Pages

Sunday, November 25, 2012

நாம் தமிழில்தான் பேசுகிறோமா? எழுதுகிறோமா? ஒரு அதிரடிப்பதிவு.

         நாமெல்லாம் தமிழ்தான் பேசுகிறோமா? எனபதில் சந்தேகம் வந்துவிட்டது. நான் கொஞ்ச நாட்களாகவே 'மரபு தமிழ் இலக்கணம்' என்கிற நூலைப் படித்துவருகிறேன். அதில் தமிழ் மொழியில் கலந்து கிடக்கும் பிறமொழிச் சொற்களைப் பற்றி விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை எழுதும்போதும், பேசும்போதும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தக்கூடாது என்றும், முடிந்தவரையில் தமிழ் சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் உள்ளது. அதைப்படித்து சற்று குழப்பமாக இருந்தபோதுதான் எனது தோழி   ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, அது எப்படி என்றால்?

                 "தமிழ்  மொழியில் வடமொழிச் சொற்களை தவிர்க்கவேண்டியது அவசியம்தானா? இது நன்மை கொடுக்குமா?" "

            இதுதான் கேள்வி. என் மனதிற்குள் மேலும் குழப்பம் கூடிவிட்டது. தமிழ்மொழியில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாமா? கூடாதா? இதைப்பற்றி தெரியாமல்  எழுதினால் படித்த புலவர்களும், கவிஞர்களும்  நம்மளை இழிவாக நினைப்பார்களா? ஒண்ணுமே தெரியாத இவனெல்லாம் எழுத வந்துட்டான்யா! "இனி தமிழ் மெல்ல மெல்ல முழுவதும் அழிந்துவிடும்" என்று சபித்துவிடுவார்களோ? என்ற பயம் வந்துவிட்டது.

            சரி முதலில் நமது 'ஐயத்தை' போக்கவேண்டும் என்று புறப்பட்டேன். நமது முன்னோர்கள் அவர்களின் எழுத்துகளில் பிறமொழிச்சொற்களை பயன்படுத்திருக்கிறார்களா இல்லையா எனப் பார்ப்போம் என்று சென்றபோதுதான். மேலும் ஒரு குழப்பம் வந்தது. முதலில் வடமொழிச் சொற்கள் எவை எவைகள் எனத்தெரிந்திருக்கவேண்டும் அப்போதுதானே மிக எளிதாக கண்டுப்பிடிக்கமுடியும்.

         யார்  யாரெல்லாம் என்னுடைய இந்த பயணத்தில் கலந்துகொள்ளப் போறீங்க?  வாங்க போவோம். தமிழ்ச்சொற்களில் கலந்துக் கிடக்கும் வடமொழிச்சொற்கள் எவை எவைகள் என்றும், அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா? அல்லது நீக்க வேண்டுமா? என்பதைப்பற்றி அலசுவோம்.

வடமொழிச்சொற்கள் மற்றும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் முறையே!

