Pages

Thursday, November 1, 2012

ஏன்டா! ஏன்? எல்லா ஆண்களும் இப்படிதான் யோசிப்பிங்களா? பாகம்: 1


{நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தொடர்கதையின் மூலம் உங்களை சந்திக்கிறேன். எப்போதும்போல உருக்கமான கதையாக இல்லாமல் சற்றேனும் மாற்றத்தோடு எழுதிருக்கிறேன். இக்கதையில் வரும் சம்பவங்களும், பெயர்களும் முழுக்க முழுக்க எனது கற்பனையே!, யாரையும் குறிப்பிடுவன அல்ல..}

 ஏன்டா! ஏன்? எல்லா ஆண்களும் இப்படிதான் யோசிப்பிங்களா? பாகம் :1


        ரயிலில் ஏறிய அவளின் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதியது, தோழிகளில் ஒருத்தி  யாரைடி தேடுற எல்லோரும் வந்துவிட்டோம் வா வந்து உட்காருடி! எனச் சொல்ல, இவளுக்கு என் மனநிலையை எப்படி புரிய வைப்பது எனச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த கண்களுக்கு அந்த முகம் காட்சியளித்தது அவனேதான் வந்துவிட்டான் யப்படா! நிம்மதி பெருமூச்சி விட்டாள். அதன் பிறகுதான் தன் தோழிகளுடன் பேசி சிரித்துக்கொண்டு வந்தாள், இடையிடையில் அவளையே அறியாமல் அவளது கண்கள் அவனை பார்த்துக்கொண்டே இருந்தது. ஏதாவது பேசவேண்டும் போல் இருந்தது ஆனால் இதுவரை அவனிடம் பேசியதே இல்லை, அவனும் இவளிடம் பேசியது இல்லை. எப்போது பேசப்போறோம் எப்படி பேசப்போறோம் அப்படி நாம் பேசுவதை அவன் விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அந்த வினாடியே செத்துப்போகனும் என்றெல்லாம் மனதில் பல கற்பனைகள் வந்துபோக அவள் இறங்கும் இடம் வந்தது. வேகமாக இறங்கிச்சென்று அவன் வருகைக்காக காத்திருந்தாள்.  அவன் தனது புத்தகங்களையும் அவனது டைரியையும் எடுத்துக்கொண்டு இறங்கி வந்தான் எப்போதும்போல இருவரும்  பார்வையால் மட்டுமே நலம் விசாரிப்பதுபோல் அவரவர்களின் மனதில் மட்டுமே நினைத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர் .

அவள் தனது தோழிகளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தனது வீடு நோக்கி நடந்தாள். இவளுடைய பள்ளிப்படிக்கும் நாளிலிருந்து இவளுக்குப்பெரும் தொல்லைக்கொடுத்து வந்த இளைஞன் அங்கு நிற்ப்பதைக்கண்டு வேகவேகமாக நடக்கத் தொடங்கினாள் அவனும் விடாது பின்தொடரவே ஒரு இடத்தில் நின்று

   "என்னடா! இப்ப என்ன வேணும் உனக்கு? ஏன்டா! ஏன்? இப்படி என் பின்னாலையே வந்து உசுர வாங்குற... உன்னால எனக்கு எவ்ளோ பிரச்சினைத் தெரியுமா?"
"........................."

                    "அப்பறம் ஏன்டா ஒன்னும் பேசமாட்டேன்கிற? "

            "அதான் நான் அன்னைக்கே லெட்டரில் எழுதிக்கொடுத்தேனே! தெரியாதமாதிரி திரும்பத் திரும்ப கேட்க்கிற..."

         "நானும் அன்னைக்கே பதில் சொல்லிட்டேனே, பிடிக்கவில்லை என்று, அப்பறம் எதுக்கு என்னைப் பார்க்கும்போதெல்லாம் என் பின்னாலியே வந்து உசுர வாங்குற..."

