஒவ்வொரு இடுகையிலும் உங்களது எழுத்து நடை மெருகேறிக்கொண்டே போகிறது. இந்த இடுகைக்கான கரு சற்று நாசூக்கானது என்றாலும் கூட, நீங்கள் எழுதியிருக்கிற விதம் இழுத்துப் பிடித்து முழுமையாக வாசிக்க வைத்திருக்கிறது. சில மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், உங்களது நடையைப் பாராட்டியே தீர வேண்டும்.

semmalai akash said...

உங்களுடைய வருகைக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கேன் நண்பரே!
மிக்க நன்றி.

semmalai akash said...

ரொம்ப நன்றி ஐயா,

உங்களுடைய இந்த பாராட்டு நெஞ்சைத் தொட்டது. மேலும்மேலும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும் ஐயா.

நம்பள்கி said...

தம்பி ஆகாஷ்...நான் உங்கள் இடுகை முழுவதும் படிக்கவில்லை...பிறகு படிப்பேன்...
நீங்கள் மொய்யில்லாமல் திருமணம் பற்றி பேசுகிறீர்கள். நல்லது..
ஆனால், என் திருமணம் கலப்பு திருமணம்; என் உழைப்பு; என் பணம்; என் திருமான் செலவு முழுவதும் என்னுடையது...இங்கு மொய்க்கு வேலையே கிடையாது...

அந்தப் பணம், என் இரண்டு வருட, இரண்டு வேலைகளின் சம்பாத்தியம் [ ஒரு நாளில் 16 மணி நேர வேலை].

Post a Comment