அக்கினி - தீ
அநியாயம் - முறைகேடு
அன்னியதேசம் - பிறநாடு
அபராதம் - குற்றம்
அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு
அர்ச்சனை - வழிபாடு
அற்பம் - சிறுமை
ஆகாயம் - வான், விண்
ஆச்சாரம் - நடத்தை,ஒழுக்கம்
ஆடம்பரம் - பெருமிதம்
ஆத்மா - உயிர்
ஆபத்து - இடுக்கண்
ஆசனம் - இருக்கை
ஆபரணம் - அணிகலன்
ஆரம்பம் - தொடக்கம்,கால்கோள்
ஆசை - விருப்பம்
ஆயுதம் - படை
இச்சை - விருப்பம்
இந்திரன் - வேந்தன்
இயந்திரம் - பொறி
இரகசியம் - மறை
இரசிகன் - சுவைஞன்
இராசா - வேந்தன், மன்னன்
இலகு - எளிமை
இலாபம் - ஊதியம்
உத்தியோகம் - வினை, தொழில்
உபதேசம் - அறிவுரை
உபத்தியாயன் - ஆசிரியன்.
உபமானம் - ஒப்புப்பொருள்.
ஐசுவரியம் - செல்வம்.
கதி - நிலை
கல்யாணம் - திருமணம்
கவி - பா. செய்யுள்
கவிஞன் - பாவலன்,புலவன்
களங்கம் - மறு
காகம் - காக்கை
கிரகம்-கோள்
கிரமம் - ஒழுங்கு
கிராமச்சங்கம் - ஊர்மன்றம்
கீர்த்தி - மிகுபுகழ்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
கோபம் - வெகுளி
இந்திரன் - வேந்தன்
சக்தி - ஆற்றல்
சத்தம் - ஒலி
சத்தியம் - உண்மை
சந்திரன் - திங்கள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நியாசி - துறவி
சமயம் - நெறி
சமீபம் - அண்மை
சம்பவம் - நிகழ்ச்சி
சங்கம் - அவை
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்.
சாட்சி - கரி
சாதம் - சோறு
சாமர்த்தியம் - திறமை
சினேகம் - நட்பு
சிந்தை - எண்ணம்
சிரத்தை - ஊற்றம், நாட்டம்
சுகம் - நலம்
சுத்தம் - தூய்மை.
சுயதேசம் - தன்னாடு
சூரியன் - ஞாயிறு.
சொப்பனம்  - கனவு.
சோதி - ஒளி.
ஞானம் - அறிவு.
தண்டித்தல் - ஒற்றுதல்.
தத்துவம் - உண்மை.
தரித்திரம் - வறுமை.
தர்க்கம் - சொற்போர்.
தவம் - நோம்பு.
தானதிகாரி - பொருளாளர்.
தாகம் - வேட்க்கை.
தாசன் - அடியான்.
தாரம் - மனைவி.
தானியம் - கூலம்.
தினம் - நாள்.
தெய்வம் - கடவுள்.
தேசம் - நாடு.
நகரம் - பட்டினம்.
நட்சத்திரம் - நாள், நாள் மீன்(விண்மீன்).
நாசம் - அழிவு.
நியாயவாதி - வழக்குரைப்போன்.
நிர்வாகசபை  - ஆட்ச்சிக்குழு.
நித்திரை - உறக்கம்.
நீதிபதி - முறைவேந்தன்.
பக்தி - அன்பு.
பரீட்சை - தேர்வு.
பத்திரம் - ஆவணம்.
பத்திரிகை - இதழ்.
பத்திராதிபர் - இதழாசிரியர்.
பாகம் - கூறு.
பாத்திரம் - கலம், தகுதி.
பிரகாசம் - ஒளி.
பிரசங்கம் - சொற்ப்பொழிவு.
பிரமசாரி - மாணி.
புராணம் - பழமை, பழங்கதை.
புதினப்பத்திரிக்கை - செய்தித்தாள்.
பூசை - வழிபாடு.
மந்திரி - அமைச்சன்.
மந்திரம் - மறைமொழி.
மாதம் - திங்கள்.
மாமிசம் - ஊன்.
முகூர்த்தம் - ஓரை.
முத்தி - வீடு.
மேகம் - முகில்.
மோட்சம் - வீடு.
வசனம் - உரை.
வருஷம் - ஆண்டு.
வாகனம் - ஊர்தி.
வாதி - வழக்காளி.
வாரம் - ஏழல்(ஏழு நாள் கொண்டது)
விசனம் - கவலை.
விதி - ஊழ்.
விஞ்ஞானம் - அறிவியல்.
விஷேசம் - சிறப்பு.
வித்தியாசம் - வேறுபாடு.
விமர்சனம் - திறனாய்வு.
வியாசம் - கட்டுரை.
வைத்தியர் - மருத்துவர்.
ஸ்ரீமான் - திருவாளர்.

யப்பா இப்பவே கண்ணை கட்டுதே! இன்னும் எவ்வளவோ இருக்கு, இப்ப சொல்லுங்க , நாம தமிழ்தான் பேசுகிறோமா???????
யாருப்பா அது பாதி பயணத்தில் இறங்கி போகிறது. விடாதிங்க! விடாதிங்க! பிடிங்க அவரை. 
உதரணங்களைப் பார்ப்போம்:
முதலில் மகாகவி பாரதியார் வரிகளைப் பார்ப்போம்: அதில் அவர் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறாரா? இல்லையா?