           "அதைத்தான் ஏன் என்று கேட்க்கிறேன்? ஏன் பிடிக்கவில்லை சொல்லு என்னை மாற்றிக்கிறேன். அதைவிட்டுவிட்டு மொட்டையா பிடிக்கவில்லை! பிடிக்கவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்கிறேன்?"

          "பிடிக்கலைன்னா பிடிக்கலை அவ்ளோதான் எல்லாத்துக்கும் விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கமுடியாது, பிடிச்சிருப்பதற்கும் பிடிக்காததற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கு இதெல்லாம் அவங்கவங்க மனதைப் பொறுத்தது ஒருமுறை சொன்னா புரியாதா உனக்கு? "

        " புரியாமத்தானே உன் பின்னாலியே இவ்ளோ நாளா வருகிறேன் பிடிக்கல! பிடிக்கல! பிடிக்கல! அப்படி என்னதாண்டி என்கிட்ட உனக்கு பிடிக்கலை?" என்கூட படிக்கும்போது ஒருநாள் நல்லா சிரிச்சி பேசினியே அப்ப மட்டும் பிடிச்சிருந்ததா? இப்ப மட்டும் ஏன் பிடிக்காம போனது? "

        ஐயோ! முடியலடா உங்ககிட்ட, அந்த வயசுக்கும் இந்த வயசுக்கும் வித்தியாசம் இருக்கு இதையெல்லாம் உன்கிட்ட எப்படி சொல்லி புரியவைப்பதென்றே தெரியவில்லை? பின்னாடியே அலையவேண்டியது, உங்க தொல்லைத் தாங்கமுடியாம ஒருமுறை  பேசிட்டா போதும் உடனே அவ ஓகே சொல்லிட்டா மச்சான்னு ஊரு பூரா சொல்லிக்கிட்டு திரியவேண்டியது, பத்தாததிற்கு அவ என் ஆளுடா என்றும் பீத்திக்கொள்வது நாங்க என்னடா பாவம் செய்தோம் ஒரு பொண்ணா இந்த உலகத்தில் பிறந்தது தவறாடா! ஒருநாள் பேசியதை வைத்து எப்படிடா நான் உன்னை லவ் பன்றேன் என்று முடிவு பண்ணிகிட்ட? உன்னால நான் இன்னைக்கு எத்தினையோ பிரச்சினைகளை சந்திக்கிறேன், அன்னைக்கு நடந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா என்கிட்ட சரியாக பேசுவதே கிடையாது? என்னை ஒரு எதிரி மாதிரியே பார்க்கிறார். தினம் தினம் போராடி போராடித்தான் நான் படிக்கவே போறேன், இப்பகூட உன்கிட்ட பேசுவது உன்னை பிடிச்சிப்போயி இல்லை, நீ இன்னும் என் பின்னாலியே நடப்பதை எங்க அப்பா பார்த்துவிட்டால் இன்னும் என்ன என்ன செய்வாரோ என்ற பயத்தினால்தான் உன்கிட்ட பேசி உனக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறேன்.

ச்சே! இனி என் பின்னாடி வந்த நடப்பதே வேற.... போடா....நாயே! உன்னால நான் படும்பாடு போதும். என்று திட்டிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக நடந்தாள்...

இப்படி திட்டித் தீர்த்துவிட்டு வருவது வேறு யாரும் இல்லைங்க, இவங்கதான் இந்த கதையின் நாயகி, பெயர் நிலா, ஒரு அழகான கிராமத்தில் பிறந்த அழகு தேவதை, நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நிலாவின் அப்பா ஒரு விவசாயி, சில கைத்தொழில்களை தெரிந்து வைத்திருந்தார் பெயர் கோபால்,  அம்மா சகல குடும்பப் பொறுப்புகளையும் சுமந்த குடும்பக் குத்துவிளக்கு, இவங்களைப் பற்றி இங்கு சொல்லியே ஆகணும், கணவனோ! பிள்ளைகளோ! அவசரத்தில், கோபத்தில் எடுக்கும் எல்லா முடிவுகளையும் சரியாக பயன்படுத்தி எந்த பிரச்சினையும் வராமல் அண்டை வீட்டார்களும், உறவினர்களும் மூக்குமேல் கை வைக்கும் அளவிற்கு தனது குடும்பத்தைக் கொண்டுச் செல்லும் பெருமை இவங்களையே சேரும். எந்த விஷயத்திற்கும் கோபப்படாமல் நிதானமாக முடிவு எடுக்கும் தனித்திறமை இவங்களுக்கு உண்டு, இவங்க பெயர் கெளரி எப்போதும் இவங்கமேல நிலாவிற்கு சின்ன கோபம் வரும் அதற்கு காரணம் இவளுடைய அண்ணன்தான், என்ன இருந்தாலும் கௌரிக்கு முதல் பிள்ளையாயிற்றே அதனால் மகன்மீது அதிகப் பாசமும் அக்கறையும் காட்டுவாள் அதற்கான காரணம் கேட்டால் தயங்காமல் சொல்வாள் என்னை தாயாக்கி எல்லையில்லா சந்தோஷத்தைக் கொடுத்தவன் அவன்தான் என்று சொல்லும்போதே கண்ணீர் நிறையும் அவளது கண்களில்  அதனால்தானோ என்னவோ அவனுக்கு சந்தோஷ் எனப் பெயரிட்டாள்.

சந்தோஷ்! சந்தோஷ்! என அழைக்கும்போதே சந்தோஷமா இருக்கிறது என்று சொல்லிச் சொல்லியே கெளரி தன் மகனை எப்போதும் அருகில் வைத்தே பார்க்க ஆசைப்பட்டதால் சந்தோஷ் பனிரெண்டாம் வகுப்புக்குமேல் பட்டப்படிப்பு படிக்கமுடியாமல் போனது, அருகில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புவரைதான் இருந்தது மேல்படிப்புக்கு கல்லூரிக்கு போகணும், தினம் சென்று வரமுடியாத தூரத்தில் இருந்ததால் அழுதுப் புலம்பி அருகில் உள்ள    பாலிடெக்னிக்கில் சேர்த்துவிட்டாள் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பதற்கு, இப்போது படிப்பு முடிந்து சொந்த ஊரிலியே கடை வைத்துக் கொடுத்திருந்தாள் எப்போதும் அருகிலேயே இருக்கவேண்டுமே!. சந்தோஷும் அம்மாவைப் பிரிந்து இருக்கமாட்டான் எப்பவும் அம்மாவை சுற்றிச் சுற்றியே வருவான், இசைப்பிரியன் எப்போதும் வீட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கடையில் அவன் தொழிலும் அதுதானே எல்லா பாடல்களையும் சேமித்து வைத்திருப்பான் அருமையான ரசிகன். ஆளும் நல்ல அழகும் அறிவும் பெற்றவன் தன் தாய்போல் சிந்தித்தே முடிவு செய்யும் குணம் கொண்டவன், அம்மாவின் குணம் அப்படியே மகனுக்கும் என்று கோபால் அடிக்கடிச் சொல்வதுண்டு...

கோபால்  விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை சீராக இந்த நிலைக்கு கொண்டு வந்தார், மீதி உள்ள நேரங்களில் தனக்கு தெரிந்த கைத்தொழில் மூலமாகவும் ஒரு சிறு வருமானத்தை கண்டார், கெளரி வீட்டு வேலை முடிந்ததும், துணி தைப்பது, கூடை பின்னுவது இப்படி போழுதுப் போக்கிற்காக செய்த தொழில் மூலமும் சிறிய வருமானம் கிடைத்தது. இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள்தான் நிலா, இவள் தனது பள்ளிப் படிப்பை அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தாள் அப்போது முதலே இவள் பின்னால் அலையும் இளைஞர்கள் கூட்டம் இருந்தது, தேவதைப்போல ஒரு பெண் நடந்து வருவதை  திரும்பிப் பார்க்காமல் எந்த  ஒரு ஆண்மகனாலும்  இருக்கமுடியாது,  அதேபோல்தான் இந்த தேவதையை தேடித்தேடி இளைஞர்கள் கூட்டம் எப்பவும் அலைந்தது. ஒருநாள் ஒரு இளைஞன் மிக துணிச்சலாக காதல் கடிதம் கொடுத்தான் அதைக் கண்ட ஊர்காரர் ஒருவர் நிலாவின் வீட்டில் சொல்லிவிட அன்று முதல் தொடங்கியது நிலாவிற்கு சோதனைகாலம்.