தெய்வப் பாடல்கள்

29. காளிப் பாட்டு

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்

ஞானப் பாடல்கள்

80. சிட்டுக் குருவியைப் போலே
 பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு                                (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு                                             (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.                                              (விட்டு)

அடுத்ததாகஅவையார் பாடலில்....

16. முத்தி காண்டல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - மில்லை
தகர வருக்கம்


55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. தூக்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒத்து வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொண்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்

வடமொழிச் சொற்களை, நமது சங்ககாலப் புலவர்களும், பாரதியார்,  அவையார் , இன்னும் பல கவிஞர்களும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இருந்தாலும் மிகக்குறைந்த சொற்களையே பயன்படுத்திருக்கிறார்கள் ஆகவே!. நாமும் நமது கதை - கட்டுரைகள், கவிதைகளில் பயன்படுத்துவோம். ஆனால் முடிந்தவரையில் வடமொழிச் சொற்கள்தான் என்று தெரிந்தால் அதற்குப் பதிலாக தமிழ்  சொற்களைப் பயன்படுத்துவோம்.

**********என்னோடு பயணித்து வந்த அனைவருக்கும் நன்றி.************
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.......



49 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

/// இன்னும் எவ்வளவோ இருக்கு, முடிந்தவரையில் வடமொழிச் சொற்கள்தான் என்று தெரிந்தால் அதற்குப் பதிலாக தமிழ் சொற்களைப் பயன்படுத்துவோம். ///

இன்றைய காலத்திற்கு சிரமம் தான்... இருந்தாலும் அவரவர் விருப்பம், எப்படி வேண்டுமானாலும் சொற்களைப் பயன்படுத்தட்டும்--->அடுத்தவர் மனம் நோகாதவாறு...

/// "இனி தமிழ் மெல்ல மெல்ல முழுவதும் அழிந்துவிடும்" என்று சபித்துவிடுவார்களோ ? ///

இது போல் நல்ல ஆய்வுகள் தொடர... இந்தாருங்கள் சாபம்... தொடர வாழ்த்துக்கள்... (சாபம் உண்மையா ? பொய்யா ? - ஆய்வுகள் தொடரலாம்...) இஇ (ஹிஹி) ஆஅ ஆஅ (ஹா ஹா)

நன்றி...

முத்தரசு said...

ஆத்தீ (இது தமிழ் சொல்லா??)

என்னை நானே சோதிக்கனுமோ??? அது சரி இம்புட்டு சொற்கள் கலந்து விட்டதா..

Unknown said...

.// நாமும் நமது கதை - கட்டுரைகள், கவிதைகளில் பயன்படுத்துவோம். ஆனால் முடிந்தவரையில் வடமொழிச் சொற்கள்தான் என்று தெரிந்தால் அதற்குப் பதிலாக தமிழ் சொற்களைப் பயன்படுத்துவோம்//.இப்பவுள்ள காலத்தில் கொஞ்சம் கஷ்டம் தான்.. எது வடமொழி எது நம்ம மொழி எதுனு கூட தெரியாத அளவுக்கு நிறைய வார்த்தைகள் நாம் பயன்படுத்துகிறோம்.. இனி முடிந்த வரை மாற்ற முயற்சி செய்வோம்.. பகிர்வுக்கு நன்றி..

குழந்தைகளுக்கான ஓவிய போட்டி எனது வலைப்பூவில் kids-drawing-contest-win-cash-prizes more details:

http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html

Anonymous said...

Thangaludaiya muyarchikku valthukkal...

aanaal ungaludaiya peyaril 'agash' ullathey?. 'sh' yenbathu vada moli eluthu allava?

rajamelaiyur said...

தமிழ்நாட்டில் நீங்க தமிழ் வாத்தியாராக இருக்கலாம் . ( பல தமிழ் வாத்தியாருக்கு இந்த செய்தி தெரியாது )

semmalai akash said...

வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி அண்ணா.

பாரதிதாசன் அவர்களின் சில கவிதைகளையும், பாடல்களையும் பார்த்தேன்,அப்படியே ஆச்சரியப்பட்டுவிட்டேன். அதில் ஒரு வடமொழிச் சொற்கள்கூட இல்லை, அருமையான தமிழ், இது பெரிய சிரமம் இல்லை என்று நினைக்கிறேன், நாம் முயற்சி செய்தால் ஓரிரு நாளில் பழகிடலாம்.,ஹா ஹா ஹா!!

சொல்ல எவ்ளோ எளிமையா இருக்கு...

சரி அதையும் ஆய்வு செய்துடுவோம்.

semmalai akash said...

ஹா ஹா ஹா ,

அவையார் அம்மா அப்படிதான் சொல்லிருக்காங்க... இன்னும் இருக்கிறதாம்,
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

நீங்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் சகோ! அங்கிருந்துதான் தமிழை காப்பாற்ற முடியும்.:-)))))))

நம்மில் அதிகம் கலந்துவிட்டது என்று சொல்லவந்தேன்.

ஒ! அப்படியா இதோ சென்று பார்க்கிறேன்.
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ!

semmalai akash said...

வடமொழி சொற்கள் என்றால் இதுபோல் உள்ள எழுத்துகள் மட்டும் கிடையாது நண்பரே! கட்டுரையை நன்றாக படியுங்கள் நிறைய சொற்களை உதாரணமாக கொடுத்துள்ளேன். ஆகாஷ் என்பதை தமிழில் ஆகாசு என்றே அழைப்பார்கள்.

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ஹா ஹா ஹா , நான் துபையில் குப்பை கொட்டுகிறேன் நண்பா, எனக்கே தமிழ் சரியாத் தெரியாது. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா எழுதிப் பழகுகிறேன்.


உங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

Unknown said...

ரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க ஆகாஷ்
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

//நான் துபையில் குப்பை கொட்டுகிறேன் நண்பா//


குப்பை கொட்டுவதற்காக துபை வந்தீர்களா ?
ரொம்ப பெரிய ஆளு தான் நீங்க

ஆத்மா said...

என்னா சாரி இது.....
இந்த சொல்லையெல்லாம் கதை கட்டுரையில் பயன்படுத்தினா ஜனங்க மிரண்டிடுவாங்க இல்ல.....
அப்பிடித்தான் நினைக்குறேன்

பல சொற்கள் அடியேனும்முப் புதிது பகிர்வுக்கு நன்றி

PNA Prasanna said...

நண்பரே, நீங்கள் துபாயில இருக்கறதனாலதான் இதெல்லாம் நினைவில வச்சிருக்கிங்க.

இங்க தமிழ்நாட்டிலயே இருந்திருந்தா எல்லாத்தையும் மறந்திருப்பிங்க.

சம்பளம் - ஊதியம்
இலாபம் - ஏற்பு
என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தெய்வமே! இதே தமிழ்ச்சொல் இல்லையா?
கடவுள்தான் என்னைக் காக்கவேண்டும்.
இதில் தெரிந்து தவறு செய்வதில்லை. பல தெரியாமல் தான் நடக்கிறது.
முயற்சி செய்வோம்.

பல ஆண்டுகளுக்கு முதல் சிலர் இதைச் செய்தார்கள், இப்போ அவர்கள் எவருமே பதிவிலகில் இல்லை.

பிரசங்கம் - சொற்ப்போழிவு.... இதைச் சொற்பொழிவு என மாற்றவும்.

வே.நடனசபாபதி said...

நல்ல முயற்சி. நமது குழந்தைகளிடம் (கூடியவரையில்) வேற்று மொழி கலக்காமல் பேசினாலே தமிழ் வாழும்.

ப.கந்தசாமி said...

ஆங்கிலம் உலகளாவிய மொழி. அவர்கள் இந்த வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. வழக்கில் புழங்கும் அனைத்து மொழி வார்த்தைகளையும் தங்களுடையதாக்கிக் கொள்ளுகிறார்கள். அந்த மொழி அழிந்து விடவில்லை. மாறாக மிக வலுவாக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இன்றைய கணினி யுகத்தில் பல புது வார்த்தைகள் உபயோகத்தில் வந்து விட்டன. ரயில்வே ஸ்டேசன் என்றால் எளிதில் புரிகின்றது. புகைவண்டி நிலையம் என்றால் பாமர ஜனங்கள் எவ்வளவு பேருக்குப் புரியும்?தனித்தமிழ் கொள்கை வேண்டுமா என்று யோசிக்கவேண்டும்?