   கோபால் கடும்கொபமாக நிலவை இனி பள்ளிக்குப் போகவேண்டாம் என்று தனது முடிவை சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றார். கணவனை எதிர்த்து எதுவும் பேசமுடியாமல் கெளரி அமைதியாக இருந்தாள்,  நிலா நான் என்ன தவறு செய்தேன் என்று விடாமல் அழுதுக் கொண்டிருந்தாள், இரவு கோபால் வரும்வரை அழுகையை நிறுத்தவில்லை, அப்பா வீட்டிற்கு வந்ததும் மிகத்தெளிவாகவே கேட்டாள்
      "அப்பா இதுதான் நீங்க உங்க பொண்ணுமேல வைத்திருக்கும் நம்பிக்கையா? நான் என்ன தவறு செய்தேன்? நான் எதற்காகப் பள்ளிக்கு போகக்கூடாது? நான் யாரையாவது காதலித்து உங்களுக்கு கெட்டப்பெயர் வாங்கிக் கொடுத்தேனா? இப்படி வரும் எல்லாப் பிரச்சினைக்கும் பயந்தால் நாம இந்த உலகத்தில் வாழவே முடியாது எல்லா இடத்திலும் பிரச்சினை இருக்கு அதற்கு பயந்தால் நம்மால் நிம்மதியாக வாழமுடியாது. அதை எடுத்து தூக்கி  எரிந்துவிட்டு அடுத்தவேலையை பார்க்கணும. நான் நாளைமுதல் பள்ளிக்கு போவேன்தான் என்று கடுமையாக சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள், பிறகு கெளரியும், சந்தோஷும் வந்து கலந்துப் பேசி ஒரு வழியாக பள்ளிக்கூடம் போக அனுமதி பெற்றனர்."

             அன்று இரவு கோபால் தன் மகளை நினைத்து நினைத்து  மனதுக்குள் சந்தோஷப்பட்டார் இந்த வயதிலும் இவ்ளோ தெளிவாக இருக்கும் பெண்ணை ஊரார் பேச்சிக்கேட்டு படிப்பை கெடுக்கப் பார்த்துவிட்டோமே என்ற எண்ணம் ஓடியது, இருந்தாலும் மனதில் ஒரு பயமும் வந்தது இனிமேல்தான் ஜாக்கிரைதையாக இருக்கவேண்டும் நம் குடும்பத்துக்கு எந்தவித கெட்டப்பெயரும் வந்துவிடக்கூடாது மனதில் எவ்ளோ பாசம் இருந்தாலும் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கவேண்டும் அப்பதான் மகளுக்கு பயம் இருக்கும் என்று முடிவு செய்துக்கொண்டார், இதை மனைவியிடமும் பகிர்ந்துக்கொண்டார்.

             இப்படியே அவளுடைய பள்ளிப்படிப்பு முடிந்தது மேல்படிப்பிற்காக கல்லூரிக்கு போகவேண்டும் அம்மாவிடம் தினமும் சொல்லி அழுது அப்பாவிடம் சம்மதம் வாங்கிக்கொடுக்க கெஞ்சினால் இதுகுறித்து குடும்பத்தில் பேசியபொது அவ்ளோதூரம் அனுப்பமுடியாது என்று தீர்மானம் செய்தனர். நிலா பிடிவாதமாக போயிதான் ஆவேன் என பிடிவாதம் பிடித்துக்கொண்டு சாப்பிடாமலும் தூங்காமலும் வீட்டையே சோகத்தில் ஆழ்த்தினாள்.