சிந்தையின் சிதறல்கள் said...

அற்புதமான படைப்பு உண்மையில் தலை சுற்றுகிறது நாம் பயன்படுத்துவது தமழ்தானா என்று சந்தேகமே வருகிறது இன்னொருவிடயம் தமிழை பயன்படுத்தினால் விளக்கமும் தரவேண்டிய தேவையும் ஏற்படும் என்று நினைக்கிறேன் அறிமுகமே அற்ற தமிழ் சொற்கள் இருக்கிறது தொடருங்கள் மிக்க நன்றி

சசிகலா said...

உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் கற்றது கைமண்ணளவு எவ்வளவு உண்மை பாருங்கள். தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிங்க தாங்கள் சொல்வது போல குழந்தைகளிடமிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும் . பகிர்வுக்கு நன்றிங்க. தொடருங்கள்.

வேகநரி said...

நீங்க ஒரு தமிழ் பேராசிரியர்.
இரண்டு வரி தமிழில் எழுதிவிட்டு மூச்சு வாங்குபவன் நான்.
வடமொழிச்சொற்கள் மற்றும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்று நீங்கள் தந்தவை பலருக்கு உதவியாக இருந்தது .அது மாதிரி சரியான தமிழ்ச்சொற்கள் எவை என்பதை நீங்க தொடர்ந்து சொன்னா உதவியாக இருக்கும். அதே நேரம் பெரியவர் பழனி கந்தசாமி ஐய்யாவின் கருத்தை நாம் கவனத்தில் எடுத்துகொள்வது அவசியம்.

அது சரி தமிழ்நாட்டு தொலைகாட்சிகளில் வரும் தமிழ் அறிவிப்பாளர்களின் ஆங்கிலம் கலந்து பெருமை அடிப்பதை முதலில் நிறுத்துவது நல்லது. இது மிக அசிங்கமானது.
சாதம் - சோறு இலங்கை தமிழர்கள்கள் எப்போதும் சோறு என்றே சொல்வார்கள்.

semmalai akash said...

ரொம்ப நன்றி நண்பா. கண்டிப்பா தொடர்ந்து எழுதுகிறேன்.

semmalai akash said...

இதில் என்ன உண்மை என்றால், இதுதான் தமிழ் சொற்கள், இதுதான் வடமொழிச் சொற்கள் என்று ஜனங்களுக்கு (இதுவும் வடமொழிச்சொல்) மக்களுக்கு முதலில் தெரிந்திருக்கவேண்டுமே? தமிழ் எழுத்தாளர்களை பார்த்தால் ஒரு சிலரே சுத்த தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்திருக்கிரார்கள். மற்றவர்கள் வடமொழிச் சொற்களையும் தெரிந்தோ-தெரியாமலோ பயன்படுத்திருக்கிரார்கள்.

நாமும் அப்படி பயன்படுத்தினால் பெரிய தவறு ஒன்றும் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. இருந்தாலும் தமிழ்ச் சொற்க்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை அவ்வப்போது நமது கதை, கட்டுரையில் பயன்படுத்தவேண்டும்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.

semmalai akash said...

ஹா ஹா ஹா ,

நீங்கள் சொல்வதில் பெரிய உண்மை மறைந்திருக்கிறது நண்பரே, தாயைப் பிரிந்த பிறகுதான் தாயின் அருமைத் தெரியும், அதேபோல் தாய்நாட்டையும், தாய்மொழியையும் பிரிந்து நிற்கும்போதுதான் தமிழின் தாகம் கூடுகிறது.

நண்பா சத்தியமா எனக்கும் தமிழ் தெரியாது.

உங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே!

semmalai akash said...