          "இந்த உலகில் எந்த பிறவியாக வேண்டுமானாலும் பிறக்கலாம் ஆனால் ஒரு பெண்ணாக மட்டும் பிறக்கவே கூடாது, ஒரு பெண்ணாக பிறந்தது முதலே பிரச்சினை துவங்குகிறது , என்ன குழந்தை? பெண் குழந்தையா? ச்சே! என்று பிறந்தவுடனே வெறுப்பும் வந்துவிடுகிறது, இளம் வயதில்  பாசமாகவும், மகிழ்ச்சியாகவும் பார்ப்பவர்கள் பருவ வயதுக்கு பிறகு பார்க்கும் பார்வையே வேறுபட்டதாக இருக்கிறது. அப்பா அம்மாவுக்கு கூட பெற்ற பிள்ளையின்மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. உண்மையை சொல்லப்போனால் பெண் குழந்தை என்றாலே எல்லாப் பெற்றோர்களும் ஒரு கடமையாகவே கருதி வளர்க்கிரார்கள் அதற்கு காரணம் இந்த சமுதாயம்தான். என்ன பாவம் செய்தேனோ இந்த ஜென்மத்தில் ஒரு பெண்ணாக பிறந்து இப்படி கஷ்டத்தை அனுபவிக்கிறேன். எப்படியாவது அப்பாவின் காலில் விழுந்தாவது கல்லூரி படிக்க சம்மதம் வாங்கிடனும். என்பதில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தாள். பிறகு இதையெல்லாம் சமாளிக்க அம்மாவாள் மட்டுமே முடியும் என்று அம்மாவின் பின்னால் சுற்றிச்சுற்றி வந்தாள். கெளரிக்கும் நன்றாகப் படிக்கும் தன் மகளை எப்படியாவது படிக்கவைத்துவிடவேண்டும் என்ற எண்ணமும் இருந்ததால், நிலாவின் பிடிவாத குணமும் நம்பிக்கையான வார்த்தைகளும் சேர்ந்து  கடைசியில் வென்றது. ஒரு வழியாக விடுதியில் தங்கிப்படிக்க சம்மதம் கிடைத்தது, அதுவும் தன்னுடைய தோழிகள் படிக்கும் கல்லூரியாகத்தான் இருக்கவேண்டும், இப்படி அப்படி என பல கண்டிஷன்களை கோபால் முன் வைத்தார் அதற்கெல்லாம் சம்மதம் என்றால் படிக்கலாம் இல்லை என்றால் வேண்டாம் எனவும் சொன்னார், எப்படியோ சம்மதம் கிடைத்ததே அதுபோதும் என எல்லா கண்டிஷங்களுக்கும் ஒத்துக்கொண்டாள்.

 நிலா தனது தோழிகளிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கொண்டாள் யார் யாரெல்லாம் வராங்க என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தாள். எந்த கல்லூரியில் படிக்கவேண்டும் என்பதையும் முடிவு செய்தாள். இவள் நுழைவுத்தேர்வு எழுதுவதால் தனியார் கலூரியிலேயே சேரமுடியும். சந்தோஷமாக தனது அப்பாவை அழைத்துக்கொண்டு  மதிப்பெண், மற்றும் மாற்று சான்றிதழ்களை வாங்க பள்ளிக்கு சென்றாள். அங்கு அப்பாவுக்கு நம்பிக்கை வருவதற்காக அவளுடைய தோழிகளை அறிமுகம் செய்துவைத்து அவர்களும் என்னுடன் கல்லூரி படிக்க வருகிறார்கள் என்பதையும் தெரிவித்தாள். அப்பா இவளுடைய தோழிகளிடம் பேசிக்கொண்டிருந்தப்போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது!

         "நிலா...ஐ லவ் யூ!"...........கையில் ஒரு காதல் கடிதத்தோடு!

         ஐயோ! ...........

தொடரும்....
(அறிமுகத்திலேயே அதிக வரிகள் போய்விட்டது, அடுத்த பாகத்தில் அலசல்!)

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

settaikkaran said...

நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க ஆகாஷ்! இரண்டு படங்களையும் கூட ரசனையோடு தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறீர்கள். :-)

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Post a Comment