ஆமாம், கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மை, யாரும் தெரிந்தே தவறு செய்ய யோசிப்பார்கள், அதுபோல் தமிழ்மொழியின் மீது ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களும் அப்படிதான் தெரிந்தே தவறுகளை செய்யமாட்டார்கள். இதெல்லாம் பழக்கத்தில் வந்து ரொம்ப நாட்களாகி விட்டது.

ஆஹா! பார்த்தீர்களா? தவறை சரியாக கண்டுப்பிடித்து விட்டீர்கள். கண்டிப்பாக மாற்றி விடுகிறேன்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ!.

semmalai akash said...

ஆமாம் ஐயா,

உங்களுடைய முதல் வருகைக்கும், அழகான கருத்துகும் மிக்க நன்றி ஐயா.

semmalai akash said...

ஆமாம் ஐயா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் நாவலில் இதுபற்றி விரிவாக எழுதி இருக்கிறார். அதாவது இப்போதுள்ள ஆங்கில சொற்களுக்கு டிஸ்னரியில்கூட அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு, ஆங்கிலத்தில் பிறமொழிச் சொற்கள் கலந்துவிட்டதாக தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். முடிந்தால் அதையும் எடுத்து பகிர்கிறேன். அவரவர்கள் மொழிகளில் அவரவர்களுக்கு மிகுந்த அக்கரையும் ஆர்வமும் இருக்கிறது ஐயா.

இதெல்லாம் மக்களுக்கு சாதரணமாக இருக்கலாம், நாமெல்லாம் எழுத்தாளர்கள் நமக்குத்தான் புரியும், நாம் இன்று எழுதும் எழுத்துகள், நாளைய இளைஞர்களின் எதிர்காலம், அதனால் அவர்களை தவறான பாதையில் கொண்டுசெல்லாமல் இருப்பது நமது கடமையும்கூட.

வருங்கால இளைஞர்கள் ஆங்கிலமும் படித்திருப்பார்கள், அவர்கள் ஆங்கிலம் பேசவேண்டிய இடத்தில் கண்டிப்பாக ஆங்கிலமே பேசுவார்கள். நாம் லண்டன் சென்று புகைவண்டி நிலையம் என்று சொன்னால் அது தவறு, நமது தாய்நாட்டில் தமிழில் பேச என்ன தயக்கம். பேசித்தான் பார்ப்போமே! நமக்கு ஆங்கில சொற்கள் தெரியாமல் தமிழில் பேசவில்லையே தமிழ்மீது உள்ள பற்றால்தானே.

"மதர்" என்று சொல்வதைவிட "அம்மா" என்றச்சொல் எவ்வளவு இனிக்கிறது. இதில் அன்பும், பாசமும், உணர்வுகளும் கலந்துகிடக்கிறது ஐயா.

அதேபோல் உங்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

semmalai akash said...

ஆமாம் நண்பரே, இனிவரும் எதிர்காலத்துக்கு தமிழ் சொல்களுக்குகூட விளக்கம் சொல்லும் காலம் வரும் என்றுதான் தோன்றுகிறது.

உங்களுடைய முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

ஆஹா! வாங்க வாங்க உங்களுடைய வரவு, எனக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. நீங்க சொல்வது உண்மை, நாம் "கற்றது கையளவு" தான், இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

உங்களுடைய முதல் வருகையும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ!.

semmalai akash said...

######அது மாதிரி சரியான தமிழ்ச்சொற்கள் எவை என்பதை நீங்க தொடர்ந்து சொன்னா உதவியாக இருக்கும்.#####

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் நண்பரே!
#####அதே நேரம் பெரியவர் பழனி கந்தசாமி ஐய்யாவின் கருத்தை நாம் கவனத்தில் எடுத்துகொள்வது அவசியம். ####
கண்டிப்பாக.எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!.

உஷா அன்பரசு said...

தொலை பேசி எடுத்தவுடன் எத்தனை பேர் வணக்கம் ஐயா.. நான்_________ பேசுகிறேன். என்று ஆரம்பிப்போம்?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தொலை பேசி எடுத்தவுடன் எத்தனை பேர் வணக்கம் ஐயா.. நான்_________ பேசுகிறேன். என்று ஆரம்பிப்போம்?//

ஐரோப்பாவில் வாழும் இலங்கைத் தமிழரிடையில் சுமார் 15 ஆண்டுகளாக இப்பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

semmalai akash said...

ஆஹா! இது நல்லாருக்கே! முயற்சி செய்யலாம் சகோ!

தொடர்ந்து உங்களுடைய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ

semmalai akash said...

அப்படியா!
நல்ல பழக்கம், வாழ்த்துகள்.

Anonymous said...

நல்ல பதிவு 100 ஆண்டுகளுக்கு முன் வந்த நாவலைப் படித்தால் ஒன்றுமே புரியாது, அவ்வளவு வடமொழிச் சொற்கள் தமிழில் இருந்துள்ளது. இன்று குறைந்துவிட்டது, முயன்றால் மேலும் குறைக்கலாம். உங்கள் பதிவு முன்னுக்கு வருகின்றது போல, கலக்கல்.

Balaji said...

நிறைய தகவல்களை நன்றாக தொகுத்திருக்கீங்க தம்பி....

வாழ்த்துகள்....

முத்தரசு said...

தங்களின் இப் பதிவை மின்னஞ்சல் மூலம் நண்பர்களுடனும் - மற்றும் முகநூலிலும் பகிர்ந்து கொள்ளலாமா?

semmalai akash said...

கண்டிப்பாக பகிர்ந்துக்கொள்ளுங்கள் நண்பரே. நன்றி.

semmalai akash said...

ஹீ ஹீ ஹீ !!

ரொம்ப நன்றி அண்ணா.

semmalai akash said...

இருக்கலாம் நண்பரே, ஆனால் பாரதிதாசன் அவர்களின் பாடல்களை படித்தால் அதில் வடமொழிச்சொற்களே காணமுடியவில்லையே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

பட்டிகாட்டான் Jey said...

உங்கள் சேவையை தொடருங்கள் தோழரே. உங்களுடன் நாங்களும் பயணம் செய்கிறோம் :-)))

தினபதிவு said...

மிக அருமையான சேவையை தொடருங்கள்
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

semmalai akash said...

வருக வருக நண்பரே!
உங்களுடைய முதல் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! கண்டிப்பாக தொடர்கிறேன்.

Robert said...

எவ்வளவோ வடமொழி சொற்களை தமிழ் என்று நினைத்து பயன்படுத்தி உள்ளேன். எவைஎவை தமிழ் சொற்கள் என்று நமக்கே தெரியவில்லை. மிகவும் அவசியமான பதிவுதான். தொடருங்கள்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இது நல்ல முயற்சிதான்.

ஆயினும் ஒரு சிறு தகவல். பாரதியார் (மற்றும் ஔவையார்) காலத்தில் வடமொழி ஆதிக்கம் மிகுந்திருந்தது.

மணிப்பிரவாள நடையில் எழுதுவதான் கற்றறிந்தவர்களின் எழுத்தாக மதிக்கப் பட்டது.

ஔவையார் காலத்தில் தமிழை வளர்க்க பக்தி இயக்கமும், பாரதியார் காலத்தில் தனித்தமிழ் இயக்கமும் முனைந்து பணியாற்றின.

ஆனால் இன்று 'பண்ணு' தமிழும், தமிங்கிலமும் புற்றீசல் போல வளர்ந்து கொண்டிருக்கிறது. 'என்ன பண்ணிட்டிருக்கே, கோர்ஸ் பண்ணிட்டிருக்கேன்..

உலகில் எந்த மொழியில் தன்னுடைய மொழியைத் தப்பும் தவறுமாக எழுத எவருமே நாணுவார்கள்; தமிழர்கள் மட்டுமே பெருமையுடன் அதைச் செய்கிறார்கள். !!!!!

வெற்றி said...

நல்ல முயற்ச்சி. பயனுள்ள பதிவு. படித்துப் பயனடைந்தேன். மிக்க நன்றி.

சில ஐயப்பாடுகள் (சந்தேகங்கள்):

1. கிரகம்- கொள்
'கொள்' ? கோள்? எமது ஊரில் (ஈழத்தில்) கோள் என்று சொல்லித்தான்
கேள்விப்பட்டிருக்கிறேன். 'கோள் என் செயும்' என ஒரு சைவப் பாடலும்
கேள்விப்பட்டிருக்கிறேன். ஆக நீங்கள் 'கொள்' எனக் குறிப்பிட்டுள்ளது தவறுதலாக
நடந்த எழுத்துப் பிழையா? அல்லது 'கொள்' தான் சரியான சொல்லா?

2. தவம் - நோம்பு
'நோம்பு' ? 'நோன்பு' நோன்பு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். நோன்பா
அல்லது நோம்பா சரியான சொல்?

3. இந்திரன் - வேந்தன்
இந்திரன் தமிழ்ச் சொல் இல்லையா? வள்ளுவர் கூட இந்திரன் எனும் சொல்லைப்
புழங்கியுள்ளாரே? அப்படியாயின் வள்ளுவர் காலத்திலேயே வடமொழிச் சொற்கள்
தமிழில் புழங்கும் வழக்கம் துவங்கிவிட்டதா? இதோ அக்குறள்:

'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி'

4. தெய்வம் - கடவுள்
தெய்வம் எனும் சொல்லையும் வள்ளுவர் புழங்கியுள்ளாரே?!

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்'

வீம்புக்காகவோ அல்லது விதண்டாவாதத்திற்காகவோ கேட்கிறேன் என்று
தயவு செய்து எண்ண வேண்டாம். அறிய வேணும் எனும் ஆவலில்
கேட்கிறேன். 'தெய்வம்', இந்திரன் போன்ற சொற்கள் வடமொழிச் சொற்கள்
என எந்த ஆதாரத்துடன் சொல்கிறீர்கள்?

5. நீங்கள் மேலே பட்டியலிட்டுள்ள சில சொற்களுக்கு முந்தி எனது ஊரில் நான்
கேள்விப்பட்ட இணையான சொற்கள். இச் சொற்கள் தமிழா அல்லது வடமொழியா
என நான் அறியேன்.

வாரம் -- கிழமை
பரீட்சை - சோதனை
விசனம் - துக்கம்
நியாயவாதி - அப்புக்காத்து (வழக்கறிஞர்)

நன்றி.

semmalai akash said...

மிக்க நன்றி நண்பரே!

semmalai akash said...

அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த பாரதிதாசன் , மிகவும் இயல்பாக தமிழ் சொற்களையே பயன்படுத்தி இருக்கிறார். ரொம்ப நன்றி நண்பர்!

semmalai akash said...

அருமை சகோ!

"கொள்" என்று எழுதியது எனது எழுத்துப்பிழையே, அதை மாற்றிவிடுகிறேன். தவம் - நோன்பு , என்றுதான் சொல்லவேண்டும், சிலர் உச்சரிப்பில் மாற்றம் இருப்பதால் நோம்பு என்று சொல்கிறார்கள்,இதுவும் பிற மொழிச் சொற்களே ஆகும்.

உண்மையை சொல்லப்போனால் திருவள்ளுவரும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும், ஆனால் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே, ஒரு பாடலில் ஏதோ ஒரு புலவர், இப்படிப்பட்ட விவாதத்தில் சொன்னாராம் ஐயனே வடமொழிச் சொற்களை பயன்படுத்தி இருக்கிறார் என்று, அதை மறுப்பதற்கில்லை, தமிழ் மரபு என்கிற நூல் மூலம் இந்த வார்த்தைகளை இங்கு பகிர்ந்துள்ளேன். சரியான தமிழ் வார்த்தைகள் இதுதான் என்று பல புலவர்கள் சேர்ந்து எடுத்த முடிவுதான்.

உங்களுக்கான விளக்கம் சொல்ல நிறைய இருக்கிறது, முடிந்தவரை எனது அடுத்த பதிவில் சொல்கிறேன், அதுவரை பொறுமை காக்கவும். நான் எல்லாம் அறிந்த அறிஞன் இல்லை, நானும் தமிழில் தத்திகுத்தி எழுகிறேன். எல்லாம் படித்தவைதான் பழைய நூல்களை படித்தால் இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு விடை தெரியும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வெற்றி said...

விளக்கத்திற்கு நன்றி.

Post a Comment